Published:Updated:

``குழந்தைங்க அழுகையால என் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துறேன்"- ஆசிரியை மகாலட்சுமி!

mahalakshmi, teacher
mahalakshmi, teacher

ஆசிரியை மகாலட்சுமி தனது போராட்டதை நிறுத்தியது குறித்து வீடியோவில் பேசியிருக்கிறார்.

கல்வி உரிமைச் சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி எனும் அம்சத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தம் காரணமாக சென்ற மார்ச் மாதம் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்ற நிலையானது. ஆனால், தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை குறித்து மாநில அரசு தீர்மானித்துக்கொள்ளலாம் என்றிருந்தது. தமிழகத்தில் தேர்வு வராது என்று முன்பு கூறப்பட்ட நிலையில் மாற்றம் வந்து, சில நாள்களுக்கு முன், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு இதன் முடிவுகளைப் பொறுத்துத் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

மகாலட்சுமி
மகாலட்சுமி

இது மாணவர்களின் கல்விக்கு எதிரானது. மேலும், இடைநிற்றலை அதிகரிக்கும். எனவே, இந்த அரசாணையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி பல கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை ஜமுனா மரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, இந்த அரசாணையைத் திரும்பப் பெறும்வரை உண்ணாவிரதம் என முகநூல் வழியே அறிவித்தார். அதன்படி நேற்று காலை தொடங்கியது அவரின் போராட்டம். இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வு நடைபெறாது. இப்போதுள்ள நிலையே நீடிக்கும் என்று கூறியிருந்தார்.

உண்ணாவிரதத்தில் இருந்த ஆசிரியை மகாலட்சுமியிடம் அவரின் நண்பர்கள், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர். உண்டு உறைவிடப் பள்ளி என்பதால், அங்கேயே தங்கியிருக்கும் மாணவர்கள், ஆசிரியை மகாலட்சுமியின் உடல்நிலை சோர்ந்துபோவதைப் பார்த்து அழத்தொடங்கினர். இதையொட்டி, அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ``குழந்தைகள் மீதான பெரும் வன்முறை 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது. இந்த அரசாணையைத் திரும்பப் பெறச் சொல்லியே உண்ணாவிரதம் இருந்தேன். இதில் என் மாணவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் நேற்றிலிருந்து மாணவர்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏதோ ஓர் அவசரத்தில் எடுத்த முடிவாக இந்தத் தொடர் போராட்டத்தை நான் அறிவித்திடவில்லை.கடந்த கல்வியாண்டில் இதே கல்வித்துறை 5...

Posted by Maha Lakshmi on Tuesday, September 17, 2019

மாணவர்களின் குரலாக நான் ஒலிக்க வேண்டும் என்றுதான் போராட்டத்தில் இறங்கினேன். எனக்கு ஏதாவது ஆகிடுமோ என நினைத்து அழுதுகொண்டே இருந்தார்கள். அதனால், என் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவிவருகிறது. 

அடுத்த கட்டுரைக்கு