Published:Updated:

கற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்!

பேராசிரியர் வே.வசந்தி தேவி, முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

பிரீமியம் ஸ்டோரி

கல்வியில், 191 நாடுகளில் இந்தியா 145-வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியக் கல்வியில் பெரும் மாற்றங்கள் தேவை என்பது, பல காலமாக உணர்ந்து பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட தேசிய வேதனை. ஆனால், இந்தக் கல்விக்கொள்கை அதற்குத் தீர்வாகத் தோன்றியிருக்கிறதா அல்லது பூதமாகக் கிளம்பியிருக்கிறதா என்பதுதான் கேள்வி.

பெரும்கனவுகளைக் கடைவிரிக்கிறது இந்தக் கொள்கை. ஆனால், அவற்றை எட்டுவதற்கான பாதை அமைக்கத் தவறுகிறது. கல்வியை ஒரு படி மேலே ஏற்றுவதற்கு, நிதி ஒதுக்கீட்டைப் பல மடங்கு உயர்த்த வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லை. பட்ஜெட்டின் மொத்த செலவினத்தில் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 2016-17ல் 2.2 சதவிகிதமாக இருந்தது. 2019-20ல் அது 2.03 சதவிகிதமாகவும் அதில் உயர்கல்விக்கானது 1.6 சதவிகிதத்திலிருந்து 1.38 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. இந்தக் கல்விக்கொள்கைக்கான எதிர்ப்பை மூன்று C-க்களில் சொல்லலாம். Centralisation, Commercialisation, Communalisation. மையப்படுத்தல், வணிகமயமாதல், மதமயமாதல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்தியில் அதிகாரக் குவிப்பு, மாநில சுயாட்சி ஒழிப்பு!

பல தேசிய இனங்களின் இணைப்பான, பன்முகச் செழுமைகொண்ட இந்திய நாட்டுக்கு ஒரே கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ள இயலாதது. உலகின் எந்த வளர்ந்த நாட்டிலும் நாடு முழுமைக்கும் மத்தியப்படுத்தும் ஒரே கல்விக்கொள்கை கிடையாது. சொல்லப்போனால், வளர்ந்த நாடுகளில் கல்விதான் மிக அதிகமாக அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நிர்வாகப் பிரிவு. அங்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமளவு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரக் குவிப்புக்கு என்றே கல்வியின் அனைத்துப் பிரிவுகளையும் கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளன. பிரதமரைத் தலைவராகக்கொண்ட ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் தொடங்கி தேசிய கல்வி ஆணையம், தேசிய தேர்வாணையம், பொதுக்கல்வி நிறுவனம், உயர்கல்வி நிதி நல்கை ஆணையம், தேசிய ஆய்வு நிறுவனம், தேசிய உயர்கல்விக் கட்டுப்பாடு நிறுவனம்... இன்னும் பல. மேற்கண்ட நிறுவனங்களில் ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக்தான் இந்திய கல்வியின் உச்ச அதிகாரம் பெற்ற நிறுவனம். அதுவே, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இறுதி அதிகாரம்கொண்டது. அதுவே மாநில அரசுகளுக்கு கல்வித் திட்டத்தை உருவாக்கித் தரும். கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும்; கட்டுப்படுத்தும்; தேர்வு நடத்தும். பட்டம் அளிக்கும் அதிகாரங்கள்கூட மாநில அரசுக்குக் கிடையாது. கூட்டாட்சியை அழித்தொழிக்கும் முயற்சி இது.

உயர்கல்வி நிறுவனங்களுக்குள் காலடி எடுத்துவைக்க வேண்டுமெனில், அது மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இயலும். இனி இளங்கலை உள்பட உயர்கல்வியின் எந்தப் பிரிவாக இருந்தாலும் நாடு முழுவதற்கும் ஒரே தேர்வாக மத்திய அரசின் National Testing Agency நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் இடம்பெற முடியும். மாநிலப் பாடத்திட்டங்களின் பள்ளி இறுதித் தேர்வுகள் தேவையற்றவையாகிவிடும். நீட் போன்று மத்தியில் நடத்தப்படும் இந்தக் கட்டாய நுழைவுத்தேர்வுகள், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். இனி உயர்கல்வி முழுவதுமே வசதியுள்ளவர்களுக்கு உரியதாகி ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

தனியார்மயமும் வணிகமயமும்!

`தனியார் துறை, லாப நோக்கில் இயங்காத துறையாக விளங்கும்’ என்று இந்தக் கொள்கை சொல்கிறது. அதற்கு என்ன உத்தரவாதம்? ஏற்கெனவே, தனியார் கல்வி நிறுவனங்களின் கேட்பாரற்ற கொள்ளை வெட்டவெளிச்சம். தனியார் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு மாறாக, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரமும் அதிகாரங்களும் அளிக்கப்படுகின்றன. கூடவே `தனியார் கல்வி நிறுவனங்கள், சேவை மனப்பான்மைகொண்டு ஒளிரும்’ என்று சொல்கிறது வரைவு. இது யாரை ஏமாற்றும் வேலை? இன்றைய மத்திய அரசின் ஆதாரக் கொள்கையான தாராளமயத்தின் வெளிப்பாடே இது.

கற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்!

பள்ளிக் கல்விக்கான கொள்கை மாற்றம் 3 வயதிலிருந்து 18 வயது வரை நீள்கிறது. இன்று பள்ளிக் கல்விக்கான ஆதாரச் சட்டமான கல்வி உரிமைச் சட்டம் - 2009, 6 வயதிலிருந்து 14 வயது வரைக்கான கல்வியை மட்டுமே வரையறுக்கிறது. அது 3 வயதிலிருந்து 18 வயது வரை விரிவுபடுத்தப்படும் என்று இந்தக் கொள்கை சொல்கிறது. இது வரவேற்கத்தக்கது. பல காலமாக எழுப்பப்பட்டுவரும் கோரிக்கை நிறைவேறுகிறது.

அதேசமயம் இந்தக் கொள்கை, சட்டத்தின் வரைவுகளை மோசமாக நீர்த்துப்போகச் செய்கிறது. அது, நிர்ணயித்திருக்கும் தர வரைவுகள், ஒரு பள்ளிக்கான உள்கட்டமைப்பு, ஆசிரியர் தேவை போன்ற அடிப்படைகளைக் கேள்வியாக்குகிறது. ஒரு பள்ளி நிறுவுவதற்கும் நடத்துவதற்கும் எந்த வரையறைகளும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பள்ளியை நிறுவலாம், நடத்தலாம். இன்று நாடு முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கிறது. குறைந்தது பத்து லட்சம் ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறார்கள். இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, போர்க்கால நடவடிக்கையாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அதை விடுத்து, தன்னார்வத் தொண்டர்கள் அரசுப் பள்ளிகளின் ஏழைக் குழந்தைகளுக்கு ஆசான்களாகப் பணிபுரிவர் என்பது தேவையற்றது.

இந்தித் திணிப்புக்கு தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ‘இந்தி திணிக்கப்பட மாட்டாது; மும்மொழிக் கொள்கை தொடரும்’ என்கிறது கல்விக்கொள்கை. அப்படியெனில், தமிழ்நாட்டுக்கு விதிவிலக்காக இரு மொழிக்கொள்கை இல்லை. மூன்றாவது மொழி கற்க வேண்டும் என்றால், அது இந்தியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்கும் ஆசிரியர் நியமனத்துக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் மற்ற மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர் நியமனத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆகவே, இந்தியை நாடு முழுவதும் பரப்புவதுதான் குறிக்கோள் என்பது தெளிவு.

தனியார் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு மாறாக, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரமும் அதிகாரங்களும் அளிக்கப்படுகின்றன.

பள்ளிக் கல்வியில் கொண்டுவரப்படும் கண்டனத்துக்குரிய மற்றொரு மாற்றம், 3, 5, 8 வகுப்புகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுகள் எழுத வேண்டும் என்பது. 9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை தனித்தனிப் பாடங்கள் தொடர்பான 24 தேர்வுகள் வரை எழுத வேண்டும். இவையெல்லாம் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான தரம் நிர்ணயிக்க உதவும் என்கிறது கல்விக்கொள்கை. உலகெங்கும் பல நாடுகளில் பொதுத்தேர்வுகள் என்பதே அறியாத ஒன்று. வகுப்பு ஆசிரியர்கள்தான் மாணவர்களின் திறனை மதிப்பிடுகிறார்கள். பின்தங்கிய மாணவர்களிடம் தனிப்பட்ட கவனம் செலுத்தி, திறன்களை அடையச் செய்கின்றனர். உலக நாடுகளின் தரத்துக்கு இந்தியாவை உயர்த்தப் போகிறோம் என்று மார்தட்டும் மத்திய அரசு, அவர்களின் கல்வி முறையிலிருந்து முரண்படுவது நகைமுரண்!

எட்டாக்கனியாகும் உயர்கல்வி!

கல்விக்கொள்கை வரைவு ‘உயர்கல்வி பெறும் மாணவர் எண்ணிக்கை 50 சதவிகிதமாக உயரும்’ என்கிறது. இன்று இந்தியாவில் உயர்கல்வியில் சேர்வோர் விகிதம் 25.8 சதவிகிதம்தான். சீனாவில் 51 சதவிகிதம். வளர்ந்த நாடுகளில் இது

80 சதவிகிதத்துக்கும்மேல். இது எப்படி அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கு ஆகப்போகிறது? இதுவரை உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய முடியாமல் ஏங்கும் அந்த 75 சதவிகிதத்தினர் யார்? நம் சமுதாயத்தில் காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டவர்கள், பட்டியலின, பழங்குடியின, மிகவும் பின்தங்கிய, சிறுபான்மை இனங்களைச் சார்ந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான். ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களில் 12-ம் வகுப்பு முடிப்பவர்கள், எஸ்.டி-யில் 6 சதவிகிதம்; எஸ்.சி-யில் 8 சதவிகிதம்; சிறுபான்மையினரில் 9 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோரில் 10 சதவிகிதம் மட்டுமே. இவர்களிலிருந்து ஒரு பகுதியினர்தான் உயர்கல்வி பெறும் தகுதியை இன்று பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் உயர்கல்வி பெற வேண்டுமெனில், அது முழுவதும் இலவசமாகக் கிடைத்து, ஊக்குவிப்புகளும் இருந்தால்தான் சாத்தியம். அதற்கு இந்தக் கல்விக்கொள்கை காட்டும் வழி என்ன? பெரும்பாலானோரை வடிகட்டி வெளியே தள்ளும் நுழைவுத்தேர்வுகள், சந்தைப் பொருளான கல்வி அமைப்புதான் இதில் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் விடுபட்டவர் இணைவதற்கான வழி எங்கே?

இத்துடன், 2030-க்குள் 500 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மேளதாளத்துடன் வரவேற்கப்படவிருக்கின்றன. நாட்டில் ஏற்கெனவே இருக்கும் 800-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகளையும் செழுமைபடுத்துவதற்கு பதில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு எதற்கு?

இறுதியாக வேறொரு வகைப்பட்ட தாக்குதல்கள். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற பெரும்பான்மைவாதத்தைப் புகுத்தும் முயற்சி தலைதூக்குகிறது. ‘இந்தியப் பாரம்பர்யம்’, ‘இந்திய மையம்கொண்ட’, ‘இந்திய கல்வியின் பழம்பெரும் மகோன்னதம்’ ஆகிய சொற்கள் வரைவு முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இன்று ஆட்சியில் இருப்போர் ஆன்ம லட்சியமாகக் கொண்ட கலாசார தேசியத்தின் வெளிப்பாடுகள் அவை. இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்தும் விழுமியங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றுக்குப் புதிய கல்விக்கொள்கையில் எந்த இடமும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு