Published:Updated:

நீட் வைரஸ் - புதிய தொடர் - 1

நீட் வைரஸ் - தொடர்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ் - தொடர்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - புதிய தொடர் - 1

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ் - தொடர்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ் - தொடர்

“நீ என்னவா ஆகப்போறே?” - நான்காம் வகுப்பு படித்தபோது உறவுக்காரர் என்னிடம் கேட்ட கேள்வி. “டாக்டர் ஆகப் போறேன்” - முகம் மலரச் சிரித்தபடி சொல்லியிருக்கிறேன். அப்போது என் அம்மாவின் முகத்தில் அவ்வளவு பெருமிதம். அவரிடம் மட்டுமல்ல, யதார்த்தம் உணரும் வரை என் மனத்திலும் வேர்விட்டிருந்தது மருத்துவர் ஆகும் கனவு.

நான் மட்டுமா... தமிழகத்தில் பெரும்பாலானோரின் சிறுவயதுக் கனவு மருத்துவர் ஆவதுதான். காரணம், மருத்துவர்களுக்கு இந்தச் சமூகத்தில் கிடைக்கும் மரியாதை. வாழ்வின் விளிம்பில் தவிக்கும் ஒரு மனிதர், கண்கண்ட கடவுளாகக் கையெடுத்துத் தொழுவது மருத்துவரைப் பார்த்துதான். அந்த மரியாதையும் அங்கீகாரமும்தான் மருத்துவர் பணிமீது குழந்தைப் பருவத்திலேயே ஈர்ப்பை உருவாக்கின. மருத்துவப் படிப்பு எப்படிப்பட்டது, அதற்கு எவ்வளவு செலவாகும், எங்கு போய் படிக்க வேண்டும்... எதுவும் தெரியாது. ஆனாலும் மருத்துவர் ஆவேன் என்ற கனவும் எண்ணமும் பெரும்பாலான குழந்தைகளின் மனத்தில் வேர்விட்டிருந்தது. நன்றாகப் படிக்கும் பல லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவர் ஆவதுதான் லட்சியமாக இருந்தது. பலருக்கு அது சாத்தியமும் ஆனது.

நீட் வைரஸ் - புதிய தொடர் - 1

இவையெல்லாம் பழங்கதைகள். இனி நடுத்தர, ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் எல்லோரும் மருத்துவர் கனவைக்கூட காண முடியாதுபோலிருக்கிறது. காரணம், நீட். `என்னது நீட்டா... பேசிப் பேசிப் புளிச்சுப்போன விஷயம். இனிமே அதையெல்லாம் தடுக்க முடியாது!’ என்று நீங்கள் சொல்லலாம்.

இன்னமும்கூட தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதேநேரம் பெரும்பாலான மக்கள் விரக்தியால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். “மருத்துவர் படிப்பு உயிரைக் காப்பாத்துற படிப்புய்யா... அது தரமா இருக்கணும்னா நீட் மாதிரி ஒரு தேர்வு இருந்தா நல்லதுதானே!” என்று கிராமத்துப் பெட்டிக்கடை வரை பேசத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான பிள்ளைகள், மருத்துவக் கனவை விட்டொழித்துவிட்டு வெவ்வேறு படிப்புகளுக்கு இலக்குவைத்து நகரத் தொடங்கிவிட்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அப்படி இப்படிக் கூட்டிப்பார்த்தாலும் பல் டாக்டர் படிப்பையும் சேர்த்து வெறும் 4,500 இடங்கள். இதுக்காக ஏன் போராடிக்கிட்டுக் கிடக்கணும்? கணக்கு, வரலாறு, அறிவியல்னு 150 துறைகளுக்குமேல இருக்கு. அதுல ஒண்ணைத் தேர்ந்தெடுத்துப் படிங்கப்பா...” என்று கல்வியாளர்களும் வழிகாட்டத் தொடங்கி விட்டார்கள். “நீட் தேர்வே நடந்தாலும் நம்ம ஊர் பிள்ளைகள்தானப்பா மருத்துவக் கல்லூரிக்குப் போவுது. வெளிமாநில மாணவர்கள் இங்கே வந்து படிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கென்ன பிரச்னை?” என்று சில நியாயவான்கள் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாம் சரி... உண்மையில், வெறும் 4,500 இடங்கள்தான் பிரச்னையா? ‘மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. மாநில அரசும் பொறுப்பற்று இருக்கிறது’ என்று உச்சு கொட்டி விட்டு, நாமும் நம் வேலையைப் பார்க்கப் போய்விடலாமா? ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பேருக்கு இரண்டு மசோதாக்களை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பி விட்டு கைகழுவிவிட்டது. டெல்லியும் அதை அழுக்குப் படாமல் திருப்பி அனுப்பிவிட்டது. ‘அது கிடக்கட்டும்... அ.தி.மு.க அரசுக்கு எதிரான போராட்டத்தை யெல்லாம் தி.மு.க பார்த்துக் கொள்ளும்’ என்று நானும் நீங்களும் அமைதியாக இருப்பது சரியா? நீட் எதிர்ப்பு என்பது, அரசியல் கட்சிகளின் பிரச்னை மட்டும் தானா? நீட் நம்மிடமிருந்து பறித்திருப்பது வெறும் 4,500 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டும்தானா? நீட் தேர்வால் குலைந்தது நடுத்தர, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட குடும் பத்தைச் சேர்ந்த குழந்தை களின் மருத்துவக் கனவு மட்டும்தானா?

மத்திய சுகாதாரத் துறையின் Health Management Information System 2014-15 புள்ளிவிவரப்படி, சுகாதாரத் துறையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது தமிழகம். 2017-18ல் அது, 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழக சுகாதாரத் துறை எந்த இடத்தில் இருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியவில்லை.

நீட் தேர்விலிருந்து 
விலகும் மாணவர்கள்!
நீட் தேர்விலிருந்து விலகும் மாணவர்கள்!

மருத்துவத் துறையில் தமிழகம் முன்னணியில் இருப்பது என்பது, காமராஜர் காலத்தில் போடப்பட்ட விதை. இன்றளவும், பிறந்து ஒரு மாதத்துக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் கேரளாவிலும் தமிழகத்திலும்தான் மிகக்குறைவாக இருக்கிறது. உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 18 குழந்தைகள் ஒரு மாதத்துக்குள் இறந்துபோகிறார்கள். இதுவே இந்திய அளவில் 23 குழந்தைகள். மத்திய சுகாதாரத் துறையின் ஹெல்த் இண்டெக்ஸ் தரவுப்படி, தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 12 குழந்தைகள் மட்டுமே ஒரு மாதத்துக்குள் இறக்கிறார்கள். தாய்-சேய் இறப்பு விகிதத்தைக் குறைத்ததிலும் தமிழகமே முன் நிற்கிறது. உடல் உறுப்பு தானத்திலும் தமிழகத்துக்குத்தான் முதல் இடம்.

இங்கே 8,712 துணை சுகாதார நிலையங்கள், 1,835 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 385 சமுதாய சுகாதார மையங்கள், 279 வட்டார மருத்துவ மனைகள், 31 மாவட்ட மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மருத்துவமனைகளுடன்கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் 24 இருக்கின்றன. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உட்பட இப்போது புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள். இவை தவிர, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவமனைகள், கிராமங்கள்தோறும் கிராம செவிலியர்கள்; தொற்றுநோய் வந்தால் வீடுவீடாக ஆய்வுசெய்யும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் என, தமிழகத்தில் மருத்துவ வசதிகள் ஏராளம்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 1.15 லட்சம் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் தமிழகத்தில் பணியாற்றிவருகிறார்கள். அதாவது 709:1 என்கிற விகிதாசார அடிப்படையில், மக்கள் மற்றும் மருத்துவர்கள் எண்ணிக்கை அளவீடு இருக்கிறது. இது உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் 1000:1 என்கிற விகிதாசார அடிப்படையைவிட சில மடங்கு முன்னிலை. காமராஜர் தொடங்கி தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை பலரும் அவரவர் பங்குக்கு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்.

ஒரு பெண் கருவுற்ற காலம்தொட்டு, அவள் பிரசவித்து, தடுப்பூசிகள் போட்டு குழந்தையை வளர்த்தெடுப்பது வரை எல்லாவற்றையும் அருகில் இருந்து கவனித்து சிகிச்சையளித்து ஆற்றுப்படுத்திக் காப்பாற்ற தமிழகத்தில் இன்றளவும் அரசே ஆகச்சிறந்த மருத்துவ ஏற்பாடுகளை செய்து தருகிறது. கிராம செவிலியர் தொடங்கி உலகம் போற்றும் மருத்துவ நிபுணர்கள் வரை பலரும் அரசு மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்.

என்னதான் தனியார் மருத்துவமனைகள் பெருகினாலும் இன்னும் பல கோடி மக்களுக்கு நம்பிக்கையாக இருப்பவை அரசு ஆரம்ப சுகாதார மையங்களும் அரசு மருத்துவமனைகளும்தான். பேருந்துகள்கூட செல்லாத மலைக் கிராமங்களுக்கும் சாலையே இல்லாத ஊர்களுக்கும்கூட, சொற்பமான சம்பளத்தை வாங்கிக்கொண்டு தகுதியும் திறமையும் வாய்ந்த மருத்துவர்கள் சென்று சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வு, இது எல்லாவற்றுக்கும் முடிவுகட்டப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இனிமேல், ஆரம்ப சுகாதார மையங்களுக்கோ, அரசு மருத்துவமனை களுக்கோ தகுதிவாய்ந்த மருத்துவர்கள் வரப்போவதில்லை என்கிற பேராபத்தை உணர்ந்திருக்கிறீர்களா? ஏழை மாணவர் களின் மருத்துவக் கனவைக் கருகச்செய்கிறது என்பது மட்டுமல்ல... நீட், தமிழகத்தின் சுகாதாரத் துறையையே தலைகீழாகக் கவிழ்த்துப்போட்டு பேயாட்டம் ஆடப் போகிறது. எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளோ, ஆரம்ப சுகாதார மையங்களோ இல்லாமல்கூடப் போகலாம். மருத்துவத்தை சேவை என்ற நிலையிலிருந்து மாற்றி... ஈவு இரக்கமின்றி, பணத்தை மட்டுமே குறியாகக்கொண்ட தொழிலாக மாற்றப்போகிறது நீட்.

அதுமட்டுமல்ல... ‘நீட் தேர்வு மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும்; தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்கும்; அனைவருக்கும் வாய்ப்புகளைச் சமன்படுத்தும்’ என்றெல்லாம் சொன்னார்களே... அவையெல்லாம் நடந்தனவா?

‘இல்லை’ என்பதே நேர்மையான, வெளிப்படையான பதில். இந்தப் பதிலை, நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் சொல்ல வில்லை. அரசே அதன் அறிக்கைகளில், ஆர்.டி.ஐ மூலம் பெறப்படும் தகவல்களில் சொல்கிறது. நீட் தேர்வு மருத்துவப் படிப்பின் தரத்தை எள்ளளவும் உயர்த்தவில்லை; தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தவறுகளைக் களையவில்லை; வாய்ப்புகளைச் சமன்படுத்தவுமில்லை. திரை மறைவில் நடந்த தவறுகளைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது; மோசடி களுக்கும் முறைகேடுகளுக்கும் வாய்ப்பு களைத்தான் உருவாக்கித் தந்திருக்கிறது.

பொத்தாம்பொதுவாக, மேலோட்ட மாகச் சொல்லவில்லை... நீட் தேர்வின் பின்னணியில் பெரும் முறைகேடுகளுக்கு வேராக இருக்கும் அதிஆபத்தான நெட்வொர்க்கை ஜூனியர் விகடன் எக்ஸ்க்ளூசிவ்வாகக் கண்டறிந்துள்ளது. அடுத்த அத்தியாயத்தில் வெடிக்கப்போகும் அணுகுண்டு அது!

(ட்ரீட்மென்ட் தொடரும்)