Published:Updated:

நீட் வைரஸ் - 10: கொடூர நோய்களுடன் போராடுவாரா ‘நீட்’ உருவாக்கும் மருத்துவர்?

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 10: கொடூர நோய்களுடன் போராடுவாரா ‘நீட்’ உருவாக்கும் மருத்துவர்?

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
உலகமே கொரோனா தொற்றுக்கு பயந்து வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள்கூட மூடப்பட்டுவிட்டன. ஆனால், மருத்துவமனைகள் திறந்திருக்கின்றன. எல்லோரும் தன் குடும்பம், தன் வீடு என ஒடுங்கியிருக்கும்போது, வெள்ளுடை தரித்த தேவதைகளாக செவிலியர்களும், கடவுளர்களாக மருத்துவர்களும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக் கிறார்கள்.

மருத்துவர்களையும் மருத்துவத் துறை ஊழியர்களையும் பாதுகாக்கும் அளவுக்கு உபகரணங்கள்கூட இல்லை என்று ஆங்காங்கே தகவல்கள் வருகின்றன. ஆனால், பெரும்பாலான மருத்துவர்களும் மருத்துவத் துறை ஊழியர்களும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கொரோனாவை நேருக்குநேராக எதிர்கொள்கிறார்கள். ஆண்டைகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், தனவந்தர்கள் என எல்லோரும் இப்போது கைகூப்பி நிற்பது மருத்துவர்களைப் பார்த்துதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முற்றிலும் சிதைந்து கிடக்கும் இத்தாலியில் 85 வயதான ஓய்வுபெற்ற மயக்கவியல் மருத்துவர் ஜியோம்பியரோ ஜிரோன், இந்தப் பேரிடர் காலத்தில் முன்னணியில் நின்று சக மருத்துவர் களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். ‘‘மருத்துவம் என்பது சேவை. அதற்கு ஏது ஓய்வு?’’ என்கிறார் அவர்.

தனிமை வார்டுகளில் மூச்சைப்பிடித்து இழுத்துக்கொண்டு கிடக்கிறவர்கள் எவரும், மருத்துவர்களுக்கு ரத்த பந்தம் அல்லர். நேற்று வரை முகமறியா மனிதர்கள். விளிம்பில் நிற்கிற அவர்களை அரவணைத்து அவர்களின் உயிர் காக்க தங்களையே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவர்களின் குடும்பங்கள், கடும் யுத்தம் ஒன்றுக்கு தங்கள் தலைவனை அனுப்பிவிட்டு பதற்றத்துடன் வீட்டில் முடங்கி இருக்கின்றன. மருத்துவம், தொழில் அல்ல... பிரதிபலன் பாராத சேவை என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?

அரசு மருத்துவமனைகளில் கொரோனோவுடன் நேருக்குநேராகக் களத்தில் நிற்கும் மருத்துவர்கள் எவரும், நீட் தேர்வு எழுதி பணிக்கு வந்தவர்கள் அல்லர். ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலோ, ப்ளஸ் டூ பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு நடத்திய நுழைவுத்தேர்வின் வழியாகவோ மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள், எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே! இந்தச் சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் தன்னாலான சேவையைச் செய்ய வேண்டும் என்கிற துடிப்புள்ளவர்களே!

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி, மருத்துவத்தை சேவையாகத்தான் பார்த்தார். புற்றுநோய் பெரும் அச்சுறுத்தலாகத் தலையெடுத்த நேரத்தில், சென்னை அடையாறில் ஆசியாவிலேயே சிறந்த புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையைக் கொண்டுவந்தது, பல்வேறு நிராகரிப்புகளைக் கடந்து படித்து மருத்துவரான முத்துலட்சுமிதான்.

கல்பாக்கத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், முதல் தலைமுறைப் பட்டதாரி. அவருடைய பெற்றோர், படிப்பின் வாசம் அறியாதவர்கள். இப்படியான பின்புலத்திலிருந்து வந்தவர், அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை வண்ணாரப் பேட்டையில் 45 வருடங்கள் மருத்துவராகப் பணிபுரிந்தார். மக்கள் அவரை கடவுளுக்கு நிகராகப் பார்த்தார்கள். நோயாளியிடம் அவர் வாங்கிய கட்டணம் வெறும் ஐந்து ரூபாய்தான். தனது இறுதிக்காலம் வரை, ஊர் ஊராகப் போய் யாருக்கெல்லாம் நல்ல மருத்துவம் கிடைக்காதோ அவர்களையெல்லாம் தேடிச் சென்று பல ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார்.

இதயவியல் நிபுணரான அமலோற்பவநாதன், அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் கொரோனா பேரிடர் காலத்தில் சக டாக்டர்களு டன் இணைந்து களத்தில் நிற்கிறார். தமிழக உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத் தின் செயலாளராக இருந்து, இந்தியாவுக்கே வழிகாட்டியவர். உடலுறுப்பு தானத்தில் தமிழகத்தை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றியவர். எளிய குடும்பத்தில் பிறந்த அமலோற்பவநாதன், இன்று வரை எங்கு செல்வ தாயினும் பேருந்திலும் சைக்கிளிலுமே செல்லக் கூடிய அளவுக்கு எளிமையானவராக வாழ்கிறார்.

மருத்துவர் ஶ்ரீதேவி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவங்கி அதிகாரி. வார இறுதிகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத் தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தேடிப்பிடித்து மருத்துவ முகாம் நடத்துகிறார். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் அவரின் மகனும்கூட அம்மாவுக்கு பலவிதங்களில் உதவிக்கரம் நீட்டிவருகிறான்.

இவர்களைப்போல் தமிழகமெங்கும் ஆயிரக் கணக்கான மனிதநேய மருத்துவர்கள் இருக்கி றார்கள். நெஞ்சில் ஈரம் சுரக்கும் மகத்தான மனிதர்கள் இவர்கள். நோயாளிகளை சக மனிதர் களாக மதிக்கும், எந்தச் சூழலிலும் மருத்துவத்தை வணிகமாக்காத அந்த மாமனிதர்களால்தான் தமிழகம் சுகாதாரத் துறையில் சிறந்த மாநிலமாக இருக்கிறது.

இனிமேல், இப்படியான மருத்துவர்கள் வருவார்களா? லட்சங்களையும் கோடிகளையும் கொட்டிக்கொடுத்து மருத்துவம் படிப்பவர்கள், சமூகத்தின் கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே இறங்கி வந்து சிகிச்சையளிப்பார்களா?

எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த போது, இந்த நீட் எங்கிருந்து வந்தது?

உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO - World Trade Organization) `காட்’ (GATT-General Agreement on Tariffs and Trades) ஒப்பந்தத்தின் குழந்தைகளில் ஒன்றுதான் `நீட்’.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் வல்லரசு நாடுகளின் உற்பத்திப் பொருள்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதை சரிசெய்யும் வகையில் உலக நாடுகள் `காட்’ ஒப்பந்தத்தை உருவாக்கின. இதுகுறித்து பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 1995-ம் ஆண்டில் உலக வர்த்தக நிறுவனம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு சேவைத் துறைகளுக்கான பொது ஒப்பந்தம் ஒன்று காட்ஸ் (GATS - General Agreement on Trade in Services) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த `காட்ஸ்’ ஒப்பந்தத்துக்கான இந்தியாவுடனான உலக வர்த்தக நிறுவனத்தின் பேச்சுவார்த்தை 1996-ம் ஆண்டில் தொடங்கியது. இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் ஒப்பளிப்பு (offers), பேச்சுவார்த்தை (negotiations), ஒப்பந்தம் (agreement) என மூன்று நிலைகள் உண்டு. 2004 ஜனவரியில், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த ஒப்பந்தத்துக் கான ஒப்பளிப்பை அளித்தது. 2005-ம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண் டாவது முறையாக ஒப்பளிப்பை வழங்கியது.

அதன் பிறகு இன்றைய தினம் வரை, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதா, இல்லையா எனத் தெரியவில்லை. காரணம், உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளும் செயல்பாடுகளும் அவ்வளவு ரகசியமாகவே நடைபெறும். அதேநேரம், GATS ஆவணத்தில் கூறப்பட்ட பல்வேறு கூறுகளை நடைமுறைப்படுத்த தேவையான நிர்வாக, சட்ட, கொள்கைக் கட்டமைப்புகளை இந்தியா வெளிப்படையாகவே உருவாக்கிவருகிறது. அதில் ஒரு நடவடிக்கைதான் `நீட்’.

‘காட்ஸ்’ ஒப்பந்தம் வலியுறுத்தும் இன்னொரு முக்கிய அம்சம், உறுப்பு நாடுகளின் வணிகத்துக்கு எந்தவிதமான இடையூறும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சேவைத் துறையில், குறிப்பாக கல்வி, மருத்துவம் போன்றவற்றில் அரசின் பங்களிப்பு படிப்படியாகக் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும். அரசு, வெறும் கண்காணிப்பாளராக மட்டுமே இருக்க வேண்டும். வேளாண்மை உள்ளிட்ட பிற உற்பத்தித் துறைகளில், மானியங்களையும் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

இங்குதான் படிப்படியாக அரசுப் பள்ளிகள் கைவிடப்பட்டன. அரசுப் பள்ளிகளுக்கு வரவேண்டிய மாணவர்களை, கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் அரசே பணம் அளித்து ஒதுக்கீடு என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் தள்ளியது. கல்விக்கடன் அறிமுகம் செய்யப்பட்டது. மருத்துவத்துக்கு, காப்பீடு கொண்டுவரப்பட்டது. கல்விக்கூடங்களில் சர்வதேச சந்தைக்குத் தேவையான கல்விகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக மற்றும் நிதி மேலாண்மைக்கான சுய உரிமை அமலுக்கு வந்தது. கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் தன் பொறுப்பை அரசு கை கழுவத் தொடங்கியது.

இன்ஃபோகிராபிக்ஸ்: நீட் 2019
இன்ஃபோகிராபிக்ஸ்: நீட் 2019

சேவையாக இருந்த மருத்துவம், வியாபாரமானது. மருத்துவக்கல்வி தனியார் ஆதிக்கத்துக்கு மாறியது. மருத்துவம் படிப்பவர்கள், சமூகத்தைப் படிக்காமல், வெறும் அறிவியலை மட்டும் படிக்கத் தொடங்கி னர். அந்த வியாபாரத்தின் நீட்சிதான் நீட் தேர்வு.

நீட் என்பது, தேசியத் தேர்வு அல்ல... சர்வதேசத் துக்கான தேர்வு. இந்திய மருத்துவக் கல்வியை சர்வதேச சந்தைக்குத் திறந்துவிடுவதற்காக அரசு உருவாக்கிய நுழைவுவாயில். இன்றைய தேதியில் நாம் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க காரணம், இந்த காட்ஸ் ஒப்பந்தம்தான்.

2019-ம் ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2,011 பேர் வெளிநாடுகளிலிருந்து தேர்வு எழுதியவர்கள். (பார்க்க இன்ஃபோ கிராபிக்ஸ்) இந்திய மாநிலங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களுடைய தேவையை இவர்கள் பூர்த்திசெய்வார்களா?

இந்தியாவில் கொரோனா நோய் பாதித்தவர் களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்ட இந்தச் சூழலில், நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவர்கள்தான் தற்போது தங்கள் உயிரை பணயம்வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism