Published:Updated:

நீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் சுமார் ஏழு லட்சம் பேர் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்கள்.

நீட் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டபோது, வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் இருந்தன. தாய்மொழியில் படித்தவர்களுக்கு இந்தத் தேர்வு கடினமாக இருக்கும் என எதிர்க்குரல்கள் எழுந்தவுடன், அந்தந்த மாநில மொழிகளில் நீட் வினாத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவசர அவசரமாக, நீட் பாடத்திட்டங்கள் அடங்கிய பாடங்களையும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினர் (என்.சி.இ.ஆர்.டி) தமிழில் தயாரித்துக் கொடுத்தனர். ஆனால், அதிலும் பல சிக்கல்கள்.

நாங்குநேரியின் இட்டமொழிபுதூரைச் சேர்ந்தவர் கிறிஸ்டி பிரதீபா. அவரின் அப்பா ஓட்டுநர், அம்மா பீடி சுற்றும் தொழிலாளி. தமிழ்வழியில் ப்ளஸ் டூ படித்த பிரதீபா எடுத்த மதிப்பெண் 1176/1200. 2017-ம் ஆண்டில், தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதினார். எந்தவித பயிற்சியும் இல்லாமல் 720-க்கு 200 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றார். அந்த மதிப்பெண் ணுக்கு அவருக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், பல லட்சங்கள் கொடுத்துப் படிக்கும் வசதி பிரதீபாவுக்கு இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘நான் தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதினேன்.

என்.சி.இ.ஆர்.டி கொடுத்த தமிழ்வழிப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருந்த கேள்விகள் எதுவும் தேர்வில் இடம்பெற வில்லை. பெரும்பாலும் பாடத்திட்டத்துக்கு வெளியிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு. அதனால், பொறியியல் கலந்தாய்வுக்குக்கூட விண்ணப்பிக்கவில்லை. என்.சி.இ.ஆர்.டி கொடுத்த தமிழ்வழிப் புத்தகங்களில் காட்டப்பட்ட அலட்சியம், எனது எதிர்காலத்தையே பாதித்துவிட்டது’’ என்று கலங்குகிறார்.

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

‘‘தமிழ்வழியில்தான் வினாத்தாள்கள் தருகிறார்களே... பிறகென்ன பிரச்னை?’’ என்று கேட்பவர்களுக்கு, பிரதீபாவுக்கு இழைக்கப் பட்டிருக்கும் அநீதிதான் பதில். வினாத்தாள்களை மட்டும் தமிழில் மாற்றினால் போதுமா?

என்.சி.இ.ஆர்.டி பாடங்கள், ப்ளஸ் டூ பாடத்திட்ட அடிப்படையில் உருவாக்கப்படுவதாகச் சொல் கின்றனர். ஆனால், ‘‘பத்துக்கும் மேற்பட்ட பிற புத்தகங்களைப் படித்தால் மட்டுமே

என்.சி.இ.ஆர்.டி பாடங்களைப் புரிந்துகொள்ள முடியும்’’ என்கிறார் பிரதீபா. எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிரதீபாவுக்கு அந்த பத்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்பது சாத்தியமில்லை.

சுமார் ஏழு லட்சம்... கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும்மேலான மாணவர்கள் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்து தேர்வு எழுதுகின்றனர். அந்தப் பள்ளிகளை அரசு மேம்படுத்தி, மாணவர்களுக்கு மேலும் வாய்ப்பு களை உருவாக்கித்தந்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் குலைக்கும் நடவடிக்கை களைத்தான் அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சரவணன், அதுபற்றி மிகுந்த ஆதங்கத்துடன் பேசுகிறார். ‘‘அரசுப்பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுத்து, தனியார் பள்ளிகளில் அரசே சேர்த்துவிடுகிறது. அவர்களுக்கான ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்புக் கட்டணங்களை அரசே செலுத்துகிறது. அரசுக்கே தான் நடத்தும் பள்ளிகள்மீது நம்பிக்கையில்லாமல் தனியார் பள்ளிகளை நாடும்போது, மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

நீட், வெறும் மருத்துவப் படிப்பு சார்ந்த பிரச்னையல்ல... மாநிலங்களின் உரிமைக்கு எதிரான பிரச்னை!

ஏற்கெனவே, அரசுப்பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை `இலவசக் கல்வி’ என்று ஆசைகாட்டி தனியார் பள்ளிகள் அழைத்துக் கொள்கிறார்கள். நீட் தேர்வு வந்த பிறகு, சி.பி.எஸ்.இ படிப்புதான் சரியானது என்ற எண்ணம் பெற்றோர் மனதில் உள்ளது. அப்படி பலர் அரசுப்பள்ளிகளில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

இப்படி, பல்வேறு காரணங்களால் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் குறைந்துவருகிறது. தொடர்ந்து குறையும் நிலையில், அதை காரணம்காட்டி அந்தப் பள்ளியை வேறொரு பள்ளியுடன் இணைத்துவிடுவார்கள். இதையெல்லாம் தடுக்காமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்திவிட்டனர். இதனால், ஆசிரியர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர்” என்கிறார் அவர்.

2019 -2020 கல்வியாண்டு நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 6,299. 2017-2018 கல்வியாண்டில் மட்டும் 3,916 பள்ளிகள் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இத்தனைக்கும் 2011-2012 கல்வியாண்டில்தான் ஒரு மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் என்ற அளவில் 320 பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டது. படிப்படியாக, அரசுப்பள்ளிகளை ஆங்கிலம் ஆக்கிரமித்தது. போட்டித்தேர்வுகள் கொடுக்கும் நெருக்கடிகளால் மாணவர்கள் வேறு வழி இல்லாமல் ஆங்கிலவழியையே தேர்ந்தெடுக் கின்றனர். ஒருசிலரே தமிழ்வழியில் சேர்வதாலும் அல்லது தமிழ்வழியில் சேர்க்கையே இல்லாத தாலும் தமிழ்வழியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க நினைக்கும் பெற்றோர்களையும் சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ‘உங்க புள்ள ஒருத்தனுக்காக தமிழ் மீடியத்துல பாடம் நடத்த முடியாது’ என்று புறக்கணிக்கிறார்கள். அப்படியே மீறி சேர்த்தாலும் அந்த ஓரிரு பிள்ளைகளுக்கு வேண்டா வெறுப்பாகவே பாடம் சொல்லித்தரப்படுகிறது அல்லது சொல்லித்தரப்படுவதில்லை. பிள்ளைகள் தேமேவென வகுப்பறைகளில் அமர்ந்துவிட்டு வருவதுடன் சரி. அறிவை விசாலமாக்கும் தாய்மொழியில் கல்வி கற்க விரும்புவது, அவ்வளவு பெரிய பாவமா?!

இதனால், தமிழ்வழிப் பள்ளிகள் சிலவற்றில் வெறும் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் படிக்கும் அவலமும் நிகழ்கிறது. இதுபோன்ற ஒற்றை இலக்க மாணவர்கள் படித்த 890 அரசுப்பள்ளிகளை இணைப்பதற்கு, கடந்த ஆண்டில் அரசு அறிவிப்பு வெளியிட்டது. மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால், அந்த முடிவை தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளனர்.

‘பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று பெற்றோர்தான் ஆசைப்படுகின்றனர்’ என்று அரசும், ‘மொழிவாரியான சம வாய்ப்பை வழங்காமல் இதுபோன்ற கடினமான போட்டித் தேர்வுகளை ஆங்கிலத்தில் அரசு நடத்துவதால் தான், ஆங்கிலவழிக் கல்வியைத் தேர்வுசெய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது’ என்று பெற்றோரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர். இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. கணிசமான அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அளிக்கும் அளவுக்கு, ஆசிரியர்களுக்கே போதுமான பயிற்சி இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை!

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

தாய்மொழி வழிக் கல்வி என்றால், வெறுமனே தாய்மொழியில் பாடங்களைப் படிப்பது மட்டுமல்ல... அந்தந்த மண்ணின் பாரம்பர்யம், வரலாறு, பூகோளம், மருத்துவம் எல்லாவற்றையும் தாய்மொழியில் பயிற்றுவிப்பது. விண்கல அறிவியல் துறையில் மிகப்பெரிய உச்சம் தொட்டு உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சிவன் போன்றோர் இதுபோன்ற அரசுப் பள்ளிகளில் தாய்மொழி வழிக்கல்வியில் பயின்றவர்கள்தான். பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வி இப்படியான ஆளுமைகளை உருவாக்கவில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

நீட் தேர்வின் வழியாகவே தமிழக அரசின் 100 சதவிகித மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படும் என்கிற நிலையில், ‘தமிழ்வழியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சிபெறுவது எளிதான செயல் அல்ல’ என்கிறார்கள் மாணவர்கள்.

தமிழே படிக்காமல் ஒரு தமிழ்ப்பிள்ளை தமிழகத்தில் மருத்துவர் ஆகிவிட முடியும். அந்தப் பிள்ளைக்கு தமிழர்களின் பாரம்பர்ய மருத்துவத்தின்மீது எப்படி மரியாதை இருக்கும்? இந்தப் பிள்ளை எப்படி தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் அமர்ந்து சிகிச்சையளிக்கும்?

அவசர நிலைக்கு முன்பு, மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தவரை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்கள் தமிழிலும் இருந்தன. அவசர நிலைக்குப் பிறகு கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. உலக மயமாக்கல் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட கல்விசார்ந்த புத்தகங்கள் கல்விக்கூடங்களுக்குள் நுழைந்தன. தனியார் பள்ளிகளும் முளைத்தன. தமிழ்வழிப் பள்ளிகளின் சரிவு அங்கேதான் தொடங்கியது. தனியார் பள்ளிகள் தொடங்கிவைத்ததை நீட் தேர்வு முடித்துவைத்திருக்கிறது. நீட் வெறும் மருத்துவப் படிப்பு சார்ந்த பிரச்னையல்ல... மாநிலங்களின் உரிமைக்கு எதிரான பிரச்னை.

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com