Published:Updated:

நீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1933-ன்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் ‘இந்திய மருத்துவ கவுன்சில்’ என்கிற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்புதான் இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒருங்கிணைக்கிறது.

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியில் தரமான கல்வியை வழங்குவது, மருத்துவக் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்குவது அல்லது அங்கீகாரத்தை ரத்துசெய்வது, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியை முடித்த மருத்துவருக்கு நிரந்தர மருத்துவ உரிமம் வழங்குவது என மருத்துவத் துறையின் மொத்த செயல்பாடுகளையும் இந்த அமைப்புதான் கட்டுப்படுத்துகிறது.

மத்திய அரசின் மருத்துவச் சீர்திருத்தத்தில், இந்த மருத்துவ கவுன்சிலைக் கலைப்பதும் ஒரு அஜெண்டா. 2017-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைப்பதற்கான ஒப்புதலை அளித்தது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் சட்டமசோதாவை 2019-ம் ஆண்டில் மத்திய அரசு முன்வைத்தது. அதே காலகட்டத்தில்தான் நீட் தேர்வும் மாநிலங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. இந்த மூன்று நடவடிக்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

அதுசரி... இந்திய மருத்துவ கவுன்சிலை மத்திய அரசுதான் உருவாக்கியது, வழிநடத்தியதும் அவர்கள்தான்... பிறகு ஏன் அந்த அமைப்பைக் கலைத்துவிட்டு புதிய ஒரு நிர்வாகத்தை உருவாக்குகிறார்கள்? நீட் தேர்வை தொடக்கப்புள்ளியாக வைத்து, அரசு தன்வசம் வைத்திருந்த மருத்துவத் துறையை முற்றிலும் தனியாருக்குத் தாரைவார்ப்பதுதான் இதன் பின்னுள்ள நோக்கம்.

சமூக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் கல்வி நிறுவனங்களை நடத்தியவர்களின் கைகளிலிருந்து, காசை மட்டுமே நோக்கமாகக்கொண்ட நவீன கல்வித்தந்தைகளின் கைகளுக்கு கல்வி சென்றதுதான் எல்லாவற்றுக்கும் முதல் புள்ளி. இவர்கள், எதிர்காலத்தில் கல்வியே மிகப்பெரிய தொழிலாக மாறும் எனப் புரிந்துகொண்டு கல்வியில் பெருமளவு முதலீடு செய்ய தொடங்கினார்கள். ஆட்சியாளர்கள், எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுத்தார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்கள் நிறுவனத்தை வளர்த்தெடுக்க, எதையும் செய்ய துணிந்தார்கள் கல்வித்தந்தைகள். ஊழல், லஞ்சம் தலையெடுத்தன. அதிகாரிகளை எங்கே அடித்தால் விழுவார்கள் எனத் தெரிந்துகொண்டு அங்கே அடித்தார்கள். இந்திய மருத்துவ கவுன்சிலும் அதற்கு விதிவிலக்கல்ல.

நீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி!

2001 தொடக்கம் முதலே இந்திய மருத்துவ கவுன்சிலின் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. அதன் தலைவராக இருந்த கேத்தன் தேசாய், இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் (Indian medical association) தலைவராகவும் இருந்தார். ஜனநாயக அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டுவந்தாலும் அதன் முடிவுகளை கேத்தன் தேசாய் என்கிற தனிநபர் மட்டுமே எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர் சேர்க்கையில் அவர் பெரிய அளவில் ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி சில மருத்துவர்கள் குரல் எழுப்பினார்கள்.

வருமானவரித் துறை நடத்திய ரெய்டில் அவரிடம் கணக்கில் வராத 6.5 மில்லியன் ரூபாய்க்கான வங்கிக் காசோலை இருந்தது. அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், உடனடியாக கேத்தன் தேசாயை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட்டது. முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை கவுன்சிலுக்குத் தலைவராக பரிந்துரைத்தது.

ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலும் கேத்தன் தேசாயும் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், உயர் நீதிமன்றத்தின் முந்தைய பரிந்துரைக்குத் தடைவிதித்து தலைமைக்குழு உறுப்பினர் களுக்கான தேர்தலை நடத்த அனுமதி அளித்திருந்தது. உயர் நீதிமன்றத்தால் பதவி நீக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப் பட்டிருந்த அதே கேத்தன் தேசாய் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தலைமைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட பல்வேறு நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் இடம்பெற்றார்.

சிறுபான்மையினருக்கான ஐந்து இடங்களையும் சேர்த்து, கவுன்சிலில் மொத்தம் 123 உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், வெறும் 77 உறுப்பினர்களே இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் மூலம் வரவில்லை. பரிந்துரையின் மூலம் வந்தார்கள். இவை அனைத்துமே இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டவிதிகளுக்குப் புறம்பானதாக அமைந்திருந்தன. அதன் பிறகான காலகட்டத்தில் மருத்துவ கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டவர்கள், தேசாயின் அதிகாரத்துக்கு அஞ்சி அவருக்குக் கட்டுப்பட்டே இயங்கினார்கள்.

மருத்துவப் படிப்பைக் கட்டுப்படுத்தும் அமைப்பே இந்த லட்சணத்தில் இருந்தால், மருத்துவக் கல்லூரிகள் எந்த லட்சணத்தில் இயங்கும்?

இந்திய மருத்துவ கவுன்சிலில் நடந்த ஊழல்கள்குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.பி.தாகூர், ‘இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது’ என ஒப்புக் கொண்டார். மத்திய அரசு கண்காணிக்க வேண்டிய கவுன்சில் இப்படி முறை தவறி கிடப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்கிற அடிப்படையில் கவுன்சிலை முழுவதுமாகக் கலைக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்ற அமைப்பைக் கொண்டுவருவதற்கான மசோதாவை 2019 ஜனவரியில் நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அக்டோபர் 2019-ம் ஆண்டில் தேசிய மருத்துவ ஆணையம் நிறுவப் பட்டது. இந்தச் சட்டத்தின்படி இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாகக் குழு மட்டும் இயங்கும். மற்றபடி மருத்துவக்கல்வி மற்றும் மருத்துவ மனைகள் தொடர்பான அத்தனை அதிகாரங்களும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருக்கும்.

நீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி!

அரசின் ஒரு நிர்வாக அமைப்பில் ஊழல் நடைபெறுகிறது என்றால், அந்த ஊழலைக் களைய வேண்டியது யார் பொறுப்பு, அரசின் பொறுப்பு தானே? பெரும் முறைகேடுகளைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், சகல அதிகாரங்களுடன் அந்த நிர்வாகத்தில் எப்படித் தொடர்ந்தார், இதற்கு யாரெல்லாம் துணை போனார்கள், இதில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பங்களிப்பு என்ன?

இப்படி எந்தக் கேள்விக்கும் விடை தேடாமல், அவசர அவசரமாக கவுன்சிலையே கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கினார்கள். இந்த தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ கவுன்சிலைப்போல் செயல்படும் ஓர் அமைப்பல்ல என்பதுதான் இதன் பின்னுள்ள விபரீதம்.

பொதுவாக, உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும்தான் மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருந்தது. மருத்துவமனைகளின் நிர்வாக அதிகாரம் இன்றளவும் மாநிலப் பட்டியலில்தான் இருக்கிறது. ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவமனைகளையும் தன் கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டு வருகிறது. அதனால்தான், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிராக மருத்துவர்கள் பதறுகிறார்கள்.

“மருத்துவ கவுன்சில் சட்டத்தில் இருப்பதுபோல் ஜனநாயகரீதியிலான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகூட தேசிய மருத்துவ ஆணை யத்தில் கிடையாது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளே அதிகளவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மருத்துவம் பற்றியோ மருத்துவக்கல்வி பற்றியோ ஒன்றுமே தெரியாது. மொத்தம் 29 மாநிலங்களுக்கும் சேர்த்து ஐந்து அல்லது ஆறு பேர்தான் பிரதிநிதிகளாக ஆணையத்தில் இடம்பெறுவார்கள். அப்படியென்றால், மற்ற மாநிலங்களின் நிலை என்னவாகும்? டெல்லியில் அமர்ந்துகொண்டு தமிழகத்தின் குக்கிராமத்தில் இருக்கும் ஓர் ஆரம்ப சுகாதார மையத்தை அவர்கள் கட்டுப்படுத்துவார்கள்” என்கிறார் மருத்துவர் அனுரத்னா.

அதுமட்டுமல்ல... ‘தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கான 50 சதவிகித இடங்களுக்கு கல்லூரி நிர்வாகமே கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம்’ என்கிற சட்டத்திருத்தத்தையும் இந்த ஆணையம் கொண்டுவர இருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கெனவே 20-25 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். இது இன்னும் உயரக்கூடும். இப்போது புரிகிறதா, தேசிய மருத்துவ ஆணையம் ஏன் கொண்டுவந்தார்கள் என்று?

ஒருபக்கம், தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுக்கிறோம் என்று கூறி நீட் தேர்வை அறிவித்தார்கள். மறுபக்கம், அதே தனியாருக்கு கட்டண நிர்ணயத்துக்கான சுதந்திரத்தை அளிக்கிறார்கள். தெளிவாகக் கொள்ளையடிக் கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையம் இனி வருடந்தோறும் கல்லூரிகளில் ஆய்வுசெய்யாது என்றும் அறிவித்திருக் கிறார்கள். இதன்மூலம் தனியார், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் கொஞ்சநஞ்சமிருந்த கண்காணிப்பு ஏற்பாடுகளும் தொலைந்துவிட்டன. இனி விருப்பம்போல் செயல்படலாம்.

எல்லாவற்றையும்விட ஆபத்து ஒன்று இருக்கிறது. மாநில சுகாதாரத் துறையின் அடிநாதமாக இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தனியார் மருத்துவ நிர்வாகங்கள் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. முதற்கட்டப் பணிகள் உத்தரப் பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார மையங்களில் தொடங்கி விட்டன.

‘ஆறு மாதம் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்ட செவிலியர் களும் மருந்தகர்களும் இந்தக் கிராமப்புறச் சுகாதார மையங்களில் நியமிக்கப்படுவார்கள்’ என்கிறது ஆணையம். நகரங்களுக்கு தரமான மருத்துவர்கள்... கிராமங்களுக்கு ஆறு மாத அவசர கோர்ஸ் முடித்த செவிலியர்கள் என்றால் கிராமங்களைப் பற்றி இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

அரசிடம் இருக்கும் மருத்துவத் துறையை தனியார் கார்ப்பரேட்களுக்கு முற்றிலுமாகத் தள்ளிவிடுவது மட்டுமே இந்த ஆணையத்தின் நோக்கம். அதன் தொடக்கம்தான் நீட்.

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகச் செயல்பட்டுவருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் தமிழக சுகாதாரத் துறையில் ஒரு பேரவலம் நிகழக்கூடும். அதற்கு முழுமுதற்காரணமாக இருக்கப் போவது?

(ட்ரீட்மென்ட் தொடரும்...)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com