Published:Updated:

நீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றியவர் ஜெயமோகன். நீலகிரி மாவட்டத்தின் கொரோனா சிகிச்சைப் பிரிவிலும் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

சிறுமுகையைச் சேர்ந்த ஜெயமோகனின் அப்பா, எல்.ஐ.சி ஏஜென்ட். அம்மா இல்லத்தரசி. 2007-ம் ஆண்டில் ப்ளஸ் டூவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த (மறுமதிப்பீட்டில் முதலிடம் கிடைத்தது) ஜெயமோகன் நீட் தேர்வுக்கு முன்பிருந்த கட்-ஆஃப் இடஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் மருத்துவம் படித்தவர். மூன்று வருடங்களுக்கு முன்பு தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையப் பணியில் இணைந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொடநாட்டிலிருந்து 10 கி.மீ தூரம் காட்டு வழியாகப் பயணித்தால், அடிவாரத்தில் அமைந்திருக்கும் தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். அதற்கு கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் பிடிக்கும். அந்தப் பாதையை ட்ரக்கிங் செல்பவர்கள் மட்டுமே பயன்படுத்து கின்றனர். எனவே, தெங்குமரஹாடா நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வழியாகத்தான் செல்ல முடியும். அதற்காக நீலகிரியிலிருந்து 150 கி.மீ தூரம் பயணப்பட்டாக வேண்டும். இரண்டு புலிகள் சரணாலயத்தைக் கடந்து, பரிசலில்தான் தெங்குமரஹாடாவுக்குச் செல்ல முடியும். படுகர்கள், இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி அது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பவை, நகர்ப்புற மருத்துவமனைகள்போல் கிடையாது. மருத்துவர்கள்தான் மக்களைத் தேடி கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். வாரம் தவறாது, அவர்களின் பகுதிக்குச் சென்று மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது, பிரசவம் பார்ப்பது, குழந்தை களுக்குக் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்துகளை தொடர்ந்து தருவது, பருவமடைந்தோருக்கான சுகாதாரம், முதியோர் நலன் என அடிப்படை சுகாதாரப் பணியாளராக வும் மருத்துவர் செயல்பட வேண்டும். கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரின் உடல்நிலை குறித்தும் அந்த மருத்துவர்களுக்கு மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

இப்படியான அதீத ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் தெங்குமரஹாடாவில் பணியாற்றிவர் ஜெயமோகன். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட... அதைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார் ஜெயமோகன். ஒருகட்டத்தில் காய்ச்சல் தீவிரமாக, முதலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும் ஜெயமோகன் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் டெங்கு காய்ச்சலின் அபாயக்கட்டத்தில் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. ரத்த அணுக்கள் குறைந்து இதய செயலிழப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் ஜெயமோகன்.

தெங்குமரஹாடாவில் இருந்து நீலகிரி மாவட்ட கொரோனா வார்டுகளில் பணியாற்றச் செல்வதற்கு முன்பு ஜெயமோகன் தனது முகநூலில் இப்படி எழுதியிருந்தார்... `ஒருவேளை நான் உயிருடன் திரும்பவில்லையென்றால், உங்களுக் காக நான் நல்ல முறையில் சேவை செய்தேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.’ இந்த வார்த்தைகளைப் படித்து இப்போது ஜெய மோகனுக்காகப் பலரும் கண்ணீர் வடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெயமோகனைப்போல இரவுபகல் பார்க்காமல், குடும்பத்தைப் பற்றி நினைக்காமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் கட்டமைக்கப் பட்டதுதான் நமது தமிழக சுகாதாரத் துறை.

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென், தமிழக சுகாதாரத் துறை குறித்து தனது `An Uncertain glory of india’ புத்தகத்தில் இப்படிப் பதிவுசெய்கிறார்... `மற்ற எந்த இந்திய மாநிலங்களையும்போல் இல்லாமல் தமிழகம், இலவச மற்றும் அனைவருக்குமான பொதுசுகாதாரத்துக்காக தன்னை முழுமூச்சாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், அவர்களின் சுகாதாரத் துறை வளர்ச்சி என்பது, வெறும் அறிவிப்புகளையும் திட்டங்களையும் மட்டுமே சார்ந்திருக்கவில்லை. தற்காலத்துக்குத் தேவையான சமூகநீதிக் கொள்கைகளையும் அவை பின்பற்றி இருக்கின்றன.

பொருளாதாரரீதியாக வளர்ந்த மாநிலங்களில் தமிழகம், குஜராத் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் ஒரே அளவில் இருந்தாலும், தமிழகத்தின் சுகாதார வளர்ச்சிக் குறியீடுகள் மற்ற இரண்டு மாநிலங்களையும்விட ஒரு படி மேலே இருக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை விகிதத்தைக் குறைப்பது (Neonatal mortality rate), குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நோய் வராமல் தடுப்பதற் கான தொடர் சுகாதார விழிப்புணர்வு நடவடிக் கைகள், மக்களுக்கான இலவச மருந்துகள் என, சுகாதாரத்தில் ஜனநாயகத்தை அந்த மாநிலம் கடைப்பிடித்துவருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பலர், தற்காப்பு கிட்கள், உணவு, தண்ணீர், மாஸ்க்குகள் கிடைக்காமல் தவிக்கின் றனர். தஞ்சையின் கொரோனா வார்டில் மருத்துவராகப் பணியாற்றும் தன் சகோதரர் குறித்து, ராகுல் பாஸ்கர் என்பவர் சொல்கிறார்.... ‘‘நான் என் தம்பியிடம், ‘உனக்கு அங்கே பாதுகாப்பு இல்லையென்றால் கிளம்பி வந்துவிடு. உன் உயிர்தான் எனக்கு முக்கியம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘அரசு மருத்துவக் கல்லூரியில்தான் படித்தேன். நான் மருத்துவம் படித்தது இதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்களுடன் இருப்பதற்குதான். இன்னும் சொல்லப்போனால், நான் அவர்களின் குடும்பங்களில் ஒருவன். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவருக்கு எப்படி சிகிச்சை தரவேண்டும் என்பது எனக்குத் தெரியும். பாதுகாப்பு உபகரணங்களை அரசு தரவில்லை என்பதற்காக, நான் இவர்களை கைவிட்டுவிட்டு வர முடியாது’ என்று சொல்லிவிட்டான்’’ என்று குரல் தழுதழுக்கச் சொல்கிறார்.

தமிழகத்தின் இன்றைய தேதியில் 8,712 துணை சுகாதார நிலையங்கள், 1,835 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 385 சமுதாய சுகாதார மையங்கள், 279 வட்டார மருத்துவமனைகள், 31 மாவட்ட மருத்துவமனைகள், 24 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இயங்குகின்றன.

இங்கே ஆரம்ப சுகாதாரம் எப்படிக் கட்டமைக்கப்பட்டது, பல குடும்பங்களைக்கொண்ட ஒரு சிறிய கிராமத்துக்கு தமிழக அரசு தரும் சுகாதார வசதிகள் என்னென்ன என்பதுகுறித்து, சென்னை கார்ப்பரேஷனின் முன்னாள் சுகாதார அலுவலர் குகநாதன் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்...

‘‘ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைகள், அவற்றின் கீழ் இயங்கும் பிளாக் மற்றும் தாலுகா மருத்துவமனைகள், அதன் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்... இவைதான் நம்முடைய பொது மருத்துவக் கட்டமைப்பு. 1960-களில் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டமைக்கப்பட்டன. கிராமப்புறங்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக இவை கொண்டுவரப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ், செவிலியர்களின் தலைமையில் செயல்படும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் (Sub-centres) இந்திய மருத்துவத் துறையின் தூண்கள். 50-60 குடும்பங்களைக்கொண்ட ஒரு கிராமத்தின் சுகாதாரம், இந்தச் செவிலியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்தச் செவிலியர்கள் தங்கள்வசம் ஒரு பதிவேட்டை வைத்திருப்பார்கள். அதில் அந்தக் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு வரின் உடல்நிலை குறித்தும் பதிவுகள் இருக்கும். அதை வைத்தே குறிப்பிட்ட நபருக்கு இன்ன நோய்த்தாக்கம் இருக்கும் என்பதை அவர்களால் யூகிக்க முடியும்.

தொற்றுநோய்களுக்கான மருந்துகளை ஆய்வு செய்வதற்கு இதுபோன்ற பதிவேடுகள் தரும் டேட்டாக்கள்தான் பெரும் உறுதுணையாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், உலக அளவிலேயேகூட இதுபோன்ற வலுவான கட்டமைப்புகள் வேறு எங்கும் கிடையாது’’ என்றார்.

மற்ற மாநிலங்களில் இருக்கும் ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய வசதிகள், தமிழகத்தின் தாலுகா மருத்துவமனையிலேயே கிடைக்கின்றன. கிராமப்புறம் தொடங்கி நகர்ப்புறங்கள் வரை தமிழக அரசு பொது சுகாதாரத்துக்காகச் செயல்படுத்திவரும் திட்டங்கள் எண்ணிலடங்காது. நீட், இவை எல்லாவற்றுக்கும் முடிவுகட்டப்போகிறது!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com