Published:Updated:

நீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்... பின்னிழுக்கும் நீட்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்... பின்னிழுக்கும் நீட்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
கோவிட் 19 என்ற கண்ணுக்குத் தெரியாத தொற்றுநோய்க்கு அஞ்சி, உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. ஆனால் மருத்துவர்கள், நோயாளிகளுடன் நேருக்கு நேராக நின்று சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவுடனான இந்த யுத்தத்தில் சில மருத்துவ உயிர்கள் பறிபோகின்றன. கொஞ்சமும் இரக்கமில்லாமல், இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட விடாமல் ஒரு கூட்டம் கல் எறிகிறது. இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் மனம் தளராமல் அணி அணியாக மனிதர்களை குணமாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுதான் மருத்துவத்தின் மகத்துவம். இந்தப் புனிதம்தான் மருத்துவர்களை கடவுளாக எண்ணி கைக்கூப்பவைக்கிறது. பிற தொழில்களைப்போல் இது வணிகமல்ல என வேறுபடுத்திக்காட்டுகிறது. முன்பு நமக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள் இருந்தன. வீதிக்கு வீதி போராட்டங்கள். உயிரச்சம் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. உயிர்தான் பிரதானம். அந்த உயிரின் முடிச்சு மருத்துவர்கள் கையில் இருக்கிறது. தன்னுயிர் கருதாமல் பிறருக்காகப் போராடுபவரே மருத்துவர். என்றால், மருத்துவர் என்பவர் பிற தொழில் செய்பவர்களைப்போல் அல்லர். அவர், மக்களுக்கான சேவகர். அப்படியான மனநிலையில்தான் மருத்துவப் படிப்பை மாணவர்கள் தேர்வுசெய்ய வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் நீட், ஆறாம் வகுப்பிலிருந்தே `பயிற்சி’ என்ற பெயரில் முதலீடு செய்யவைக்கிறது. ஒருவர் மருத்துவப் படிப்பை முடிக்கும்போது பெரும்தொகையை முதலீடு செய்திருக்கிறார் என்றால், அவர் எப்படி சேவை செய்வார்? போட்ட முதலீட்டை ஈட்டவே முயல்வார். அதனால், இந்தத் தொழிலின் மாண்பே அழிந்துவிடும் அல்லவா?

நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் என்ன நடக்கும்? அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழக சுகாதாரக் கட்டமைப்பே குலைந்துபோகும். இன்று குக்கிராமத்தில்கூட மருத்துவ சேவையை இலவசமாக அளிக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களே இல்லாமல்போகும் அல்லது தனியார் கரங்களுக்குள் செல்லும். எப்படி எனப் பார்ப்போம்.

நீட் வருவதற்கு முன்பு எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள், தமிழகத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எங்கேனும் காலியிடங்கள் இருக்கிறதா எனத் தேடி ஓடுவார்கள். பலரும் அங்கேயே தங்கியும்கூட கிராமங்களில் மருத்துவ சேவை வழங்குவார்கள். காரணம், ஒருபக்கம் சேவை மனப்பான்மை. கூடவே, எம்.டி போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்குக் கிடைக்கும் ஊக்க மதிப்பெண். நிற்க... இந்த இடத்தில் ஏற்கெனவே... அதாவது நீட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே தமிழக சுகாதாரத் துறை எந்தளவுக்கு தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்தது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

*******

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த அத்தியாயத்தில் மருத்துவர் ஜெயகாந்தன் இறந்துபோனது பற்றி எழுதியிருந்தோம் அல்லவா... அவர் பணியாற்றிய இடமான தெங்குமரஹடாவுக்குள் நுழைவதற்குள் எப்படியும் ஏழெட்டு காட்டு யானைகளை எதிர்கொள்ள நேரிடும். புலிகளும் சிறுத்தைகளும் இடையிடையே குறுக்கிடும், மாயாற்றில் முதலைகளுமே சர்வசாதாரணமாக உலவும் அடர்வனம் அது. கரடுமுரடான பெரும் பாறைகளைக்கொண்ட அந்தக் காட்டுப் பாதையில் சிறப்பு டயர்கள் பொருத்தப்பட்ட ஜீப்பில் அல்லது ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே பயணிக்கும் அரசுப் பேருந்தில் மட்டுமே செல்ல முடியும். மாலை 6 மணிக்குமேல் யாரும் ஊருக்குள் நுழைய முடியாது; வெளியேறவும் முடியாது. வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் கிராமம் அது. அந்த அடர் வனத்திலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்திருக்கிறது, நமது சுகாதாரத் துறை.

இப்படி நல்ல சாலைகள் இல்லாத, போதிய வசதிகள் கிடைக்காத கிராமப் புறங்கள் வரைக்கும் நம் சுகாதாரக் கட்டமைப்பு விரிந்து கிடக்கிறது.

முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரைக்கும் பலருக்கும் இந்த வளர்ச்சியில் பங்கு இருக்கிறது.

2030-ம் ஆண்டுக்குள் பேறுகால மரண எண்ணிக்கை லட்சம் பேருக்கு 70-ஆக குறைய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், கடந்த ஆண்டே ஒரு லட்சம் பேருக்கு 66 எனக் குறைத்து, அதற்காக மத்திய அரசிடம் விருதும் பெற்றிருக்கிறது தமிழக அரசு.

நீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்...
பின்னிழுக்கும் நீட்!

மற்ற மாநிலங்களைப்போல் இல்லாமல், இங்கு 100 சதவிகித பிரசவம் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. அவற்றில் 65 சதவிகிதம் அரசு மருத்துவமனை யில் நடைபெறுவதாக தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைப்பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஏற்படும் வருவாய் இழப்பீட்டைப் போக்க 1989-ம் ஆண்டு தமிழக அரசால் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தின் ஏழாவது மாதம் தொடங்கி குழந்தை பிறந்த பிறகு தடுப்பூசிக் காலம் வரை 18,000 ரூபாய் தவணைமுறையில் வழங்கப்படுகிறது.

இதுதவிர, 6.7 லட்சம் குழந்தைகளுக்கு 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், குழந்தைகள் பராமரிப்பு கிட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கருவுற்றது முதல் குழந்தை பிறப்பது வரை தாயின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மருந்துகளை அளிக்கும் மகப்பேறு சஞ்சீவிப் பெட்டகத் திட்டம் என நாட்டின் வேறு எந்த மாநிலங் களிலும் இல்லாத அளவுக்கு தாய் சேய் ஆரோக்கியத்துக்கான திட்டங்கள் தமிழக சுகாதாரத் துறையால் செயல்படுத்தப் பட்டுவருகின்றன.

ஒரு பெண் குழந்தைப் பருவம் அடைந்தது தொடங்கி குழந்தைப்பேறு வரையில் அவளது சுகாதாரத்துக்கு அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும் பெருமிதம் தமிழகத்துக்கு உண்டு. அதன் அடிப்படையில் மாதவிடாய் சுகாதாரத் திட்டம் அறிவிக்கப்பட்டு வருடம்தோறும் 33 லட்சம் பருவம் அடைந்த சிறுமிகளுக்கு 62 கோடி ரூபாய் மதிப்பில் இலவச நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. ஹரியானா, டெல்லி உட்பட வேறு சில மாநிலங்கள் எல்லாம் நம்மைப் பார்த்து பல திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் கொரோனா கால சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கையாக ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இரண்டு மாதங்களுக்கான மருந்துகளை அவர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் திட்டத்தை சுகாதாரத் துறை மாவட்டவாரியாக செயல்படுத்திவருகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு விழிப்புணர்வு மற்றும் ஹெச்.ஐ.வி நோயாளிகள் பாதுகாப்புக்காக நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் வாரியம் உருவாக்கப்பட்டது. இவை தவிர, நாட்டிலேயே முதன்முறையாக உடல் உறுப்பு மாற்று ஆணையம் தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டது.

நீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்...
பின்னிழுக்கும் நீட்!

இதற்கெல்லாம் அடிப்படை, நேர்த்தியான நம் சுகாதார நிர்வாகக் கட்டமைப்பு. பேருந்தே செல்லாத குக்கிராமத்தில்கூட தகுதிவாய்ந்த மருத்துவர் இருக்கிறார். இதற்குத்தான் நீட் வேட்டு வைக்கப்போகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் எனச் சொல்லியிருந்தோம் அல்லவா... அந்த விஷயத்துக்கு வருவோம்.

எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் உயர்கல்விக்கு மூன்று மதிப்பெணை ஊக்க மதிப்பெண்ணாக வழங்கிவந்தது தமிழக அரசு. இதுவே, தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் பணியாற்றினால் இரண்டு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டது. அங்கெல்லாம் அவர்கள் பணியாற்றும் ஆண்டுகளைப் பொறுத்து, இப்படி அதிகபட்சம் 10 ஊக்க மதிப்பெண் வரை பெற முடியும்.

இப்படியான சூழலில் எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர் மூன்று ஆண்டுகள் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவார். தாலுகா மருத்துவமனை என்றால், ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார். அப்படியும் பெரும்பாலும் மூன்று ஆண்டுகளில் உயர்கல்வியில் இடம் கிடைத்துவிடாது. சீனியாரிட்டி அடிப்படையில் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல... உயர்கல்வியில் இடம் வழங்கும் முன் தமிழக அரசு, ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. ‘எம்.டி முடித்த பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். இல்லாவிடில் குறிப்பிட்ட தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும்.’ மாணவரும் பெற்றோரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் உயர்கல்வியில் இடம் கிடைக்கும்.

ஆக... எம்.பி.பி.எஸ் முடித்த ஒருவர், குறைந்தது ஐந்து ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்றுவார். உயர்கல்வி முடித்த பிறகும் குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் சேவை செய்வார். இப்படியான மருத்துவர்களால் தான் தமிழகத்தின் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் தேசத்துக்கே முன்னோடியாக இருக்கின்றன.

ஆனால், நீட் இந்த ஊக்க மதிப்பெண்ணுக்கு உலைவைத்துவிட்டது. எப்படி..?

(ட்ரீட்மென்ட் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism