Published:Updated:

நீட் வைரஸ் - 17: பொதுப்பிரிவினருக்கு நன்மை தருகிறதா நீட்?

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 17: பொதுப்பிரிவினருக்கு நன்மை தருகிறதா நீட்?

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
நீட் தேர்வு, பொதுச்சுகாதாரத் துறையை எப்படியெல்லாம் குலைக்கப்போகிறது எனப் பார்த்துவருகிறோம். இடையில், ‘சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த வாசகர் ஒருவர், நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். ‘நீட், மிகவும் தேவையான ஒன்று’ என்கிறரீதியில் அவர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

* பொதுப்பிரிவைச் சேர்ந்த என் மகள், நீட் தேர்வில் 720-க்கு 336 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். எங்கள் தலைமுறையில் அவர்தான் முதல் மருத்துவர். இது, நீட் தேர்வால் மட்டுமே சாத்தியமானது.

* அரசுப் பாடத்திட்டம்தான் பிரச்னை. சென்ட்டம் எடுப்பது எளிதாகிவிட்டது. தேர்வுத்தாள் அணுகுமுறையிலேயே மாணவர் களை தயார்படுத்துகிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அப்படியல்ல. அதனால்தான் சி.பி.எஸ்.இ-யில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

* 2017-ம் ஆண்டில் நீட் வருமா, வராதா என்ற குழப்பத்துக்கு இடையே, என் மகள் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தின் விலை 1,500 ரூபாய் மட்டுமே. ஆனால் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விண்ணப் பத்தில் மட்டுமே பெரும் தொகையை வசூலித்து விடுகின்றன. நீட் வந்த பிறகு இந்த நிலை இல்லை.

* நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங், எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகிறது. எவருடைய தலையீடும் இல்லை. நீட் மட்டுமே மருத்துவப் படிப்பைத் தகுதியுடையதாக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படிக் குறிப்பிட்டிருக்கும் வாசகருக்கு, உண்மை நிலையை விளக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நீட் வருவதற்கு முன்னர், முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. நீட் தேர்வு வந்த பிறகு, அதிக எண்ணிக்கையில் சேர முடிகிறது. உண்மைதான். ஆனால் அதற்கான காரணம், ப்ளஸ் டூவில் பெற்ற மதிப்பெண் மட்டுமல்ல... பல லட்சம் செலவுசெய்து பெறும் தனிப்பயிற்சியும் தான்.

‘சி.பி.எஸ்.இ பாடத்திட்டமே சிறந்தது, மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது’ என்பது அடிப்படையற்ற செய்தி. இதுபற்றி நாம் ஏற்கெனவே இந்தத் தொடரில் நிறைய எழுதியிருக்கிறோம். நீட் தேர்வு, மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலோ சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின் அடிப்படையிலோ நடத்தப் படுவதல்ல. அதற்கென தனிப் பாடத்திட்டம் இருக்கிறது.

பெரும்பாலான மாணவர்கள், ப்ளஸ் டூ பாடங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நீட் தேர்வுக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மட்டும் ப்ளஸ் டூ-வில் பெற்றுவிட்டால் போதும் என, முழுக்க முழுக்க நீட் தேர்வுக்கான பயிற்சியில்தான் காலத்தைச் செலவழிக்கிறார்கள். நீட்டுக்கு முன்பு, ப்ளஸ் ஒன் பாடத்தை நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும் ப்ளஸ் டூ பாடத்தையே மாணவர்கள் படித்ததாகச் சொல்கிறீர்கள் அல்லவா? அதைவிடவும் மோசமான விளைவுகளை உருவாக்கும் இது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ என்பது மிகவும் அடிப்படையான படிப்புகள். நீங்கள் எந்த உயர்கல்விக்குச் சென்றாலும் இந்தப் படிப்புகள்தான் அடித்தளம். அதைச் சிதைத்திருக்கிறது நீட்.

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

நீட் தேர்வு, எந்த விதத்திலும் மருத்துவக் கல்வியை தரமானதாக மாற்றவில்லை. பெரும்பாலான கோச்சிங் மையங்கள், நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் டெக்னிக்குகளை மட்டுமே கற்றுத்தருகின்றன. கிட்டத்தட்ட, அது ஒருவிதமான குறுக்குவழி. வேதியியலும் இயற்பியலும் வராத ஒரு மாணவர் உயிரியலில் மட்டும் முழுமையாகப் படித்துத் நீட் தேர்வு எழுதி, மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட முடியும். அப்படி பல மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்த வித்தையைத்தான் பெரும்பாலான கோச்சிங் மையங்கள் கற்பிக்கின்றன. வேதியியலும் இயற்பியலும் தெரியாத ஒரு மாணவர், எப்படி மருத்துவப் பாடங்களைப் புரிந்துகொள்வார், எப்படி மக்களுக்குச் சிகிச்சையளிப்பார்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் வேதியியல், இயற்பியல் பாடங்களில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்ற 50 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் அளிக்கப் பட்டுள்ளதை, டைம்ஸ் ஆஃப் இந்தியா (15.6.2019) புள்ளிவிவரங்களுடன் அம்பலப் படுத்தியது. இதில், மேலே சொன்ன இரண்டு பாடங்களிலும் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற ஏழு மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதுதான் நீட் கொண்டுவந்துள்ள உண்மையான தரம்!

மேலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படித்த மாணவர்களே நீட்டில் அதிகம் தேர்ச்சி பெறுவதாகச் சொல்வதும் மேலோட்டமானது. 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்கள் பற்றிய புள்ளிவிவரமே இதற்கு பதில் சொல்லும். அந்த ஆண்டு நீட் தேர்ச்சிபெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்களில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படித்தவர்கள் 1,368 பேர். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2,762 பேர். சி.பி.எஸ்.இ மாணவர்களைவிட மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான் நீட் தேர்வில் அதிக மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளார்கள். அதுகுறித்த ஆதாரங்களையும் தொடரின் முந்தைய பகுதிகளில் தந்திருந்தோம்.

இவை மட்டும்தானா? ‘நீட் தேர்வு சாதாரண குடும்பத்து மாணவர்களுக்கு எதிரானது’ என்பதை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

`2019-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் மொத்தம் 3,081 மாணவர்கள், 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதில், அரசுக் கல்லூரியில் சேர்ந்தவர்களில் நீட் தேர்வுக்கு என தனிப்பயிற்சி பெற்றவர்கள் 98.4 சதவிகிதம். தனியார் கல்லூரியில் சேர்ந்தவர்கள் தனிப்பயிற்சி பெற்றவர்கள் 96.9 சதவிகிதம். நீட் தேர்வை ஒரே தடவை எழுதி தேர்ச்சி பெற்று அரசுக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்கள் 33.8 சதவிகிதம். தனியார் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்கள் 35.6 சதவிகிதம். ஒருமுறை தேர்வு எழுதி அதில் கிடைக்காமல், மேலும் ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தொடந்து பயிற்சிபெற்று, மறு ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தோர் கிட்டத்தட்ட 66.2 சதவிகிதம். இதுவே, தனியார் கல்லூரிகளில் சேர்ந்தோர் 64.4 சதவிகிதம். இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவது என்னவென்றால், மருத்துவக் கல்லூரியின் கதவுகள் ஏழைகளுக்கு சாத்தப்பட்டு விட்டன என்பதைத்தான்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்த அமர்வு.

நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு தகுந்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளது என்கிறீர்கள். இப்படிச் செய்வது எந்த அளவுக்கு நியாயம்? பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பாடத்திட்டங்கள், அந்தந்த மாநில கலாசாரம், புவியியல், சூழலியல் போன்றவற்றுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. இதுதான் உலக நடைமுறை. கோடிக்கணக்கான மாணவர்கள் இந்தியா முழுக்க அப்படித் தான் படிக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மட்டும் கையில் எடுத்து, அந்த மாணவர்களுக்கு மட்டும் தோதாக நீட் தேர்வு நடத்தப்படுவது எப்படிச் சரியான முறையாக இருக்கும்? இது பாரபட்சம் அல்லாமல் வேறென்ன?

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

நீட் தேர்வு என்பது கூடுதல் சுமை. பயிற்சியெடுக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில் சேர வேண்டும். லட்சக் கணக்கில் கட்டணம் கட்ட வேண்டும். ஒருசில விதிவிலக்குகள் உண்டுதான். 2019-ம் ஆண்டு கணக்குப்படி பார்த்தால்கூட, மொத்தம் உள்ள சுமார் 5,000 மருத்துவ இடங்களில் சேர்ந்தவர்களில் கோச்சிங் செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 100 பேர் மட்டுமே!

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் ஒற்றைச் சாளரத் தேர்வுமுறை, உலகுக்கே வழிகாட்டக்கூடியது. மிகச் சிறப்பாகவே நடந்துவருகிறது. கவுன்சிலிங் முறையை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதில் தமிழ்நாடுதான் முன்னோடி. தற்போதுவரை அண்ணா பல்கலைக்கழகம் அந்த முறையைத்தான் கடைப்பிடித்துவருகிறது. ஏற்கெனவே, ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இதே கவுன்சிலிங் முறையில்தான் இடங்கள் தரப்பட்டன. வேறுபாடு என்னவென்றால், பழைய முறையில் சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளும் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். நீட் இருக்கும் வரை இனி அதற்கு வாய்ப்பில்லை. தனிப்பயிற்சிக்கு பணம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த கவுன்சிலிங் சாத்தியமாகும்.

தனியார் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் பற்றியும் அதில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் ஏற்கெனவே விரிவாக எழுதியிருக் கிறோம். மற்றபடி நீட் தேர்வு காரணமாக, எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்... இவர்கள் யாருக்கும் தமிழ்நாட்டில் மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை என யாரும் குற்றம்சாட்டவில்லை. இடஒதுக்கீட்டுச் சட்டம் தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது. அதை மீற முடியாது. ஏற்கெனவே இருந்த ப்ளஸ் டூ மதிப்பெண் முறை அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் முறை. அதை மாற்றி, மேல்தட்டு மக்களுக்கும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்தவருக்கும் மட்டுமே மருத்துவப் படிப்பு என்பது சமூக அநீதி மட்டுமல்ல... தமிழ்நாட்டின் மொத்த மக்களின் நலனுக்கும் எதிரானது.

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism