Published:Updated:

நீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

தமிழகத்தில் வசிக்கும் 80 சதவிகித மக்களின் நம்பிக்கை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள்தான். அரசின் காப்பீட்டுத் திட்டத்தால் கொஞ்சம் பேர் மட்டும் தனியார் மருத்துவமனை பக்கம் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் பத்து ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளே இல்லாமல்போகலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நீட் அதைத்தான் நிகழ்த்தப்போகிறது! எப்படி?

கடந்த 2012-2013ம் ஆண்டு வரை எம்.டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களை நுழைவுத்தேர்வுகள் மூலம் தமிழக அரசு நிரப்பியது.

15 சதவிகித இடங்கள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 85 சதவிகித இடங்கள் மாநில அரசின்வசம் இருந்தன. மாநில அரசின் இடங்களில் 50 சதவிகிதம் அரசு மருத்துவ சேவையில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது.

அதாவது, அரசு மருத்துவக் கல்லூரி களில் மேற்படிப்பு படிக்க விரும்பும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது அரசு மருத்துவமனை யிலோ பணியாற்றி இருக்க வேண்டும். அப்படிப் பணியாற்றியவர்களுக்கு அந்த 50 சதவிகித இடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிராமப்புற மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றியவருக்கு 1 மதிப்பெண் மற்றும் மலைக்கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு 2 மதிப்பெண் என மேற்படிப்புத் தேர்வுகளில் ஊக்க மதிப்பெண் அளிக்கப்பட்டது. மேற்படிப்பு முடித்ததும், அரசுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளிலேயே வேலைசெய்வார்கள்; செய்ய வேண்டும்.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர் ராஜேஷ், அப்படி வந்தவர்தான். தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையம்தான் அவருடைய உயிர்மூச்சு. “நான் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்து ஐந்து வருடங்களாக வட்டார மருத்துவ அலுவலராக மீஞ்சூரில் வேலைபார்க்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு இதே மீஞ்சூரில்தான் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவராக எனது பயணம் தொடங்கியது. அந்தக் குழுவில் ஒரு மருத்துவரும் ஒரு செவிலியரும் இருப்பார்கள்.

நாங்கள் அரசு மருத்துவ வாகனத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வோம். கேன்சர் போன்ற நோய்களுக்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு வீட்டிலேயே சென்று சிகிச்சை அளிப்போம். காலையும் மதியமும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துவோம். 2015-ம் ஆண்டு வட்டார மருத்துவ அலுவலராகப் பொறுப் பேற்றதும் சென்னை வெள்ளம் பெரும்சவாலாக வந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது வசிப்பிடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி, அவர்களின் சுகாதாரத்தைப் பேணிக் காத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ம் ஆண்டு வர்தா புயலும் டெங்கு பரவலும் அடுத்தடுத்து மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளை பாதித்தன. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் எங்களுக்கு இருந்தது. அதையும் சிறப்பாகச் செய்தோம். தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் முன்மாதிரி ஆரம்ப சுகாதார நிலையமாக மீஞ்சூர் மருத்துவமனையை மாற்றியுள்ளேன். படிப்பு முடிக்கும் வரை, ‘மேற்படிப்பு படிக்க வேண்டும்’ என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால், இங்கு வந்த பிறகு மக்களுக்காக வேலை செய்வதில் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.

நீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்!

அதனால் மேற்படிப்பு படிக்காமல் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே தங்கிவிட்டேன். கொரோனா தாக்கம் இருக்கும் தற்போதைய சூழலில் இந்தப் பகுதியின் பெரும்பான்மையான மக்களின் உடல்நிலை எனக்கு அத்துப்படி. கொரோனாவுக்கு எதிராக அயராமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். மக்களிடம் தொடர் பரிசோதனைகள் மேற்கொண்டுவருகிறோம்” என்றார் ராஜேஷ்.

ஓர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரால் என்னவெல்லாம் சாத்தியப்படும் என்பதற்கு ராஜேஷ் உதாரணம். ஆனால், ராஜேஷைப் போன்ற மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு இனி கிடைப்பார்கள் என்பதற்கு நூறு சதவிகிதம் உத்தரவாதமில்லை. இதுதான் நீட் தேர்வின் ஆகப்பெரிய ஆபத்து!

இதுவரை ஆண்டுக்கு ஐந்தாயிரம் பேர் எம்.பி.பி.எஸ் முடிக்கிறார்கள் என்றால், அவர்களில் குறைந்தது ஆயிரம் பேராவது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற ஆர்வம்காட்டினார்கள். ஆனால் நீட், இந்த ஆயிரம் பேரை இந்தச் சேவையிலிருந்து அப்புறப்படுத்துகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு எம்.டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு வழங்கிவிட்டது தமிழக அரசு. அதன் பிறகும்கூட மாநில அரசுதான் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்திவந்தது. ஆனால், 2017-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ உயர் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளையும் மத்திய அரசே நடத்தத் தொடங்கியது. தகுதிக்கான விதிமுறைகள் மத்திய அரசால் மாற்றப்பட்டன.

குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனை களில் குறைந்தபட்சம் மூன்று வருடம் பணியாற்றிய மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற தகுதி அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக மலைக் கிராமங் களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மட்டும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணில் பத்து சதவிகிதம் உயர்த்தப்படும். பிற சுகாதார நிலையங்களில் அல்லது அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்தது.

அதுவும் எப்படி? மலைக்கிராமங்களில் பணியாற்றிய மருத்துவர் மாநில அரசிடம் சான்றிதழ் பெற்று அதை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் கிடைக்கப்பெறும் மருத்துவர்கள் மட்டுமே மேற்படிப்புக்குத் தகுதிபெறுவார்கள்.

நீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்!

நிறைய மருத்துவர்கள், சொந்த ஆர்வத்தின் பேரில் கிராமப்புறங்களுக்குச் சென்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். சிலர், உயர் படிப்புக்கு ஊக்க மதிப்பெண் பெறுவதற்காக ஆரம்ப சுகாதார மையங்களைத் தேடிச் சென்றார்கள். இனி அதற்கு அவசிய மில்லை. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய மருத்துவர்களே வரப்போவதில்லை. அரசு மருத்துவமனைகளிலும் எம்.டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் படித்த மருத்துவர்கள் இல்லாமல்போகவும் வாய்ப்பிருக்கிறது.

ஒருபக்கம் தமிழக அரசு இந்த ஆண்டு புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டு வதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இனி, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பேராசிரி யர்கள் கிடைப்பதும் சிக்கலாகிவிடும். லட்சங்களைக் கொட்டிப் படித்துவிட்டு அரசு தரும் சொற்பமான சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்கு வருவார்களா என்ன? அதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளும் நலிவடையும் நிலையும் வரலாம்.

இதெல்லாம் நடந்தால், அரசு மருத்துவ நிர்வாகம் தனியார் மருத்துவமனைகளுடன் கைகோத்துக் கொள்ள முனையும். இதைத்தான் நிதி ஆயோக் ஏற்கெனவே அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதைச் செயல் படுத்தவும் தொடங்கிவிட்டது. சமூகநீதியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் பொதுவான மருத்துவ வசதியை வழங்கக் கட்டமைக்கப்பட்ட அரசின் மிகச்சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு, தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் நிலை வரப்போகிறது.

நீட், தகுதித்தேர்வு அல்ல... அரசு செலவில் தனியாருக்கு மருத்துவர்களை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலை.

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com

திருத்தம்!

கடந்த இதழ் நீட் தொடரில், கடைசி பாராவின் சில வரிகள் தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக விடுபட்டுவிட்டன. முழு பாராவை கீழே தந்திருக்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துகிறோம்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் பற்றியும் அதில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறோம். மற்றபடி நீட் தேர்வு காரணமாக, எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்... இவர்கள் எவருக்கும் தமிழ்நாட்டில் மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை என யாரும் குற்றம்சாட்டவில்லை. இடஒதுக்கீட்டுச் சட்டம் தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது. அதை மீற முடியாது. ஏற்கெனவே இருந்த ப்ளஸ் டூ மதிப்பெண் முறை அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் முறை. அதை மாற்றி, மேல்தட்டு மக்களுக்கும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்தவருக்கும் மட்டுமே மருத்துவப் படிப்பு என்பது சமூக அநீதி மட்டுமல்ல... தமிழ்நாட்டின் மொத்த மக்களின் நலனுக்கும் எதிரானது.