Published:Updated:

நீட் வைரஸ் - 2: நீட் தேர்வு: ஆள்மாறாட்ட கும்பலின் ஆணிவேர் எது?

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 2: நீட் தேர்வு: ஆள்மாறாட்ட கும்பலின் ஆணிவேர் எது?

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

நீட் வைரஸ் தொடர் ஜூ.வி-யில் வெளியாக ஆரம்பித்திருக்கும் சூழலில், நமது தேனி மாவட்ட நிருபர் எம்.கணேஷ் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைக் கண்டறிந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். மிரளவைக்கும் அந்த நெட்வொர்க்கின் பின்னணியைப் பார்க்கலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓர் ஏழை வீட்டுப் பிள்ளை படித்து வேலைக்குப் போய் சம்பாதித்தால், அந்தச் சந்ததியின் தலையெழுத்தே மாறிவிடும். வாழ்வின் கடைசிப் படிக்கட்டிலிருந்து தட்டுத்தடுமாறி முட்டிமோதி உயரத்தை அடைபவர்களே தன்னைப்போல் சிரமப்படும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப்படுவார்கள்; அவர்களையும் ஏற்றிவிட கைகொடுப்பார்கள். அதனால்தான், நம் கல்வித் திட்டத்தில் அடித்தட்டு ஏழைக் குழந்தைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

வேதாச்சலம்
வேதாச்சலம்

அப்படித்தான் எளிய குடும்பத்தின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆனார்கள், நீதிபதிகள் ஆனார்கள், ஆட்சித்தலைவர்கள் ஆனார்கள். இத்தனை காலம் கட்டிக்காத்த இந்தச் சமூகநீதியைத்தான் குழிதோண்டிப் புதைக்கிறது நீட். ஒரு பக்கம் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுதப் போகும் பிள்ளைகளின் ஆடைகளைக் கிழித்து, தலையைக் கலைத்து, பெல்ட்டை உருவி, ஷூவை அறுத்தெல்லாம் பீதியூட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், சத்தமில்லாமல் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துவிட்டார்கள். இதுதான் நீட்டை முன்வைத்து மருத்துவப் படிப்பை மேம்படுத்தும் லட்சணமா? இந்த மோசடி கும்பல் நெட்வொர்க்கைத்தான் ஜூ.வி அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து அம்பலத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. 2019, செப்டம்பருக்குப் பிறகுதான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்த அநியாயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நீட் தேர்வில் ஆள்மாறட்ட மோசடி செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, உதித்சூர்யா, ராகுல், இர்ஃபான், பிரவீன், பவித்ரன், தனுஷ்குமார், பிரியங்கா ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப் பட்டது. தனுஷ்குமார் தவிர மற்றவர்கள் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து விட்டனர். ரிஷிகாந்த் என்கிற மாணவர், கைதுசெய்யப்படுவதற்கு முன்பே முன்ஜாமீன் பெற்றுவிட்டார். மேற்கண்ட மாணவர்களின் பெற்றோர் டாக்டர் வெங்கடேசன், டேவிஸ், முகமது ஷபி, சரவணன், ரவிகுமார், மைனாவதி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள். தனுஷ் குமாரின் தந்தை தேவேந்திரன் விசாரணை வளையத்தில் இருக்கிறார். ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவியதாக முருகன், மனோகரன், வேதாச்சலம் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள்

யார் அந்த மோசடி பேர்வழிகள்?

ஒரு சிறிய முன்கதைச்சுருக்கம்... 2016-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில், பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவக் கல்லூரி தொடங்கப் பட்டது. இந்தக் கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 150 மாணவர்கள் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்ந்தனர். 2016, நவம்பர் மாதம் இந்தக் கல்லூரியை ஆய்வுசெய்த இந்திய மருத்துவ கவுன்சில், ‘போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என்று கூறி கல்லூரியை மூட உத்தரவிட்டது.

150 மாணவர்களும் உறைந்துபோனார்கள். அனைவரும் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘150 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கொடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசுத் தரப்பு அதை ஏற்றுக்கொள்ள வில்லை. ‘அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன’ எனத் தெரிவித்தது. ஆனால் நீதிமன்றமோ, ‘மத்திய அரசிடம் கூடுதல் இடம் வாங்கியாவது இந்த மாணவர்களைச் சேர்க்க வேண்டும்’ என்றது. வழக்கு நீண்டது. இதற்கிடையே 2017-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிந்து, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. இந்த 150 மாணவர்களும் திக்கற்று நின்றார்கள்.

சி.பி.சி.ஐ.டி பிடியில்... இர்ஃபான்
சி.பி.சி.ஐ.டி பிடியில்... இர்ஃபான்

2018 அக்டோபரில், ‘150 மாணவர்களையும் தனியார் கல்லூரிகளில் படிக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அப்போதைய தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி னார். அதை தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரி வித்தது. ‘தனியார் கல்லூரியால்தான் நாங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதனால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும்’ என மாணவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்க, இழுத்துக்கொண்டேபோனது வழக்கு.

அதிரவைக்கும் ‘36’

இதற்கிடையில் 150 மாணவர்களும் 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினார்கள். அதில், 66 மாணவர்கள் மட்டும் வெற்றிபெற்று வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். சிலர், ‘மருத்துவப் படிப்பே வேண்டாம்’ என ஒதுங்கிவிட்டனர். ஆனால், 36 மாணவர்கள் தரப்பில் மட்டும் மீண்டும் நீதிமன்றம் சென்றார் கள். இந்தமுறை வழக்கை நீதிமன்றத்தில் முன்நின்று நடத்தியவர்கள் இரண்டு பேர். ஒருவர் டாக்டர் வெங்கடேசன்; இன்னொருவர் முகமது ஷபி.

நீட் ஆள்மாறாட்ட வழக்கின் முதல் குற்றவாளி யான உதித்சூர்யாவின் தந்தைதான் டாக்டர் வெங்கடேசன். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இர்ஃபானின் தந்தைதான் முகமது ஷபி. இவர்கள் மட்டுமல்ல, இப்போது வரை நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதுசெய்யப் பட்டுள்ள அனைவரும், பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்.

பிரியங்கா, மைனாவதி
பிரியங்கா, மைனாவதி

அதாவது, தங்கள் பிள்ளைகளுடன் படித்த 66 பேர் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்ட நிலையில், எப்படியாவது தங்கள் பிள்ளைகளையும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என நினைத்த 36 மாணவர்களின் பெற்றோரையும் வளைத்தது, ஒரு ‘ஆல் இண்டியா நெட்வொர்க்’. அவர்களில் பலர்தான் தேர்வு தொடங்கி அட்மிஷன் வரை 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து இந்த மோசடியில் இறங்கியிருக் கின்றனர். மாணவர்களைப்போலவே உருவ ஒற்றுமைகொண்ட நபர்களைத் தேர்வுசெய்து, வடமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுதவைத்து பாஸ் மார்க் எடுக்கவைத்துள்ளார்கள். அந்த மதிப்பெண்களை அடிப்படையாகவைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துவிட்டுள்ளது அந்தக் கும்பல்.

எல்லாம் சுமுகமாகத்தான் நடந்துள்ளன. ஆனால், 2019 செப்டம்பர் 11-ம் தேதி தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரனுக்கு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. ‘உங்கள் கல்லூரியில் படிக்கும் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர். அதற்கு ஆதாரமாக, அவரது பெயரில் போலியான நபர் நீட் தேர்வு எழுதியதற்கான ஹால் டிக்கெட்டை இணைத்துள்ளேன். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஊடகங் களுக்குச் சொல்லிவிடுவேன்’ என்றது அந்த மின்னஞ்சல்.

முகமது ஷபி
முகமது ஷபி

பதற்றமடைந்த டீன் ராஜேந்திரன், உடனடியாக உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனுக்குத் தகவல் தந்தார். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், வெங்கடேசனும் ராஜேந்திரனும் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் ஒன்றாக வேலைபார்த்தவர்கள்; நெருங்கிய நண்பர்கள். நண்பனுக்குச் செய்யும் கைம்மாறாக, விஷயம் வெளியே கசியாமல் மூடிவிடுகிறார் டீன் ராஜேந்திரன். ஆனால், செப்டம்பர் 18-ம் தேதி அதே மின்னஞ்சல், ஊடகங்களுக்கும் செல்ல, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

டீன் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் அனுப்பு வதற்கு முன், அந்த மர்மநபர் உதித்சூர்யாவுக்கும் வெங்கடேசனுக்கும் போன் செய்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். தொகை பெரிதாக இருந்ததால், வெங்கடேசன் தயங்கியிருக்கிறார். அதன்பிறகே டீனுக்கு மெயில் அனுப்பியுள்ளார். உதித்சூர்யா கைதான பிறகு பிரவீன், ராகுல், பிரியங்கா மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் போன் செய்து அதே நபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மிரண்டுபோன அவர்கள் காவல்நிலையம் சென்று புகார் அளிக்க, நீட் ஆள்மாறாட்டம் குறித்து விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி டீமுக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது. அவர்களின் விசாரணையில், பிரவீன் உள்ளிட்ட மூவரும் உதித்சூர்யாவோடு பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்தவர்கள் என்பதும், உதித்சூர்யா போன்றே நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 36 பேரையும் விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப் பட்டது. அந்த விசாரணை அடிப்படையில் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

போனில் மிரட்டியவர் யார்?

சரி, போனில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற அந்த நபர் யார்? விசாரணையில் இறங்கினோம்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான சதீஸ்குமார்தான் அந்த மர்மநபர். அவரைப் பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், மதுரையில் வைத்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அதில் மேலும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

சதீஸ்குமார், ‘நீட் ஆல் இண்டியா நெட்வொர்க்’கின் உள்ளூர் புரோக்கர். இந்த நெட்வொர்க், இந்தியா முழுவதும் நீட் தேர்வில் மோசடி செய்து பலநூறு பேரை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டுள்ளதாகச் சொல்கின் றனர் காவல்துறை அதிகாரிகள். இந்த நெட்வொர்க்கின் முக்கியப்புள்ளி, கேரளாவைச் சேர்ந்த ரஷீத். தற்போது ரஷீத் தலைமறைவாகி விட்டார். சதீஸ்குமார், இந்த ரஷீத்தின் நெருங்கிய நண்பர். கூடுதலாக பணம் பார்க்க ஆசைப்பட்டு, நீட் தேர்வு மோசடியை அம்பலப்படுத்திவிட்டார் சதீஸ்குமார். இதனால் ‘ஆல் இண்டியா நெட்வொர்க்’, சதீஸ்குமார் மீது கொலைவெறியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சதீஸ்குமாரை கைது செய்யாமல், தற்போது தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

சரி, இங்கு உள்ள மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வடமாநிலங்களை ஏன் தேர்வுசெய்கிறார்கள்?

பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நீட் போன்ற தேசிய தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வதற்கென்றே குழுக்கள் செயல்படுகின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர்களை விலை பேசி எதையும் எளிதில் முடித்து விடுவார்கள்.

இப்போதுதான் ஒருசில பூதங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் பல பூதங்கள் வெளிவரும் என்கிறார்கள். 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில், தமிழக மாணவர்களின் பெயர், முகவரியில் வடமாநிலங்களில் தேர்வு எழுதிய வர்களின் பட்டியலை எடுத்தால், லட்சணம் தெரிந்துவிடும். ஆனால், மேல்மட்டத்தில் பலர் இதற்கு இடையூறாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட பலர், உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்துக்காகவே ஜாமீனில் விடுதலையாகி இருக்கின்றனர். இதிலிருந்தே அரசு இந்த விஷயத்தில் காட்டும் ‘அக்கறை’ புரியும்.

விசாரணை வளையத்தில் 36 பேர்!

பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்த 36 பேரையும் விசாரணை வளையத்துக்குள் வைத்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வர்களின் புகைப்படங்களும் கிடைத்துவிட்டன என்கின்றனர். ஆனால், நீட் தேர்விலிருந்து விலக்குகோர திராணியற்ற இந்த அரசு, அதில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணியுமா?

`மருத்துவத் துறையைப் புனிதப்படுத்தி தேனாறும் பாலாறும் ஓடச்செய்வோம்’ என்றவர்கள் எங்கே போனார்கள்? நியாயமாகப் படித்து, ஓடாகத் தேய்ந்து உழைத்து தகுதி பெறுபவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறித்து முறைகேடாக வருபவர்களுக்கு வழங்கியதுதான் நீட் தேர்வின் வெற்றி. இப்படி ஆள்மாறாட்டம் செய்து மருத்துவர் ஆகும் ஒருவர், இந்தச் சமூகத்தை எப்படிக் கையாள்வார்? இப்படி வருபவர்கள், சமூகத்துக்குச் சேவை செய்வார்களா, லஞ்சமாகக் கொடுத்த தொகையை பன்மடங்கு ஈட்ட வரம்புமீறல்களில் ஈடுபடுவார்களா? மருத்துவம் என்பது உயிர்காக்கும் தொழிலாயிற்றே... இவர்கள் உயிர் வணிகமல்லவா செய்வார்கள்!

இவ்வளவுதானா... இன்னும் இருக்கிறார்களா? நீட் தேர்வில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, நமது மருத்துவக் கல்லூரிகளை ஆக்கிரமித்தவர்கள் இன்னும் எத்தனை பேர்?

பார்க்கலாம்!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism