Published:Updated:

நீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

#KnowNeetNoNeet

பிரீமியம் ஸ்டோரி
2016- ம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ‘நீட், சமமான வாய்ப்பை உருவாக்கவில்லை. கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களால் நகர்ப்புற எலைட் மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வில் போட்டியிட முடியாது. தமிழகத்தின் தற்போதைய நிர்வாக நடைமுறைக்கு முற்றிலும் முரணாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு, `நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு’ என சூளுரைத்தது. அதே அரசுதான் கடந்த மார்ச் மாதம், ‘நீட் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைவதற்கான காரணத்தைக் கண்டறிய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். நீட் தகுதித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பரிசீலனை செய்யப்படும்’ என அறிவித்தது. ‘நீட் நிரந்தர விலக்கு’ என்பதிலிருந்து ‘நீட் தேர்வில் இடஒதுக்கீடு’ என தலைகீழ் நிலைப்பாடு எடுத்திருக்கிறது தமிழக அரசு.

நீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு அடியோடு சிதைந்துகிடக்கிறது. நாட்டிலேயே மிகச்சிறந்த தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு, குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு என்கிற தமிழக அரசின் கொள்கையையே அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிமன்றம் முடக்கிவிட்டது. சொந்த மாநிலத்துக்கான மருத்துவர்களை நியமித்துக்கொள்ளும் அதிகாரமே மாநில அரசுகளுக்கு இல்லை எனும்போது, மாநில சுயஉரிமையே கேள்விக்குறியாகிறது.

முக்கியமாக, உயிர்களை பலி கொடுத்திருக் கிறோம். `நீட் தேர்வை எதிர்த்து உயிர் கொடுத்த அத்தனை பேரும் பெண் பிள்ளைகள். நீட், ஏழைகளுக்கு எதிரானது’ என உயர் நீதிமன்றமே கூறிய பிறகும்கூட தமிழக அரசு விழித்துக் கொண்டபாடில்லை.

இத்தனைக்குப் பிறகும் விடாப்பிடியாக நடத்தப்படும் இந்த ‘ஒரே நாடு... ஒரே தேர்வு’ முறையால் மத்திய அரசுக்குக் கிடைத்திருப்பது என்ன, தகுதியான மருத்துவ மாணவர்களா? இல்லவேயில்லை. பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்குமான தொடர்பை அறுத்துவிட்டு, பயிற்சி மையங்களில் படித்து தேர்வில் பாஸ் ஆகும் வழிமுறைகளை மட்டுமே இரண்டு மூன்று வருடங்கள் கற்றுக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும் இன்று மருத்துவ இடங்களுக்குத் தகுதி பெறுகிறார்கள். 2017-ம் ஆண்டு தொடங்கி இதனால் பெரிதும் பயனடைந்தது பயிற்சி மையங்கள் மட்டும்தான். இதற்கிடையே ஆள்மாறாட்டம் என்னும் பெரும்மோசடி வேறு!

‘தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களின் கட்டணக் கொள்ளையிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டோம்’ எனப் பலரும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். ‘தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், தங்களுக்கான 50 சதவிகித இடங்களுக்கான கல்விக்கட்டணத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்’ என்று தேசிய மருத்துவ ஆணையம் தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நீட் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் என்ன, அது ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதைத்தான் ‘நீட் வைரஸ்’ தொடர் அலசியது. தற்போது கொரோனா பேரிடர் காலத்துக்குப் பிறகு ஜூலை மாதத்தில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வுக்கு முன்புகூட ஐந்து சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. நீட் தேர்வு அந்த ஐந்து சதவிகிதத்தையும் பறித்தது. ‘நீட் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது’ என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே முதல்வருக்கு அக்கறை இருந்தால், அந்த வழக்கு எண் தொடங்கி வழக்கின் தற்போதைய நிலவரம் வரை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு `நீட் தேர்வு எதிர்ப்பு’ என்கிற புள்ளியில் ஒன்றிணைய வேண்டியது மிக அவசியம். சமூகத்தின் சம உரிமை, கல்வியின் வழியாகத்தான் சாத்தியமாகும். சம உரிமையைப் பறிக்கும் எதுவுமே சமூக அநீதிதான். நீட், சமூக அநீதிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் வாய்ப்பிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கருத்தைத் திரட்டி மத்திய அரசிடம் போராட வேண்டும். ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படியொரு போராட்டத்தைத் தொடங்கினால், மொத்தத் தமிழகமும் அவர் பின்னால் அணிவகுக்கும்’ என்று மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிகளும் கைகோக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும்பட்சத்தில், அது தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனையாகவே பதியப்படும். இந்த வாய்ப்பை முதல்வரும் பிற அரசியல்கட்சித் தலைவர்களும் தவறவிடக் கூடாது.

நீட் தேர்வை விரட்டியடிப்போம்... தரமான மருத்துவர்களை உருவாக்குவோம்!

(முற்றும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு