Published:Updated:

நீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

‘ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பின் அடிப்படையில் ஆக்கபூர்வமான முறையில் கட்டாய, இலவச, தரமான கல்விக்கான உரிமையுண்டு’ என்கிறது ஐ.நா சபையின் குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கை. சமமான கல்விதான் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வளமாக மாற்றும். ஆனால் நம் தேசத்தில், கல்வி என்பது ஏற்றத்தாழ்வுமிக்கதாகவும் வன்முறை மிக்கதாகவும் மாறிவிட்டது.

நல்ல மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி பெறுவதற்கு உதவி கிடைக்காமல் டூ-வீலர் வொர்க்‌ஷாப்களிலும் உள்ளூர் தொழிற்சாலைகளிலும் தங்கள் கனவுகளை சிறைப்படுத்திக்கொண்டு உழல்பவர்கள் ஏராளம். அப்படியான மாணவர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கித் தரவே முதல் தலைமுறைக்கான கல்வி உதவித் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்திவருகிறது. இன்றளவும் அந்தத் திட்டத்துக்கான தேவை இருக்கிறது. பல ஆயிரம் மாண வர்கள் அந்தத் திட்டம்மூலமாகவே பட்டதாரி ஆகிறார்கள். இப்படி கல்விக்கட்டணத்தைக் கட்டவே தடுமாறி நிற்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டா உயரத்தில் வைத்துவிட்டது நீட்.

நம்முடைய பாடத்திட்டம் எந்தப் பாடத்திட்டத்துக்கும் குறைந்ததல்ல; வயதுவாரியாக குழந்தைகளின் உளவியலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. எந்த வயதில், எந்த அளவுக்கு குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கூர்மையாகப் பகுப்பாய்வுசெய்து நம் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலைப் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களில் பாதியை 9-ம் வகுப்பிலும், மீதியை 10-ம் வகுப்பிலும் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்புகளில் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் பாதி 11-ம் வகுப்பிலும், மீதியை 12-ம் வகுப்பிலும் கற்றுத்தரப்படுகிறது. 12-ம் வகுப்பின் தொடர்ச்சியாகத்தான் இளநிலைப் பட்டப்படிப்புகள் வகைப்படுத்தப் படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ப்ளஸ் டூ என்பது, உயர்கல்விக்குச் செல்வதற்கான ஒரு திறப்பு. உயர் கல்விக்கான தகுதி என்கிற அடிப் படையில்தான் ப்ளஸ் டூ தேர்வை இவ்வளவு கவனமாக நடத்துகின்றனர். மாணவர்களும் இரவுபகல் பாராமல் படிக்கின்றனர். ப்ளஸ் டூ-வில் வரலாற்றுப் பிரிவை எடுத்துப் படித்துத் தேர்ச்சிபெற்ற ஒரு மாணவன், வரலாற்றுப் பட்டப்படிப்பில் சேர முழுத்தகுதி உடையவன் ஆகிறான். கணிதம் எடுத்துப் படித்துத் தேர்ச்சிபெற்ற மாணவன், உயர்கல்வியில் கணிதம் எடுத்துப் படிக்கத் தகுதிபெற்று விடுகிறான். வேதியியல், இயற்பியல், உயிரியல் பிரிவை எடுத்துப் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவன், மருத்துவப் படிப்பில் சேர தகுதிபெறுகிறான்.

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

பிறகு எதற்கு நீட்? நீட்தான் தகுதி என்றால், ப்ளஸ் டூ படிப்புக்கு ஏன் மாணவர்கள் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?

நீட் தேர்வுக்கு முன்பு, ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்றபோது, பிராய்லர் கோழி களைப்போல் மாணவர்களை உருவாக்கிய தனியார் பள்ளிகள், ப்ளஸ் ஒன் வகுப்புகளையே நடத்துவதில்லை. இரண்டு ஆண்டுகளும் ப்ளஸ் டூவையே நடத்தினார்கள். அதனால், மேல்நிலைக் கல்வியில் கற்றுத் தேற வேண்டிய விஷயங்களில் பாதியை, தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் இழந்தார்கள். ஆனால் இன்று நீட் வந்த பிறகு, ப்ளஸ் டூ வகுப்பையும்கூட பெயருக்குத் தான் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளேகூட, ப்ளஸ் டூவின் பாதியில் ‘நீட் பயிற்சி’ என்று மாணவர் களை திசைதிருப்பிவிடுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பக்கம் ப்ளஸ் டூ படிப்புக்கான அழுத்தம்... இன்னொரு பக்கம் நீட் பயிற்சிக்கான அழுத்தம். மாணவர்கள் என்ன இயந்திரங்களா? இது மாணவர்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது தெரியுமா?

அரக்கோணத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் மகளான நசீம் கவுசர், ஒரு முதல் தலைமுறை மாணவி. அம்மாவும் அப்பாவும் பெரிதாகப் படிக்கவில்லை. நசீமுக்கு சிறுவயதுக் கனவு, மருத்துவர் ஆவது. காரணம், அவரை வாட்டிவதைத்த ஆஸ்துமா. தன்னைப்போலவே ஆஸ்துமா நோயால் தவிப்பவர்களை மீட்டெடுப்பதற்காகவே மருத்துவம் படிக்க விரும்பினாள் அந்தத் தங்கை.

2017-ம் ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய நசீம் பெற்ற மதிப்பெண் 1,118. ‘மாவட்டத்தின் முதல் மாணவியாக வருவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நசீம், அந்த இலக்கைத் தொடாமல்போனதற்குக் காரணம், நீட் தேர்வு. ‘‘ப்ளஸ் டூ தேர்வுக்காக தீவிரமா படிச்சுக்கிட்டி ருந்தேன். திடீர்னு நீட் தேர்வுக்கான பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அரைகுறையா கொடுத்த பயிற்சியால ப்ளஸ் டூ தேர்வும் ஒழுங்கா எழுத முடியலை... நீட் தேர்வும் சரியா எழுதலை’’ என்று கலங்குகிறாள் அவள்.

அந்த ஆண்டு தேர்ச்சி பெற முடியாமல் போனதால், அடுத்த முறை நீட் தேர்வு எழுத பெங்களூரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்திருக் கிறாள் நசீம். ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். நகை களை, வீட்டில் இருக்கும் முக்கியமான பொருள்களை விற்று பணம் கட்டியிருக் கின்றனர். ‘‘இரவுபகலா கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சும் ரெண்டாவது முறை எழுதிய நீட் தேர்வுல 279 மதிப்பெண்தான் வாங்கினேன். நீட் தேர்வு, என் மருத்துவக் கனவுக்குத் தடையா வந்துடுச்சு’’ என்று சொல்லும் நசீம், இப்போது மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

நீட் தேர்வு வந்தபோது, சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அது எளிதாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. பெரும்பாலான பெற்றோர், வேகவேகமாக தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளிலிருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்குத் தள்ளினார்கள். கல்வித் தந்தைகள், வேகவேகமாக தங்கள் மெட்ரிக் பள்ளி வளாகத்திலேயே சி.பி.எஸ்.இ பள்ளிகளைத் தொடங்கினார்கள்.

கூடவே, ‘தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டம் வீண். சி.பி.எஸ்.சி பாடத்திட்டமே நல்ல பாடத்திட்டம்’ என்ற பிரசாரமும் அதிவேகத்தில் நடந்தது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தவித்த தமிழக அரசு, உடனடியாக பாடத்திட்டத்தை மாற்றியது. நீட் தேர்வை மட்டுமே மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டன புதிய பாடப்புத்தகங்கள். அவ்வளவு கனமான புத்தகங்களை பையில் சுமக்கவே பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். மூளையில் எப்படிச் சுமப்பார்கள்? கவலைப்பட யாரும் இல்லை!

சரி... சி.பி.எஸ்.இ பாடத்திட்டத் தில் படித்தால் மட்டும் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிட முடியுமா? கண்டிப் பாக முடியாது.

சி.பி.எஸ்.இ-யாக இருந்தாலும் சரி, மாநிலப் பாடத்திட்டமாக இருந்தாலும் சரி, தனியாக கோச்சிங் சென்றால் மட்டுமே நீட்டில் தேர்ச்சிபெற முடியும். சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படித்தால் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பது தவறான நம்பிக்கை. இதை, அரசு தரும் புள்ளிவிவரங்களே நிரூபிக்கின்றன.

நீட் தேர்வின் பின்னணியில் பல்லாயிரம் கோடி ரூபாய் வணிகம் இருக்கிறது. கடந்த மூன்றே ஆண்டுகளில் தேசமெங் கும் பல ஆயிரம் பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தனியார் பள்ளிகளை வளைத்து, பெற்றோர்களின் மனதைக் கரைத்து நீட் பயிற்சியில் பிள்ளைகளைச் சேர்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். தனியார் பள்ளிகளும் தங்கள் வணிக உத்தியாக நீட் பயிற்சியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. கருணையே இல்லாமல் 6-ம் வகுப்பு மாணவனின் நீட் பயிற்சிக்கு 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். ‘எப்படியும் தங்கள் பிள்ளைகளை கரையேற்றிவிட வேண்டும்’ என்ற மத்தியதர வர்க்கத்தின் பலவீன மனநிலையைப் பயன்படுத்தி மிகப்பெரும் வணிகம் செய்துவருகின்றன இந்தப் பயிற்சி மையங்கள்.

சரி... ப்ளஸ் டூ முடித்துவிட்டு இந்தப் பயிற்சி மையங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றால், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றுவிட முடியுமா?
அப்படியும் சொல்லிவிட முடியாது.

இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் பணத்தைக் கொட்டி பயிற்சி பெற்றால் மட்டுமே தேர்ச்சிபெற முடியும். இந்த அவலத்தையும் அரசின் புள்ளிவிவரங்கள்தான் அம்பலப்படுத்துகின்றன.

தமிழகத்தில் உள்ள 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 1,650 பேரில் 1,062 பேர், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்று சேர்ந்திருக்கிறார்கள். 1,598 பேர் தனிப்பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். வெறும் 52 பேர்தான் பயிற்சி பெறாமல் முட்டிமோதி சுயநிதிக் கல்லூரிகளில் இடம் பிடித்திருக்கின்றனர். அரசு மருத்துக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் கதையும் இதுபோன்றதே! (பார்க்க இன்ஃபோகிராபிக்ஸ்)

தமிழக அரசு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அஃபிடவிட்டில் இருந்து எடுக்கப்பட்டவைதான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள்.

இப்போது விபரீதம் புரிகிறதா? தனிப்பயிற்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சிபெறலாம் என்றால், ப்ளஸ் டூ தேர்வு எதற்கு? இரவுபகலாக கண் விழித்துப் படிப்பது எதற்கு? ப்ளஸ் டூவில் முதுகலை படித்த பண்பட்ட ஆசிரியர்கள் எதற்கு?

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
நீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்!

மருத்துவமாகட்டும் பொறியியலாகட்டும்... எல்லா உயர் படிப்புகளுக்கும் அடிப்படை, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிப்புகள்தான். நீட், அந்தப் படிப்புகளையே அவசியமற்றதாக்குகிறது. பணம் வைத்திருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள் 6-ம் வகுப்பு படிக்கும்போதே நீட் பயிற்சி மையத்தில் சேர்த்துவிடுகிறார்கள். பள்ளிப் பாடப்புத்தங்களைப் பெயருக்குப் படித்து போக்கு காட்டி தேர்ச்சிபெற்றுவிட்டு, நேராக நீட் தேர்வுக்குத் தயாராகி மருத்துவர் ஆகும் தலைமுறை அடுத்தடுத்து வரப்போகிறது.

நீட் உருவாக்கிய பயிற்சி மையச் சந்தை, இந்தியக் குடும்பங்களை மொட்டையடிக்கப்போகிறது.

அந்தப் பல்லாயிரம் கோடி வணிகம் பற்றி, அடுத்த இதழில் பார்ப்போம்!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism