Published:Updated:

நீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
நீட் தேர்வு அறிமுகமானபோது, தீவிர கல்விச் செயற்பாட்டாளர்களாக இருக்கும் சிலர் `நீட் தேர்வைவிட, நம் பள்ளிக்கல்வி முறையில் இருக்கும் பிரச்னைகள்தான் விபரீதமானவை’ என்றார்கள்.

`ஜே.இ.இ, யு.பி.எஸ்.சி போன்ற தேசியப் போட்டி மற்றும் தகுதித்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் போதிய அளவுக்கு இடம் பெறுவதில்லை. காரணம், ஆங்கிலப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு நிகராக நம் பாடத்திட்டம் இல்லாததே’ என்றும் சிலர் பேசினார்கள்.

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்தான், நாடெங்கும் பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உண்டாக்கும். ஒரு பாடத்திட்டம் எப்படி உருவாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு பருவத்திலும் குழந்தை எந்தெந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அந்த நிறுவனம் ஒரு ஃப்ரேம் வொர்க் தயாரித்துத் தரும். அதன்படிதான் எல்லாப் பாடத்திட்டங்களும் உருவாக்கப்படும்.

கல்வி என்பது, மக்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் பிரதிபலிக்க வேண்டும். வட்டாரத் தன்மைதான் கல்வியின் முக்கிய அம்சம். `அறிந்ததில் இருந்து அறியாதது’ என்பதுதான் கற்றல் செயல்பாட்டின் பாதை. குழந்தை அறிந்துவைத்துள்ள மொழியில், அது தெரிந்து வைத்திருக்கும் விஷயத்திலிருந்து கல்வி தொடங்க வேண்டும். ஒரு குழந்தை, எந்த விஷயத்தையும் அதன் வயதுக்குட்பட்ட அறிவோடுதான் புரிந்துகொள்ளும். அந்த அறிவு முதிர்ச்சிக்குத் தகுந்தவாறே பாடங்களின் தன்மையும் இருக்க வேண்டும். இந்த உளவியலின் அடிப்படையில், அந்தந்தப் பருவத்தில் குழந்தை எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இலக்கு வகுக்கப்பட்டே பாடத்திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

இந்தியா முழுவதும் 52 அனுமதிக்கப்பட்ட பாடத்திட்ட முறைகள் இருக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான மாணவர்கள் மாநிலப் பாடத்திட்ட அடிப்படையில்தான் கல்வியைப் பெறுகின்றனர். 2017-ம் ஆண்டில் மட்டும் மாநிலப் பாடத் திட்டங்களின் அடிப்படையில் 1.3 கோடி மாணவர்கள் தேர்வு எழுதியதாக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவிக்கிறது.

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

மாநிலங்களில் பாடத்திட்டங்கள் தயாரிக்க பெரிய ஏற்பாடுகள் உண்டு. நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவுக்கு, மூத்த கல்வியாளர்கள் தலைமை தாங்குவார்கள். அவர்களின்கீழ் ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து விவாதித்துதான் பாடங்களை உருவாக்கு வார்கள். அப்படி உருவான பாடப்புத்தகம் மறு ஆய்வு செய்வதற்கு சிறப்பு நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பிறகே மாணவர் கைகளுக்குப் பாடப்புத்தகம் போகும்.

பத்தாம் வகுப்புக்கு முற்பட்ட கல்விமுறைக்கும் மேல்நிலையான ப்ளஸ் 1, ப்ளஸ் 2-வுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. மேல்நிலைக் கல்வி என்பது, உயர் படிப்புக்கான திறப்பு. உயர்கல்வியில் எந்தத் துறை நோக்கிப் பயணிக்க விரும்புகிறார்களோ, அதற்கேற்ப பாடங்களைத் தேர்வுசெய்து படிக்க வேண்டும். கணிதம் படிக்கும் மாணவன், ஆடிட்டர் ஆகலாம், பொறியாளராகவும் ஆகலாம். வேதியியல் படிக்கும் ஒரு பிள்ளை, மருத்துவர் ஆகலாம்,ஆசிரியர் ஆகலாம், ஆராய்ச்சியாளராகவும் ஆகலாம். அப்படியான திறந்த வாய்ப்புகளை உருவாக்குவது தான் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படிப்புகளின் நோக்கம். அதன் அடிப்படையில்தான் அந்த இரண்டு வகுப்புகளிலும் பாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நீட் தேர்வு அறிமுகமான தருணத்தில், `மாநிலப் பாடத்திட்டம் சிறிதளவும் தரமில்லை’ என்றார்கள். நம் பாடத்திட்டம் அப்டேட் செய்யப்படவில்லை என்பது உண்மைதான். 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள், சமச்சீர்க் கல்விமுறைக்கு மாறிய போது மாற்றப்பட்டன. ஆனால், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத்திட்டங்கள் கடந்த 15 ஆண்டுகளில் அப்டேட் செய்யப்படவேயில்லை. இதற்கு, ஆட்சியாளர்களின் அலட்சியம், பொறுப்பின்மை, அக்கறையின்மை எனப் பல காரணங்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
1975-க்குப் பிறகு தமிழகத்தில் ஆங்கிலப் பள்ளிகள் முளைக்கத் தொடங்கின. இப்போது சுமார் 9,000 தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இவை தவிர, 1,100 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், நீட் அறிமுகமான பிறகு தொடங்கப்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகள் 520!

தொடக்கத்தில், அக்கறையுள்ள பல கல்வியாளர்கள் தரமான, மேம்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் பள்ளிகளைத் தொடங்கினர். அரசிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் கல்வி வழங்கினர். அப்படி இயங்கும் சில பள்ளிகள் இன்றும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், கல்வி வணிகம்தான் செய்துகொண்டிருக் கின்றன. பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இருபது லட்சம் ரூபாய் எடுக்க வேண்டும். இந்தத் தனியார் பள்ளிகளை, தங்களின் சுயலாபத்துக்காக அரசியல்வாதிகளும் வளர்த்தெடுத்தனர்; வளர்த்தெடுக்கின்றனர்.

தனியார் பள்ளிகள் மக்களை வளைப்பதற்கு தூண்டில் புழுவாகப் பயன்படுத்தியது, ஆங்கிலத்தை. ஆங்கிலம் என்பது மொழி. அதையே அறிவு எனக் கருதி, `தங்கள் பிள்ளையும் ஆங்கிலத்தில் பேச வேண்டும்’ என்ற கனவோடு, குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பெற்றோர் தள்ளினர்.

கல்வியின் நோக்கையும் போக்கையும் திசைதிருப்பி பணம் பார்க்கும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள், கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைபார்த்தன. போதாக்குறைக்கு, தனியார் பள்ளிகளைப் பார்த்து, செவ்வனே செயல்பட்ட அரசுப் பள்ளிகளையும் சிதைக்கத் தொடங்கின.

தனியார் பள்ளிகளுக்குள் ஏற்பட்ட போட்டி, மதிப்பெண் யுத்தமாக மாறியது. மதிப்பெண் பெற்று வணிகத்தை மேம்படுத்துவதற்காகப் பிள்ளைகளை மனப்பாட இயந்திரங்களாக தனியார் பள்ளிகள் மாற்றின. தனியார் பள்ளிகள், இன்னுமொரு மோசடியையும் அரங்கேற்றின. ப்ளஸ் 1 பாடங்களை நடத்தாமல் ப்ளஸ் 2 பாடங்களையே இரண்டு ஆண்டுகளும் நடத்தத் தொடங்கினர். 9-ம் வகுப்பு பாடங்களையும் புறந்தள்ளிவிட்டு, இரண்டு ஆண்டுகளும் 10-ம் வகுப்புப் பாடங்களை நடத்தினர்.

குறிப்பாக, 9-10, ப்ளஸ் 1 - ப்ளஸ் 2 படிப்புகள் தனித்தனியல்ல... கல்வியாளர்கள் இதை `கோர்ஸ்’ என்று சொல்கின்றனர். ஒரு விஷயத்தின் அடிப்படையை 9-ம் வகுப்பில் படிப்பார்கள். 10-ம் வகுப்பில் அது பற்றிய விரிவான பாடம் இருக்கும். ப்ளஸ் 1, ப்ளஸ் 2-விலும் அப்படித்தான். இரண்டு வகுப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. 9-ம் வகுப்பைத் தெளிவாகப் படித்து நிறைவுசெய்யும் மாணவரால்தான், 10-ம் வகுப்புப் பாடங்களைப் புரிந்து படிக்க முடியும். ப்ளஸ் 1, ப்ளஸ் 2-வும் அப்படித்தான்.

முறைப்படி படித்த அரசுப் பள்ளி மாணவர்களால், பெரிய அளவில் மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட முடியவில்லை. அதனால்தான் மருத்துவம் போன்ற துறைகளில் பின்தங்கினர்.

தனியார் பள்ளிகளைக் கண்காணித்து, மோசடியை அம்பலப்படுத்த வேண்டிய அரசு, அரசுப் பள்ளிகளையும் மதிப்பெண்ணை நோக்கித் துரத்தியது. தனியார் பள்ளிகளோடு போட்டிப் போட்டு மல்லுக்கு நின்றது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மதிப்பெண் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் மனப்பாட இயந்திரங்களாயினர்.

தமிழகத்தில் தயாராகும் பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களில் பெரும்பாலானோர் முழுமையான தகுதியோடு இல்லை என, உலகம் முழுவதும் நடக்கும் ஆய்வுகள் அசிங்கப்படுத்து கின்றன. காரணம், இதுமாதிரியான கற்பித்தல் முறைதான்.

கற்பித்தல்முறையிலும், மதிப்பெண்ணை மட்டுமே வைத்து தகுதியைத் தீர்மானிக்கும் தேர்வுமுறையிலும் இருக்கும் பிரச்னைகளைக் களையாமல், கல்வி மோசடியில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தாமல், பாடத்திட்டம் சரியில்லை எனச் சொல்வது எப்படி சரியாகும்?

நெடுங்காலப் போராட்டத்துக்குப் பிறகு, ஓரளவுக்கு சமவாய்ப்பை உறுதிசெய்யும் சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசு கொண்டுவந்தபோது, `அந்தப் பாடத்திட்டத்திலும் தரமில்லை’ என்ற முதல் குரல் தனியார் பள்ளிகளிடமிருந்துதான் எழுந்தது. பெற்றோரையும் பல பள்ளிகள் தூண்டிவிட்டன. திரை மறைவில் பல கல்வித் தந்தைகள் நிறைய செலவுசெய்து, சமச்சீர் கல்வித்திட்டத்துக்கு எதிராகப் பிரசாரமே செய்தனர்.

நீட் வந்தபோது இந்தக் குரல் வலுவானது. அக்கறையுள்ள சில கல்வியாளர்களும் இந்தக் குரலுக்கு இசைந்தனர். திடீரென வந்து தாக்கும் வைரஸான நீட்டை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அரசு, முழுமையாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல், மக்களை அமைதிப்படுத்த மீண்டும் பாடத்திட்டங்களை மாற்ற திட்டமிட்டது.

தற்போது பிள்ளைகள் சுமக்க முடியாமல் சுமக்கும் புதிய பாடத்திட்டங்கள் நம் கல்விச்சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவு என்ன தெரியுமா?

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com