Published:Updated:

நீட் வைரஸ் - 7 - ‘நீட்’டுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 7 - ‘நீட்’டுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
நீட் தேர்வு கொடுத்த அழுத்தம் காரணமாக பாடத்திட்டத்தை மாற்ற முனைந்தது தமிழக அரசு. 2017-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமை யில் பாடத்திட்ட மறுவடிவமைப்புக்கான குழு உருவாக்கப் பட்டது. குழந்தைகளை செயல்வழியில் கற்கத் தூண்டும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப் படும் என்றார்கள். வெறும் மனப்பாடமாக இல்லாமல் கருத்தியலுடன்கூடிய கற்பிக்கும் முறை, பகுப்பாய்வுத் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் பாடங்களின் அமைப்பு, தொழில்முறை சார்ந்த கல்விமீது மாணவர் களின் ஆர்வத்தைத் தூண்டுதல் என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.

கல்வியாளர்கள், ஓவிய ஆளுமைகள், படைப்பாளிகளும்கூட பாடத்திட்ட உருவாக்கக் குழுவில் இடம்பெற்றனர். அதனால், பாடப்புத்தகங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. எதிர்பார்த்ததைப் போலவே வண்ணமயமான பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கைகளுக்கு வந்தன. வெறும் எழுத்துகளை மட்டுமே கொண்டிருந்த பாடப் புத்தகங்களில் ஓவியங்கள் நிறைந்து இருந்தன. கியூ.ஆர் கோடு போன்ற தொழில்நுட்பங்களும் பாடங்களுடன் தொடர்புடைய தகவல்களும் மாணவர்களை ஈர்க்கவேசெய்தன.

ஆனால், மேற்கொண்ட விஷயங்களுடன் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களில், ‘சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களே உயர்வானவை. அவற்றைவிட சிறப்பாகக் கொடுக்க வேண்டும்’ என்ற வேட்கையுடன் நீட், ஜே.இ.இ, யு.பி.எஸ்.சி உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகளையும் மனதில்வைத்து பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டதால் சுமை, மாணவர்களை வதைக்கத் தொடங்கி யிருக்கிறது.

“பாடங்களை வடிவமைக்கும் குழுவில் இருந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் கொடுத்த அழுத்தத்தால் இளநிலைப் பட்டப் படிப்புகளில் இடம்பெற வேண்டிய பாடங்கள் புதிய மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. சில பாடங்கள் ஆசிரியர்களாலேயே புரிந்துகொள்ள முடியாது. இயற்பியல் பாடத்தை ஆழமாகப் படித்து நீட் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள், தற்போது நீட் தேர்வு எழுதுவதற்காக மட்டுமே இயற்பியலைக் கற்கிறார்கள். இதே நிலைதான் வேதியியலுக்கும். விளைவு, பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படிக்க விருப்பப்படும் ஒரு மாணவருக்கும் நீட் அடிப்படையிலான கல்வியே பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. அவருக்கு வேதியியல் சார்ந்த ஆழமான புரிதல் உருவாக்கப்படுவதில்லை. நீட் தேர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தப் பாடத் திட்ட மாற்றம், மாணவர்களின் பள்ளிக் கல்வியில் கல்லெறிந்துள்ளது” என்கிறார் பாடத்திட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் ரவிக்குமார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ராமானுஜம், “நீட் தேர்வை மட்டுமே நாங்கள் மனதில்கொள்ளவில்லை. ஆனால் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடங்களில் மட்டும் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட பல போட்டித்தேர்வுகளில் இடம்பெறும் கேள்விகள் பயிற்சிகளுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தன” என்கிறார்.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ஜோசப் பிரபாகர், ‘‘பாடத்திட்ட மாற்றம் கட்டாயமானது. ஆனால், முன்பிருந்த பாடத்திட்டம் தரமற்றது என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல” என்கிறார்.

இங்கு பாடத்திட்டங்களை மாற்ற வேண்டிய தேவையிருந்தது உண்மைதான். ஆனால், நீட் தேர்வை மனதில்வைத்து அதற்கேற்ற ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கியதுதான் பிரச்னை.

புதிதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? 2017-2018 கல்வியாண்டு 11-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 8,61,000. இதுவே 2018-2019 கல்வியாண்டில் 8,00,000. 61,000 மாணவர்களை கல்வியைவிட்டுத் துரத்தியது தான் விளைவு.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ப்ளஸ் 1-ல் அறிவியல் பிரிவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகமிருக்கும். ஆனால், புதிய பாடப்புத்தகங்கள் வந்த பிறகு, காமர்ஸ் பிரிவில் மாணவர்கள் அதிகம் சேர்ந்தனர் என்கிறது பள்ளிக்கல்வித் துறையின் புள்ளிவிவரம். ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு வரை

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு மாநில பாடத்திட்டத்துக்கு மாறுவது வழக்கம். ஆனால், நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத் திலிருந்து கேட்கப்படும் என்ற நம்பிக்கையில், மாநிலப் பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டித்தேர்வுகளையும் கல்வியையும் ஒரே தராசில் வைக்கும் பார்வையே தவறானது. நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளின் வழியாக இந்திய அளவில் வெறும் 0.02 சதவிகித மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புக்கான இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து மாணவர்கள் படிக்க பல நூறு துறைகள் இருக்கின்றன.

பள்ளிக்கல்விதான் ஒரு மாணவனை வடித்தெடுக்கிறது. வாழ்க்கைக்கான அறத்தை, தொடர்புகொள்ளும் திறனை, சமத்துவத்தை, தொன்மைமிக்க நம் வரலாற்றை போதிக்கிறது. அப்படியான பாடத்திட்டத்தின் வழியாக வந்த முத்து லட்சுமிதான், சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை உருவாக்கினார்.

அப்படிப் படித்தவர்கள்தான் இன்றும் மருத்துவத்தை சேவையாக உயிர்ப்போடு செய்துவருகிறார்கள். அப்படிப் படித்த வர்கள்தான் தலைசிறந்த வழக்கறிஞர்களாக, போற்றுதலுக்குரிய நீதிபதிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர். அப்படிப் படித்தவர்கள்தான் நல்ல ஆட்சித்தலைவர் களாக இருந்தனர்... இருக்கின்றனர்.

நீட் வைரஸ்
நீட் வைரஸ்

ஓர் அரசு, அப்படிப்பட்ட கல்வியைத் தான் பிள்ளைகளுக்குத் தர வேண்டும். பாகுபாடற்ற அந்தக் கல்விதான் தேசத்தின் வளர்ச்சியை உச்சத்துக்கு எடுத்துச் செல்லும். உலகளவில் நம் மதிப்பை உயர்த்தும். அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி, மாநில உரிமைகளுக்கான அட்டவணை 7-ல் இருந்தது. 1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் 42-வது திருத்தத்தின்படி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. கல்வியை மாநிலங்களின் கைகளிலிருந்து பறித்து மொத்த அதிகாரத்தையும் மத்தியில் குவிப்பதற்கான தொடக்கப்புள்ளி அதுதான். நீட் தேர்வுக்கான விதையும் அங்குதான் விழுந்தது.

சமூகநீதிக்கு வேட்டுவைக்கின்ற, சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு தகுதித்தேர்வு... அந்தத் தகுதித்தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடத் திட்டம்... ஓர் அரசாங்கமே இப்படிப்பட்ட அநீதிகளைச் செய்யலாமா?

(ட்ரீட்மென்ட் தொடரும்)

2018 நீட் தேர்விலும் மோசடி!

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவிகித இடங்கள் (சுமார் 500 இடங்கள்) மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. அந்த இடங்களை `AIPMT’ (All India Pre Medical Test) என்ற நுழைவுத்தேர்வுமூலம் மத்திய அரசு நிரப்பும். ஜம்மு காஷ்மீர் (யூனியன் பிரதேசம்), தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சிபெற்று, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பில் உள்ள இடங்களில் சேர முடியும். இந்தத் தேர்வை மத்திய அரசின் CBSE (Central Board of Secondary Education) நடத்தியது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிறு அன்று இந்தியா முழுவதும் இந்தத் தேர்வு நடக்கும்.

இந்த இடங்களில் வட இந்திய மாணவர்களே அதிகம் சேர்வார்கள். பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு இப்படியொரு தேர்வு நடத்தப்பட்டதே தெரியாது. 2015, மே 3-ம் தேதி நடைபெற்ற தேர்வில், ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்ட தேர்வுக்கூடத்தில் தேர்வு எழுதிய சில மாணவர்கள், ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ பட பாணியில் ப்ளூடூத் உதவியுடன் விடைகளைப் பெற்று எழுதினர். இதுதொடர்பாக இரண்டு பல் மருத்துவர்கள், இரண்டு மருத்துவ மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. மறுதேர்வும் நடத்தப்பட்டது. இது, தேசம் முழுவதும் பரபரப்பை உருவாக்கியது. இப்படியாக AIPMT தேர்வுக்காக ஏற்கெனவே இயங்கிய ஆல் இந்திய நெட்வொர்க் மோசடி கும்பல், இப்போது நீட் தேர்வை இலக்குவைத்து இயங்குகிறது.

சென்னை மருத்துவக் கல்லூரி டீனுக்கு கடந்த மாதம் ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘உங்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் தனுஷ்குமார், பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அவருக்கு இந்தி தெரியாது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்துள்ள தனுஷ்குமார் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்றது அந்த மின்னஞ்சல். இதுகுறித்து உடனடியாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் டீன். தகவல் சி.பி.சி.ஐ.டி-க்குச் சென்றது. உடனே தனுஷும் அவரின் தந்தை தேவேந்திரனும் தலைமறைவாகினர். பிப்ரவரி 26-ம் தேதி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

ஏற்கெனவே நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் முதலாம் ஆண்டு மாணவர்கள். தற்போது இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அப்படி யென்றால், 2018 நீட் தேர்விலும் மோசடிகள் அரங்கேறியிருப்பது அம்பலமாகியிருக்கிறது. இதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு CBSE அமைப்பிடம், தமிழக மாணவர்களின் முகவரியில் வட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களின் விவரங்களை சி.பி.சி.ஐ.டி கேட்டிருக்கிறது. அதற்கு, ‘எங்களிடம் தகவல்கள் இல்லை’ என்று CBSE பதிலளித்திருக்கிறது. இதனால் விசாரணை முடங்கியுள்ளது என்று ஆதங்கப்படுகின்றனர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்.

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism