Published:Updated:

நீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

சர்வதேச அளவில் அதிகளவு தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. மொத்தம் 271 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வல்லரசான அமெரிக்காகூட இரண்டாம் இடம்தான். சரி, எப்படிப் பெருகின இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிகள், எப்படி உருவானார்கள் மருத்துவக் ‘கல்வித்தந்தைகள்’? அந்தக் கூத்தையெல்லாம் பார்ப்போம்...

1985-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அரசு, கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், வெகுவேகமாக இதை கையில் எடுத்தார். மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார். இதை எதிர்த்து அரசு மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அப்போது அந்த மூன்று தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததுடன் நிறுத்திக்கொண்டது தமிழக அரசு.

நீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள்தொகை அதிகம் இருக்கும் இந்தியாவில், ‘அனைத்து மக்களுக்குமான சுகாதாரத் தேவை’ என்கிற பின்னணியில்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் காலத்தில், மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டுமென்றால் 300 ஏக்கர் நிலம், 350-க்கும் அதிகமான படுக்கை வசதிகளைக்கொண்ட மருத்துவமனைகளை மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை நடத்தியிருக்க வேண்டும். 100 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த மருத்துவ வசதியும் இல்லாத நிலையில், ‘அங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேவை’ என மாநில அரசு சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்த இந்த விதிகளின்படிதான் அன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், பின்னாளில்தான் உச்ச நீதிமன்றம், ‘100 படுக்கைகள் போதுமானது, 300 ஏக்கர் நிலம் தேவையில்லை, 100 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பிற மருத்துவமனைகள் இருந்தாலும் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம்’ என்றெல்லாம் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளைத் தளர்த்தியது. சமூகநீதி, இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழகத்தில், மருத்துவக் கல்வி கொள்ளையடிக்கும் வியாபாரமாக மாறியது இந்தப் புள்ளியில்தான்.

தமிழகத்தில் தற்போது 13 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் 1,590 இடங்கள் இருக்கின்றன. 860 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்குப் போக, மீதம் உள்ள 730 இடங்களை கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீட் தேர்வுக்கு முன்பு வரை, ப்ளஸ் டூ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. அப்போதெல்லாம், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணம் 13,610 ரூபாய். உணவுக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாம் சேர்த்து அதிகபட்சம் 50,000 ரூபாய்க்குள் செலவுகள் அடங்கிவிடும். அதிலும் முதல் தலைமுறை மாணவர் என்றால், கல்விக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

அதுவே தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் 2.75 லட்சம் ரூபாய் முதல் 5.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. மேனேஜ் மென்ட் கோட்டாவில் வருடத்துக்கு 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் தவிர, கேபிட்டேஷன் ஃபீஸ் என்ற பெயரில் 40 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை பிடுங்கினார்கள். இவை தவிர, ஒன்பது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றுக்கான கட்டணங் களை பல்கலைக்கழக நிர்வாகங்களே நிர்ணயித்துக்கொள்ளும். இங்கெல்லாம் இடஒதுக்கீட்டு முறை இல்லை. தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏகத்துக்கும் குளறுபடிகள்.

நீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்!

ஓர் உதாரணம் மட்டும் இப்போது பார்ப்போம். 2016-ம் ஆண்டு 136 மாணவர்கள், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக அந்தக் கல்வி நிறுவன நிறுவனர் பச்சமுத்துவிடம் 85 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும், ஆனால் சீட் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளித்தனர். இந்தப் பணப்பரிமாற்றத்துக்கு இடைத்தரகராக இருந்த பச்சமுத்துவின் உதவியாளர் மதன், திடீரென மாயமானார். பிறகு, அவர் திருப்பூரில் பிடிபட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் ஓராண்டுக்காலம் நடந்த இந்த வழக்கு, மேல்முறையீடாக உச்ச நீதிமன்றம் சென்றது.

எம்.பி.பி.எஸ் சீட்டுக்காக வசூலித்த பணத்தில் 79.88 கோடி ரூபாய் வரை திருப்பி அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.எம் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, ‘பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்புக்கு ஆட்சேபனை இல்லை என்கிற அஃபிடவிட் இருந்தால், பச்சமுத்து மீதான முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்யலாம்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் பச்சமுத்து மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, கட்டணக்கொள்ளை மட்டும்தான் இதுபோன்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிரச்னையா? இல்லை, இன்னும் நிறைய நிறைய குளறுபடிகள். கல்லூரிகள் கட்டுவதற்கான இட வசதி, மருத்துவமனையில் படுக்கை வசதி, மருத்துவ உபகரண வசதிகள் ஆகியவை விதிமுறைப்படி இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வுசெய்ய வேண்டும். அதன் பிறகே ஒரு கல்லூரிக்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும். ஆனால், சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடப்பதைக் கேட்டால், ரத்தம் கொதிக்கும்.

மருத்துவமும் மருத்துவக் கல்வியும் ரத்தமும் சதையும் போன்றவை; மக்களின் உயிருடன் தொடர்புடையவை. அவை தனியார் நிறுவனமாக இருந்தாலும்கூட தங்கள் உயிர் காக்கும் கோயில்கள் என்று மக்கள் அவற்றை நம்புகிறார்கள். ஆனால், இந்த மருத்துவக் ‘கல்வித்தந்தைகள்’ என்ன செய்கிறார்கள் தெரியுமா? விதிமுறைகளுக்காக மட்டுமே போலியாக அல்லது பெயரளவில் மருத்துவமனைகளை நடத்துகிறார்கள்! பெரும்பாலும் அந்த மருத்துவமனைகளில் நோயாளிகளே இருக்க மாட்டார்கள். ஏன்... டாக்டர்களும் நர்ஸுகளும்கூட இருக்க மாட்டார்கள். ஆனால், மருத்துவ கவுன்சிலிருந்து ஆய்வுக்கு வரும்போது ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ பட பாணியில் பொய்க் கட்டுப் போட்டும், பெயருக்கு வென்டிலேட்டர் வைத்தும், வெற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பொருத்தியும், துணை நடிகர்கள் கணக்கான ஆட்களை நியமித்து நோயாளிகளாக நடிக்கச் செய்கிறார்கள். போலி டாக்டர்களையும் நர்ஸுகளையும் வலம்வரச் செய்கிறார்கள். பொய்க் கட்டுப் போட்டு ரோட்டில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களைவிட கேவலமல்லவா இது!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

``இது மக்களைச் சமாதானப்படுத்தும் செயல்!’’

நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை, ‘நீட் வைரஸ்’ தொடரில் ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்திவருகிறது. இந்த நிலையில்தான் ‘நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தோல்வி குறித்து ஆய்வுசெய்ய, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்’ என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் ‘அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் ஆகியவற்றில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

`‘நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்கு வேண்டும் என்று 31.1.2017 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த தமிழக அரசு, தற்போது அந்தக் கொள்கையிலிருந்து விலகி இருப்பதைத்தான் முதல்வரின் இந்த அறிவிப்பு காட்டுகிறது’’ என்கிறார் கல்விச் செயற்பாட்டாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் நடந்துவருவதாக முதல்வர் சொல்கிறார். ஆனால், அது தொடர்பாக தமிழக அரசு நடத்திய சட்டப்போராட்டங்கள் என்னென்ன? அந்த வழக்கு பதிவான நாள், வழக்கு எண் என்ன, எத்தனை முறை அந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது இவற்றையெல்லாம் முதல்வர் தர வேண்டும். நீட் குளறுபடிகளுக்கு ஆணையம் அமைப்பது தீர்வாக அமையாது. மாறாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92-வது அறிக்கையில், ‘அகில இந்திய அளவில் மருத்துவத் தேர்வு என்ற வளையத்துக்குள் வர விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளித்துவிடலாம்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசே ‘ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை’ என்கிற மசோதாவை நிறைவேற்றலாம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

அதைச் செய்யாமல் ஆணையம் அமைக்கக் காரணம் என்ன? மேலும், நீட் தேர்வில் தேர்ச்சிபெற கோச்சிங் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. அதுவும் இரண்டு வருடக்காலம் பயிற்சி எடுத்தால்தான் டாக்டர் ஆக கனவே காண முடியும் என்கிற நிலைமை உள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களால் அப்படி இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியுமா, அதற்கான செலவுகளுக்கு இந்த அரசு பொறுப்பேற்றுக்கொள்ளுமா? இவை அனைத்தையும் கடந்து போராடி அந்த மாணவர் தேர்ச்சிபெற்றால் மட்டுமே உள் ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். போட்டித்தேர்வுகள் வெறும் வியாபாரச் சந்தையாகிவரும் சூழலில் ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கும் இதுபோல் உள் ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? ஆக... இது மக்களைச் சமாதானப்படுத்தும் செயலே தவிர, தீர்வு அல்ல!” - அழுத்தம் திருத்தமாக உண்மையை உரக்கச் சொல்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. செவிசாய்க்குமா தமிழக அரசு?

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com