Published:Updated:

நீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
மருத்துவ கவுன்சில், ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்ய வேண்டும். போதிய மாணவர்கள் இல்லாவிட்டாலோ போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலோ கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்துசெய்வார்கள். அந்தச் சூழலில், கல்லூரி நிர்வாகிகள் மாணவர்களைவிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவைப்பார்கள். பல சமயங்களில் மாணவர்களின் நலன் கருதி அரசுக் கல்லூரிகளில் அரசு அவர்களுக்கு இடம் அளித்துவிடும். பிடுங்கிய வரை லாபம் என, கல்லூரி நிர்வாகம் கம்பி நீட்டிவிடும்.

இதை ஒரு சமூகவிரோத தொழிலாகவே பல காலம் செய்துவந்தார்கள் பல மோசடி ‘கல்வித் தந்தைகள்’. பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இழந்தது இப்படித்தான். 150 மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியதுடன், அவர்களின் பெற்றோரையும் ஆள்மாறாட்டக் குற்றவாளிகளாக மாற்றிய அந்தக் கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்படி என்ன நடவடிக்கை எடுத்துவிட்டார்கள் இந்த ஆட்சியாளர்கள்?

‘தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளைத் தடுக்கவும், அவற்றில் புரளும் கறுப்புப்பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவுமே நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது’ என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். ஆனால், நிலைமையை படுமோசமாக மாற்றியிருக்கிறது நீட்.

இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மாணவர் சேர்க்கையும் அதன் வழியாகவே நடைபெற்றது. இந்தக் கல்வி நிறுவனங்களில் மருத்துவ இடத்துக்கான கட்டணத்தை 22 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்தது. தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா மருத்துவ இடங்களுக்கான கட்டணம் 12 லட்சம் ரூபாய் எனத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு தொகையைச் செலவுசெய்து, ஒரு சாமானியர் வீட்டுப்பிள்ளை இந்தக் கல்லூரிகளில் சேர முடியுமா?

‘தங்கள் பிள்ளை குறைந்தபட்சம் நீட்டில் தேர்ச்சிபெற்றுவிட்டால், எப்படியும் மருத்துவச் சீட்டை பணம் கொடுத்து வாங்கிவிடலாம்’ என்ற மனநிலையில் இருக்கும் பெற்றோர்கள் மட்டுமே இவற்றை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது, ஐந்து வருடங்களில் குறைந்தது இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே இந்தக் கல்லூரிகளில் நுழைய முடியும். ‘நீட் தேர்வு, மருத்துவப் படிப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பை அளிக்கும்’ என்றார்களே... இதுதானா அந்தச் சம வாய்ப்பு? முன்பு டொனேஷன் என்ற பெயரில் பிடுங்கிய தொகையை இப்போது சட்டபூர்வமாகவே பிடுங்குவதற்கு வழிசெய்திருக்கிறது நீட்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நீட் கவுன்சலிங்குக்கு மாணவர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டும். அப்போது கல்விக் கட்டண முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். இதற்கான கவுன்சலிங்கை இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திவந்தது. வரும் ஆண்டிலிருந்து தேசிய மருத்துவ ஆணையம் நடத்தப்போகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவிகித மத்திய தொகுப்பு இடங்கள் போக மீதம் உள்ள இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நிகர்நிலைப் பல்கலைக்கழக கவுன்சலிங்கில் தேசிய அளவில் எந்த மாநில மாணவரும் பங்கேற்கலாம். இந்த கவுன்சலிங் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல்கட்ட கவுன்சலிங்கில் இடம் கிடைக்காதவர்கள் இரண்டாம்கட்ட கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் இடத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஒருவேளை அந்தக் கல்லூரியில் சேரவில்லையென்றால், அவர்கள் கட்டிய இரண்டு லட்சம் ரூபாய் திருப்பித் தரப்படாது. இரண்டு கட்ட கவுன்சலிங்களிலும் நிரப்பப்படாத சீட்களை வைத்து ‘மாப்-அப்’ கவுன்சலிங் நடத்தப்படும். அதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இவற்றிலும் நிரப்பப்படாத சீட்களை அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்களிடமே அரசு ஒப்படைத்துவிடும். அவற்றை ‘நிரப்பப்படாத இடங்கள்’ என்கிற அடிப்படையில் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ளலாம்.

“இப்படி திருப்பியளிக்கப்படும் இடங்களை நிரப்ப, மருத்துவ கவுன்சில் எந்த விதிமுறையையும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தனியார் நிர்வாகங்களுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல்தான். அவர்கள் என்ன தொகையை கட்டணமாகச் சொல்கிறார்களோ அதைக் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. கோடிகளில் நீளும் கட்டணக் கொள்ளை. நீட் ரேங்கையெல்லாம் சீண்டவே மாட்டார்கள். இப்படி கோடிக்கணக்கில் பணம் செலவழித்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள், மக்களுக்கு மருத்துவ சேவையா செய்யப்போகிறார்கள்?” என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் கல்வியாளர் ‘ஆனந்தம்’ செல்வகுமார்.

கோச்சிங் சென்டருக்கு லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து, நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெறும் பணக்கார வீட்டுப்பிள்ளைகள், இதன் வாயிலாக மருத்துவப் படிப்புக்குள் வந்துவிடுவார்கள். இவர்களை வளைக்க, புரோக்கர் படைகளும் தயாராக இருக்கின்றன.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

தமிழகத்தில் இருக்கும் ஒன்பது நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஆண்டுக்கு குறைந்தது ஐந்து சீட்கள் திருப்பித்தரப்படுகின்றன என்றால்கூட, கணக்கில் வராத கட்டணக் கொள்ளையில் அவர்கள் எவ்வளவு கொழிக்கிறார்கள் என்பது புரியும். அதுமட்டுமல்ல, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு கொள்ளையடிக்கும் வியாபாரமாக மருத்துவத்தை மாற்றத் துடிக்கும் 45 மருத்துவ வியாபாரிகளை அந்தக் கல்லூரிகள் உருவாக்குகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுமட்டுமல்ல... மத்திய அரசு நடத்தும் இந்த கவுன்சலிங்கில், நீட்டில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்ற சாதாரணக் குடும்பத்துப் பிள்ளைகள் நிறையபேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு இடமும் கிடைத்துவிடும். ஆனால், கல்லூரி நிர்வாகம் கேட்கும் தொகையைக் கொடுக்க முடியாது. அதனால், அவர்களும் போட்டியிலிருந்து விலகிவிடுவர். அப்படி மாணவர்கள் சேராத இடத்தையும் காலி இடமாகக் கருதி கல்லூரி நிர்வாகமே தங்கள் விருப்பத்துக்கு அட்மிஷன் போட்டுக்கொள்ளும்.

“தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழக அட்மிஷன் என்பது புரோக்கர்கள் ராஜ்ஜியம்தான். நீங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பு கிறீர்கள் எனத் தெரிந்தால் போதும்... வீடு தேடி வந்துவிடுவார்கள். நீட் தேர்வில் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்ற மாணவர்களை இவர்களே தேர்வுசெய்து கவுன்சலிங்கில் பங்கேற்கச்செய்து இடத்தை ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள். பெரிய பார்ட்டியாகச் சிக்கும்போது, கவுன்சலிங் கில் பங்கேற்ற மாணவருக்கு ஒரு தொகையைக் கொடுத்துக் கழற்றிவிட்டுவிட்டு, இவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்து விடுவார்கள். ஏற்கெனவே திரைமறைவில் நடந்த தவறுகளை சட்டபூர்வமாக்கியது தவிர, நீட் சாதித்தது ஒன்றுமில்லை” என்கிறார் தமிழகத்தின் மூத்த மருத்துவர் ஒருவர்.

நீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்!

இதில் இன்னோர் அதிர்ச்சியும் மறைந்திருக் கிறது. நீட் தேர்வு வருவதற்கு முன்பு தமிழகத்தின் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேனேஜ்மென்ட் கோட்டாக்களில் சொற்பமாகவே வெளிமாநில மாணவர்கள் சேர்வார்கள். நீட், நிறைய வட இந்திய மாணவர்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

ஆம், நீட் தேர்வுக்கு முன்பு வரை தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 99 சதவிகிதம் பேர் தமிழக மாணவர்கள்தான் படித்தனர். நீட் தேர்வுக்குப் பிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தின் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்த மருத்துவ மாணவர்களில் ஒன்பது பேர் மட்டுமே தமிழர்கள். மீதம் அனைவருமே பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

முதுகலை கோர்ஸுக்குத் தடை!

தமிழகத்தில் கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கோயம்புத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை அன்னை மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆகிய நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் உரிமங்கள் 2017-ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டன. இவற்றில் கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, மாதா மருத்துவக் கல்லூரி, மேல்மருத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி ஆகியவை மீண்டும் உரிமம் பெற்று இயங்குகின்றன. 2018-19ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள ஒன்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதுகலைப் பட்டம் மற்றும் டிப்ளோமா கோர்ஸ் தொடங்கவும் மருத்துவ சீட்களை அதிகரிக்கவும் தடைவிதித் திருக்கிறது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism