Published:Updated:

தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி; சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு!

சென்னை மாநிலக் கல்லூரி

தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதற்கு உ.வே.சாமிநாதருக்கே முன்னோடியாய்ச் செயல்பட்ட சி.வை.தாமோதரனாரும் இங்கு தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மகாகவி பாரதியார், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்றோரும் இக்கல்லூரியில் உரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி; சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு!

தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதற்கு உ.வே.சாமிநாதருக்கே முன்னோடியாய்ச் செயல்பட்ட சி.வை.தாமோதரனாரும் இங்கு தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மகாகவி பாரதியார், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்றோரும் இக்கல்லூரியில் உரையாற்றிச் சிறப்பித்துள்ளனர்.

Published:Updated:
சென்னை மாநிலக் கல்லூரி
சென்னையின் பரபரப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் எழில்மிகு அறிவுசார்கல்விக்கூடமாக நிமிர்ந்து நிற்கிறது மாநிலக் கல்லூரி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி இதுவே. ஆயிரக்கணக்கான சான்றோர்களையும் ஆய்வறிஞர்களையும், அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கிய சென்னையின் பாரம்பரியமான அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மாநிலக் கல்லூரியின் வரலாறு நீண்ட நெடியது.
சென்னை மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி

சென்னை மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்திற்கான கல்விக்குழு:

1820-ம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராகப் பதவி பெற்றவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில் நவீனக் கல்விமுறை தோன்றக் காரணமாக இருந்த முன்னோடிகளில் இவரும் ஒருவர். தாமஸ் மன்றோவின் எண்ணப்படி சென்னை மாகாணத்திற்கென பொதுக்கல்விக்குழு ஒன்று 1826-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் குழு ஆரம்பிக்கப்பட்ட சிறுது காலத்திலேயே தாமஸ் மன்றோ மறைந்தார். அவர் மறைந்த பின்னரும் அவரின் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. சென்னை மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக தாயகக் கல்விக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. பொதுக்கல்விக்குழு ஏற்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1836-ம் ஆண்டில் பொதுக்கல்விக்குழுவின் பணியைத் தாயகக்குழு ஏற்றது. இந்தத் தாயகக்கல்வி மேம்பாட்டுக் குழு ஆயத்தத்திட்டம் ஒன்றைத் தயாரித்தது. அப்போதைய ஆளுநர் மேதகு எல்ஃபின்ஸ்டன் பிரபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆயத்தத்திட்டம் ஆய்வுக்குக் கொண்டு வரப்பட்டது.

அக்கூட்டத்தில் கல்விக்குழு தனக்குரிய அடிப்படைப் பணியான கல்வி நிலையம் அமைக்கும் பணியிலிருந்து நழுவியிருப்பதைச் சுட்டிக்காட்டிய எல்ஃபின்ஸ்டன் பிரபு அக்கூட்டத்தில் சென்னை மாகாணத்திற்கெனப் பல்கலைக்கழகம் ஒன்று அமைப்பது, அப்பல்கலைக்கழகத்தில் இரண்டு முதன்மைத்துறைகளைக் கொண்டிருப்பது, அந்தப் பல்கலைக்கழகத்திற்கு முன்னோடியாக மையக்கல்லூரி ஒன்றை அமைப்பது, இலக்கியம், மெய்ப்பொருள், அறிவியல் ஆகியவற்றின் மேம்பாட்டில் கல்லூரிக்கல்வித்துறை நாட்டம் செலுத்துதல் உள்ளிட்ட 19 அடிப்படை முடிவுகளை முன்மொழிந்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்.

சென்னை மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி

மேதகு எல்ஃபின்ஸ்டன் பிரபுவின் முடிவுகளை 1840-ம் ஆண்டில் ஆங்கில அரசும் ஏற்றுக்கொண்டது. அந்தத் தீர்மானங்களை அடிப்படை விதிகளாகக் கொள்ளுமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் பல்கலைக்கழக ஆட்சிக்குழு அமைக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி 8 அன்று முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கல்வி நிலையத்திற்கான முதல்வரைத் தேடும் பொறுப்பும் எல்ஃபின்ஸ்டன் பிரபுவுக்கே வழங்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்லூரியின் முதலாவது முதல்வர்:

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற பேராசிரியர் அயர் பட்டர்ன் பவல் முதல்வர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பவல்லும் அப்பணியை ஏற்றுக்கொண்டார். கடல் கடந்து அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ள பல நாள்கள் ஆகும் என்பதால் பவல் வரும் வரை கொல்கத்தா ஹூக்ளி கல்லூரிப் பேராசிரியர் திரு.கூப்பர் இப்பணியை ஏற்றார். பேராசிரியர் அயர் பட்டர்ன் பவல் தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை வழியாக சென்னை வந்து கல்லூரியின் முதல்வர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

அயர் பட்டர்ன் பவல்
அயர் பட்டர்ன் பவல்

ஆயத்தப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தொடக்கம்:

சென்னை மாநிலக் கல்லூரிக்கான ஆயத்தப்பள்ளி, கொல்கத்தா ஹூக்ளி கல்லூரிப் பேராசிரியர் திரு.கூப்பரைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு எழும்பூரில் உள்ள எடின்பர்க் இல்லத்தில் 1840-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. பின்னாளில் இதுவே மாநிலக் கல்லூரியாக உருவானது. எடின்பர்க் இல்லம் ஆயத்தப் பள்ளிக்கு பொருத்தமான இடமாக இல்லாததால் இந்தப் பள்ளி பிராட்வே பகுதிக்கு மாற்றப்பட்டது. 1841-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழும்பூர் பாந்தியன் சாலையில் (சென்னை உயர்நீதிமன்றம் அமைந்திருக்கும்) உயர்நிலைப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளியும் உருவாக்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய்:

1852-ம் ஆண்டு ஏப்ரலில் புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் மேதகு சர் ஹென்றி பொட்டிங்கர் பல்கலைக்கழகக் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அந்தக் குழு 1853-ல் கல்லூரித்துறையை நிறுவியது. 1855-ம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பொதுக்கல்வித்துறைக்குக் கல்லூரிக் கல்வி மாற்றப்பட்டு மாநிலக் கல்லூரி என்ற பெயரும் அதற்கு வழங்கப்பட்டது. மாநிலக் கல்லூரி வளர்ச்சி பெற்ற 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சென்னைப் பல்கலைக்கழகமே தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை ஏற்று மாநிலக் கல்லூரிசெயல்படுத்தத் தொடங்கியது. இதனால் 'சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய்’ என்ற பெருமை மாநிலக்கல்லூரியையே சாரும்.

சென்னை மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி

கல்லூரியில் அமைத்திருந்த துறைகள்:

இளங்கலைப் படிப்புகளை மட்டுமே பயிற்றுவித்த மாநிலக் கல்லூரி 1911-ம் ஆண்டு முதல் சிறப்புப் பட்ட வகுப்புகளான ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு முதலியவற்றைப் பயிற்றுவித்தது. இந்தக் காலகட்டத்தில் முதுகலைப் பட்ட வகுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.1931-ல் இளம் அறிவியல் சிறப்புப் பட்ட வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

புதிய கட்டடம்:

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வந்த கல்லூரிக்கு நிலையான கட்டடம் ஒன்றை மதராசப்பட்டினக் கடற்கரையில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் மேதகு நேப்பியர் பிரபுவால் கல்லூரியின் தொன்மை வாய்ந்த முதன்மைக் கட்டடத்திற்கு 1867 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கல்லூரிக் கட்டடத்தைக் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. சென்னை மெரினா கடற்கரையில் அழகுறக் காட்சியளிக்கும் தொன்மையான கட்டடம் இதுவே. 1879-ம் ஆண்டு மார்ச் 25-ம் நாளன்று எடின்பரோ கோமகனால் கல்லூரியின் முதன்மைக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. மேலும், மாநிலக் கல்லூரியின் விரைவான வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பல துறைகளும், 1856-ல் தொடக்கப்பள்ளியும், 1884-ல் உயர்நிலைப்பள்ளியும், 1891-ல் தொடங்கப்பட்ட சட்ட வகுப்புகளும் கல்லூரியில் இருந்து விடுவிக்கப்பட்டன. மேலும், 1948-ல் இன்டர்மீடியட், 1958-ல் ஆனர்ஸ் சிறப்புப் பட்டங்கள், 1982-ல் பருவமுறைப் படிப்புகள் போன்றவையும் கைவிடப்பட்டன.

சென்னை மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி
Nishat Hussain

பவள விழா கண்ட கல்லூரி:

1891-ம் ஆண்டில் கல்லூரியின் பொன்விழா கொண்டாடப்பட்டது. மாநிலக்கல்லூரியின் மூன்றாவது முதல்வராக இருந்த டேவிட் டங்கன் பொன்விழாவைச் சிறப்பித்தார். பொன்விழாவை முன்னிட்டு பல்வேறு முதுநிலைப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. கலைப்பிரிவில் சிறப்புப் பட்டங்களை வழங்கிய முதல் கல்லூரியாகச் சென்னை மாநிலக்கல்லூரி விளங்கியது. 1931-ம் ஆண்டில் இளம் அறிவியல் சிறப்புப் பட்ட வகுப்புகள் (B.sc.Honours) தொடங்கப்பட்டன. 1940-ம் ஆண்டில் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. இவ்விழாவை அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் மேதகு எர்க்ஸின் பிரபு தொடக்கி வைத்தார். கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவல்லிக்கேணி முழுவதும் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கும் பைசன் மணிகாட்டி நிறுவப்பட்டது. கல்லூரி தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நூற்றாண்டுப் பொன்விழா 05/04/1991 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் மேதகு பீஷ்ம நாராயண சிங் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டில் மாநிலக் கல்லூரியின் நூற்றாண்டுப் பவளவிழா நடைபெற்றது இவ்விழாவில் இந்திய நாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆளுமைகளையும் பேரறிஞர்களையும் உருவாக்கிய கல்லூரி:

நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் முனைவர் எஸ்.சந்திரசேகர் போன்ற ஆளுமைகள் பணியாற்றிய கல்லூரியாக மாநிலக் கல்லூரி திகழ்கிறது. நோபல் பரிசுக்கு இணையாக ஏபல் பரிசு பெற்ற எஸ்.ஆர்.சீனிவாச வரதனும் இதே கல்லூரியில் பயின்றவர். பாரத ரத்னா விருது பெற்ற மூதறிஞர் இராஜாஜி மற்றும் சி. சுப்ரமணியம் போன்ற அறிஞர்கள் பலரும் இங்கே பயின்றவர்களே. சங்க இலக்கியங்களையும் ஏட்டுச் சுவடிகளில் இருந்த தொன்மையான இலக்கியங்கள் பலவற்றையும் தமிழ்நாடு முழுவதும் தேடிக் கண்டறிந்து தொகுத்து மீட்டுப் பதிப்பித்துத் தந்தவரும் தமிழ்த்தாத்தா எனத் தமிழ்கூறு நல்லுலகால் போற்றப்படுபவருமான உ.வே.சாமிநாதர் இங்கு தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவரின் தமிழ்த்தொண்டைச் சிறப்பிக்கும் வகையில் கல்லூரியின் முன் வளாகத்தில் அவரின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதற்கு உ.வே.சாமிநாதருக்கே முன்னோடியாய்ச் செயல்பட்ட சி.வை.தாமோதரனாரும் இங்கு தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மகாகவி பாரதியார், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்றோரும் இக்கல்லூரியில் உரையாற்றிச் சிறப்பித்துள்ளனர். மேலும் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளான சர்.பி.டி.தியாகராயர், டி.எம்.நாயர் போன்றோர் இக்கல்லூரியில் பயின்றவர்கள். இக்கல்லூரியின் அரசியல் அறிவியல்துறை இந்திய நாட்டின் ஆளுமைகள் பலரும் கல்வி பயின்ற துறை. இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையில் (1972-75-ல்) பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநிலக் கல்லூரி (File Photo)
சென்னை மாநிலக் கல்லூரி (File Photo)

கல்லூரியின் தற்போதைய நிலை:

1987-ம் ஆண்டு முதல் தன்னாட்சி பெற்று விளங்கும் இக்கல்லூரியில் மொத்தம் 26 இளங்கலைப் பாடப்பிரிவுகள், முதுநிலைப் பாடப்பிரிவுகள், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முழுநேரப் பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வுகளுக்கும் முக்கியக் களமாகத் திகழ்கிறது. 260 முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக இளம் வணிகவியல், இளநிலைக் கணினி பண்பாட்டியல் பாடப்பிரிவுகள் தமிழ்நாட்டில் இந்தக் கல்லூரியில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. பார்வைத் திறனற்ற பல மாணவர்கள் இக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுவரையிலும் பயின்றுவருகின்றனர். மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாட்டின் மூன்றாவது சிறந்த உயர்கல்வி நிறுவனமாக சென்னை மாநிலக் கல்லூரி இடம்பிடித்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.

சுமார் 182 ஆண்டுக்கால வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட மாநிலக் கல்லூரி தனது தனித்துவமான மரபை இன்னும் பேணிக்காத்துவருகிறது.