சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கல்விக்கடன் - இனி கவலை வேண்டாம்!

கல்விக்கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்விக்கடன்

ரெண்டு வருஷம் முன்னாடி எங்க அக்கா இன்ஜினீயரிங் படிக்க பிரைவேட் காலேஜுல சீட்டு கிடைச்சது. ஆனா, ஃபீஸ் கட்ட வழியில்லை.

“கல்வி கற்க வங்கிகள் கொடுக்கும் கடன், தனி நபருக்கானது அல்ல. ஒரு தலைமுறையின் வளர்ச்சிக்கானது" என்று என்னிடம் கூறிக்கொண்டே அந்த முகாமில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தில் அமர்ந்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க வந்த மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் சொல்லத் தொடங்குகிறார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

கல்விக்கடன் - இனி கவலை வேண்டாம்!

மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகமே ஆயிரக்கணக்கான மாணவர்களாலும் பெற்றோர்களாலும் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் தன்னார்வலர்கள், மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்து, அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய வங்கியைக் குறிப்பிட்டு இன்னொரு பகுதிக்கு அனுப்புகிறார்கள். அங்கு அவர்களின் கல்வி விவரங்கள், கடன் தொகை அனைத்தும் வங்கியின் இணையதளத்தில் ஏற்றப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது. “வங்கிக்குச் சென்று அசல் சான்றுகளை ஒப்படைத்துக் கடன் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்று நம்பிக்கையுடன் அனுப்புகிறார்கள். அந்த வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றும் வங்கி ஊழியர்கள், மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பொறுமையாக பதில் அளிக்கிறார்கள். கடந்த 20-ம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்த கல்விக்கடன் சிறப்பு முகாமில்தான் இந்தக் காட்சிகளைக் காண முடிந்தது.

கல்விக்கடன் - இனி கவலை வேண்டாம்!

‘`கல்விக்கடன்தான் அனைத்து வங்கியிலும் வழங்குகிறார்களே, பிறகு இந்த முகாமுக்கு ஏன் வந்தீர்கள்?’’ என்று, கிராமத்திலிருந்து வந்த மாணவியிடம் கேட்டோம். ‘`ரெண்டு வருஷம் முன்னாடி எங்க அக்கா இன்ஜினீயரிங் படிக்க பிரைவேட் காலேஜுல சீட்டு கிடைச்சது. ஆனா, ஃபீஸ் கட்ட வழியில்லை. அப்ப, எங்க ஊரு பேங்குல கல்விக்கடன் கேட்டதுக்கு, ரொம்ப நாள் அலையவிட்டு கடைசியில லோன் இல்லன்னு சொல்லிட்டாங்க. அதனால அக்கா ஆசைப்பட்டதைப் படிக்க முடியல. ஆனா, இப்ப நான் இன்ஜினீயரிங் போறதுக்கு இந்த முகாம் உதவும்; பேங்குகாரங்க ஏதாவது இழுத்தடிச்சா எம்.பி கிட்டேயே முறையிடலாம்னு நான் படிச்ச ஸ்கூல்ல சொன்னாங்க. நம்பிக்கையில்லாமல்தான் இங்க வந்தேன். எந்தப் பிரச்னையும் இல்லாமல் லோன் வாங்க வாய்ப்பு கிடைச்சிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியாக. இப்படி இந்தக் கல்விக்கடன் முகாமுக்கு வந்திருந்த ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை கலெக்டர் அனீஷ் சேகருடன் ஆலோசித்த சு.வெங்கடேசன், இதற்காக உடனே ஒரு குழுவை ஏற்படுத்தி வேலைகளை விரைவாக்கியுள்ளார். எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கல்விக்கடன் விண்ணப்பங்களைப் பெற கலெக்டர் அலுவலகத்திலேயே தனிப்பிரிவும் தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மூன்று முறை வங்கி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. குழு அமைத்த ஆரம்ப நிலையிலேயே 60 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வழங்கப்பட்டது. இதில், மதுரை நகரில் உள்ள மாணவர்கள் மட்டுமே பயனடைந்த நிலையில், மாவட்டம் முழுக்க உள்ள மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்று முடிவெடுத்துதான் 500 கோடி ரூபாய் இலக்குடன் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாம் நடந்த நாளில் மட்டும் 171 மாணவர்களுக்கு 11.81 கோடி ரூபாய் கல்விக்கடன் உடனடியாக வழங்கப்பட்டது. விண்ணப்பித்த 1,209 மாணவர்களுக்கும் கல்விக்கடன் உறுதியாகியுள்ளது. உண்மையிலேயே இது பெரிய சாதனைதான்.

நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், “கல்விக்கடன் கிடைக்கவில்லை என்று பல பெற்றோர்கள் என்னிடம் புகார் சொல்வார்கள். ஒவ்வொரு புகாருக்காகவும் வங்கிகளில் பேசுவதைவிட, கல்விக்கடன் வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என்று முடிவு செய்து, சில மாதங்களுக்கு முன் கலெக்டருடன் பேசி கல்வித்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் இணைந்து குழு அமைத்து, ஆய்வுக்கூட்டங்களை நடத்தி இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பிரிவைத் தொடங்கி 60 கோடி ரூபாய் அளவுக்குக் கல்விக்கடன் வழங்கப்பட்டது.

கல்விக்கடன் - இனி கவலை வேண்டாம்!

கல்விக்கடன் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்பதைவிட எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வு செய்தோம். நியாயமில்லாத எந்தக் காரணத்துக்காகவும் ஒரு மாணவனுக்குக் கல்விக்கடன் நிராகரிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். மாவட்டத்திலுள்ள முன்னோடி வங்கி உள்ளிட்ட பொதுத்துறை, தனியார்துறை வங்கிகள் அனைத்தும் எங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். வந்திருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிறப்பாக சேவை செய்த வங்கி ஊழியர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்களின் பணி சிறப்பானது’’ என்றார்.

கல்விக்கனவு கைகூட இத்தகைய முயற்சிகள் தொடரட்டும்!