Published:Updated:

+2 தேர்வு ரத்து சரிதானா?

+2 தேர்வு ரத்து சரிதானா?
பிரீமியம் ஸ்டோரி
+2 தேர்வு ரத்து சரிதானா?

முன்பிருந்த எடப்பாடி அரசு, மத்திய அரசின் முடிவைப் பொறுத்தே தமிழகத்தில் கல்வி சார்ந்த முடிவுகளை எடுத்துவந்தது.

+2 தேர்வு ரத்து சரிதானா?

முன்பிருந்த எடப்பாடி அரசு, மத்திய அரசின் முடிவைப் பொறுத்தே தமிழகத்தில் கல்வி சார்ந்த முடிவுகளை எடுத்துவந்தது.

Published:Updated:
+2 தேர்வு ரத்து சரிதானா?
பிரீமியம் ஸ்டோரி
+2 தேர்வு ரத்து சரிதானா?

சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பிளஸ் டூ தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்திலும் பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘கண்டிப்பாகத் தேர்வு நடத்துவோம்’ என்ற நிலைப்பாட்டில் இருந்த தமிழக அரசு, மருத்துவக்குழுவினர் அறிக்கையின் அடிப்படையில், மாணவர்களின் உடல்நலன், மனநலன் கருதித் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. கல்லூரிச் சேர்க்கைக்கு பிளஸ் டூ மதிப்பெண்களே அடிப்படை என்ற நிலையில், மதிப்பீடு செய்வது பற்றி ஆராய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித்துறைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சில தலைமையாசிரியர்கள் அடங்கிய குழுவொன்றையும் தமிழக அரசு அமைத்திருக்கிறது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வு ரத்து சரிதானா?

இவ்வாண்டு சுமார் 9 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ படிக்கிறார்கள். இதில் சுமார் மூன்றரை லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள். தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியில் வகுப்புகளையும் தேர்வுகளையும் நடத்தி வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் ஒரு சேனல் உருவாக்கப்பட்டது. ஆனால் அது மாணவர்களை ஈர்க்கவில்லை. கடந்த ஜனவரி வரை அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளே இல்லாமல் இருந்தார்கள். தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியதால் ஜனவரி மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. பாடங்களும் குறைக்கப்பட்டன. ஆனால், மார்ச் மாதத்தோடு அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.

முன்பிருந்த எடப்பாடி அரசு, மத்திய அரசின் முடிவைப் பொறுத்தே தமிழகத்தில் கல்வி சார்ந்த முடிவுகளை எடுத்துவந்தது. ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தவுடன் தமிழக அரசும் ரத்து செய்தது. பிளஸ் டூ தேர்வு நடக்குமா நடக்காதா என்று தெரியாமல் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்படும்’ என்று அறிவித்தார். இந்தச்சூழலில் மத்திய அரசு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பிளஸ் டூ தேர்வுகளை ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசு பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியது. பெரும்பாலானோர் தேர்வு நடத்தவேண்டும் என்றே கருத்துத் தெரிவித்தார்கள். இறுதியில் மருத்துவர்கள், உளவியலாளர்கள் ஆலோசனைப்படி தேர்வை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு.

‘‘மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. அக்கொள்கையின்படி, பிளஸ் டூ முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் சேர தேசியத் தேர்வு முகமை நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். ஏற்கெனவே மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட் தேர்வு பாகுபாட்டை அதிகரிக்கிறது; எளிய குடும்பத்து மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கிறது’ என்றெல்லாம் குரல்கள் வலுப்பெற்று வரும் நிலையில், பிற படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவர முனைகிறது மத்திய அரசு. அதற்கான தொடக்கமாகத்தான் சி.பி.எஸ்.இ பிளஸ் டூ தேர்வை ரத்து செய்திருக்கிறது’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

பிளஸ் டூ தேர்வை ரத்து செய்துள்ள கர்நாடக மாநில அரசு நீட், தேசியத் தேர்வு முகமை நடத்தவுள்ள நுழைவுத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடக்கும் என்று அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களும் பிளஸ் டூ தேர்வை ரத்து செய்துவிட்டு தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வுக்காகக் காத்திருக்கின்றன. இதேநிலை, தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் கவலை.

தி.மு.க தனது தேர்தல் அறிக்கை யிலேயே, ‘நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம்’ என்று அறிவித்தது. மேலும் ‘புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்றும் சொன்னார்கள். பிளஸ் டூ தேர்வை ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழக அரசு நிர்பந்தத்துக்குள் சிக்கியிருக்கிறது என்பதே கல்வியாளர்களின் கவலை.

+2 தேர்வு ரத்து சரிதானா?

தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரி மாணவர் சேர்க்கை நடக்கும்’ என்பதை அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார். ஆனால், ‘இரண்டாண்டுகள் கல்விச்சூழலே குலைந்தும் பாகுபட்டும் கிடக்கும் சூழலில், பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு என்பது எந்த அளவுக்கு சரியாக நடக்கும்’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

“மாணவர்களின் உடல் நலன், மனநலம் கருதியும், காலமின்மை கருதியும் தமிழக அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்திருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் பரிசீலனை செய்து முடிவெடுத்திருக்க வேண்டும். வழக்கமான தேர்வைப்போல இல்லாமல், அறிவை எடைபோடும் அளவுக்கேனும் ஒரு ஸ்மார்ட் தேர்வை நடத்தியிருக்கலாம். ஒரு வார காலத்துக்கு ஆசிரியர்களை வைத்து ஓரியண்டேஷன் வகுப்புகளை நடத்தி, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் அரசு வளங்களைப் பயன்படுத்தி இதை நடத்தியிருக்க முடியும். பிளஸ் 2 தேர்வை வைத்துதான் மாணவர்களின் வாழ்க்கையே அமையப்போகிறது. அதை வைத்துதான் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் படிப்புகள் என்றாகும்போது இதை மேலும் அக்கறையோடு அணுகவேண்டும். தமிழக அரசு இந்தச் சூழலில் இப்படியொரு முடிவை எடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது...” என்கிறார், மைசூர் ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் கல்வியாளருமான ஜவஹர் நேசன்.

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் பலவும் பிளஸ் டூ தேர்வு ரத்தை வரவேற்றுள்ளன. ஆனால் பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், பிளஸ் டூ தேர்வுகளை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி யிருந்தது. இந்த சங்கத்தின் தலைவர் பொன்.செல்வராஜ் மதிப்பீடு செய்வதில் உள்ள வாய்ப்புகளையும் பிரச்னைகளையும் பகிர்ந்து கொண்டார்.

“அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த கல்வியாண்டு முதலே மாணவர்களோடு தொடர்பில்தான் இருந்தார்கள். வாட்ஸப் மூலம் கேள்விகள் அனுப்புவது, உரையாடுவதெல்லாம் நடந்ததுதான். ஆனாலும் அது முழுமையான கற்றல் செயல்பாடு என்று சொல்லமுடியாது. பெருந்தொற்றுச் சூழலில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தோம். ஜனவரியில் முழுமையாக வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டோம். டீச்சிங் போல இல்லாமல் கோச்சிங் மாதிரி அந்த வகுப்புகள் நடந்தன. ஒரு வாரம் வகுப்பு, ஒரு வாரம் தேர்வு என்று திட்டமிட்டு நடத்தினோம். இதுவரை மூன்று சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுதவிர, ஆன்லைன் வழியில் மூன்று சுழல் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகள் முழுப் பாடத்திட்டங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்டன.

கடந்த ஆண்டு, தொற்றுப்பரவலால் பிளஸ் ஒன் தேர்வில் வேதியியல், பொருளியல் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன. தற்போது பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் அந்த இரண்டு பாடங்களைத் தவிர எல்லாத் தேர்வுகளையும் எழுதியிருக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களையும் கருத்தில்கொண்டு இவ்வாண்டு எழுதிய சிறு தேர்வுகள், சுழல் தேர்வுகளின் மதிப்பெண்களையும் சேர்த்து இறுதி மதிப்பெண் மதிப்பிடலாம். ஆனாலும் இந்த மதிப்பீடு எந்த அளவுக்கு முறையாக இருக்கும் என்ற சந்தேகமும் இருக்கிறது...’’ என்கிறார் பொன்.செல்வராஜ்.

பெருந்தொற்றால் பல நூறு குடும்பங்கள் புலம்பெயர்ந்திருக்கின்றன. பல மாணவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். 10 முதல் 15 சதவிகித அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளியோடு தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள். சுழல் தேர்வுகளிலோ, சிறு தேர்வுகளிலோ அவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கான இறுதி மதிப்பெண்கள் எப்படித் தீர்மானிக்கப்படும் என்ற கேள்வி முக்கியமானது.

ஜவஹர் நேசன், பொன்.செல்வராஜ், ஜி.ஆர். ஸ்ரீதர்
ஜவஹர் நேசன், பொன்.செல்வராஜ், ஜி.ஆர். ஸ்ரீதர்

சென்ற கல்வியாண்டின் தொடக்கத்திலேயே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழிக்கல்வியைத் தொடங்கிவிட்டன. பல பள்ளிகள் முழு நேர வகுப்புகளை நடத்தின. காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வுகளையும் தனியார் பள்ளிகள் நடத்தி முடித்திருக்கின்றன. ஆன்லைன் வழிக்கல்வியால் பயன் உண்டா இல்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய கேள்வி. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் எந்த அளவுகோல் வைத்து மதிப்பெண் இறுதி செய்யப்படும் என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டும்.

“தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்திமுடித்து விட்டன. மாணவர்கள் மாதத் தேர்வுகள் தொடங்கி காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளைக்கூட எழுதி முடித்து விட்டார்கள். இந்தச்சூழலில், அனைவருக்கும் பொதுவான மதிப்பீட்டுமுறை என்பது பொருத்தமாக இருக்காது. கொரோனாத் தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் இந்தச்சூழலிலும் கடும் உழைப்பைச் செலுத்தி ஆர்வத்தோடு படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைத்துவிடக்கூடாது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்காமல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தற்காலிகமான பொது நடைமுறையை அரசு உருவாக்கவேண்டும். உதாரணத்துக்கு, இந்த ஆண்டு மட்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து கல்லூரிச் சேர்க்கை நடத்தலாம். மாணவர்களின் உளவியலும், ஆர்வமும் பாதித்துவிடக்கூடாது என்பதே எங்கள் கவலை...” என்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்கத் தலைவர் ஜி.ஆர். ஸ்ரீதர்.

அரசு நியமித்துள்ள மதிப்பீட்டுக் குழுவின் செயல்பாடுகளையும் கருத்தையும் அறிய முயன்றேன். “எல்லாம் விவாத அளவிலேயே இருக்கிறது. எதுவும் வரையறை செய்யப்படவில்லை. பரிந்துரைகள் இறுதியானதும் பேசுகிறோம்” என்றார்கள்.

தமிழக அரசு முழுமூச்சோடு கொரோனாவை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் உறுதியாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. மதிப்பீட்டுக் குழப்பங்களால் இன்னுமொரு நுழைவுத்தேர்வு தமிழகத்துக்குள் திணிக்கப்பட்டுவிடக்கூடாது. பிளஸ் டூ தேர்வு அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யவேண்டும்.

வாய்ப்பற்றவர்களுக்கும் வசதியானவர் களுக்குமான பாகுபாட்டைக் களைந்து நியாயமான மதிப்பீட்டு முறையை உருவாக்க வேண்டும். அது எந்த ஒரு மாணவருக்கும் உயர்கல்விக்கான வாசலை மூடிவிடுவதாக இருக்கக்கூடாது.