Published:Updated:

அருகிவருகிறதா ஆசிரியர் சமூகம்?

கலங்கவைக்கும் மூடுவிழாக்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
கலங்கவைக்கும் மூடுவிழாக்கள்...

கலங்கவைக்கும் மூடுவிழாக்கள்...

`கல்வி வள்ளலே...’, `மாணவர்களின் வழிகாட்டியே...’ என்றெல்லாம் புகழப்பட்ட ‘கல்வித்தந்தை’களின் ஆர்ப்பாட்டங்களை சமீபக்காலமாகக் காண முடிவதில்லை. ஆம், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்த காலம் மலையேறிவிட்டது. தமிழகத்தில் இருந்த 32 மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு மட்டுமே தனியார் உட்பட 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன! என்ன காரணம்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரதான காரணம், மாணவர்கள் சேர்க்கையின்மை. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஏழாண்டுகளுக்கும் மேலாக வேலை கிடைக்காதது, புதிய ஆசிரியர் பணியிட நியமனங்களுக்கு அனுமதி கொடுக்காதது, தனியார் கல்வி நிறுவனங்களில் மிகக் குறைவான ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியர் கனவைத் தொலைக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள் மாணவர்கள். இது குறித்து அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார்.

``பொதுவாக, தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்தான் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் மூடப்படும். இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. தற்போது 20 மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்குத் தடைவிதித்திருக்கிறது அரசு. அங்கு படித்த மாணவர்களும் கடந்த ஆண்டுடன் படிப்பை முடித்துவிட்டனர். இதனால் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், மாணவர் விடுதிகள், அறிவியல் ஆய்வகங்கள் பயன்பாடில்லாமல் கிடக்கின்றன.

அருகிவருகிறதா ஆசிரியர் சமூகம்?

அரசாங்கத்தின் தாமதமான அறிவிப்புகள்தான் மாணவர் சேர்க்கை குறைந்ததற்குக் காரணம். அரசாணை 106-ன்படி, கல்வியாண்டு என்பதை ஜூலை முதல் ஜூன் வரை வரையறுத்துள்ளனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் ஜூன் முதல் மே மாதம் வரைதான் கல்வியாண்டாகப் பார்க்கப்படுகிறது. இதனால், ஏப்ரல் மாதமே ப்ளஸ் டூ மாணவர்களை வளைக்கும் வேலைகளில் தனியார் நிறுவனங்கள் இறங்கிவிடுகின்றன. அரசு நிறுவனங்கள் காற்றாடுகின்றன.

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் 50 இடங்கள் வரை அட்மிஷன் போடலாம். பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவு மாணவர்கள் என்றால், சொந்தமாகப் பணம் கட்டிப் படிக்க வேண்டும். எஸ்.சி மாணவர்களுக்கு அந்தச் சிரமம் இல்லை. அரசு உதவித்தொகையாக 23,500 ரூபாய் கொடுக்கிறது. அதனால், தனியார் நிறுவனங்களில் 50 இடங்களையும் எஸ்.சி பிரிவு மாணவர்களை வைத்தே நிரப்புகிறார்கள். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அப்படி செய்ய இயலாது. மேலும், இந்த ஆண்டு முதல் அந்த உதவித்தொகையையும் 13,500 ரூபாயாகக் குறைத்துவிட்டது அரசு. இதுவும் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு ஒரு காரணம்.

மாணவர் சேர்க்கையிலும் கடந்த ஆண்டு வேட்டுவைத்தது அரசு. `50 மாணவர்களில் குறைந்தது 15 பேர் சேர்ந்தால் மட்டுமே பயிற்சி நிறுவனங்களை நடத்த முடியும்’ என்று உத்தரவிட்டது. இதனால், பலரால் பயிற்சி நிறுவனங்களை நடத்த முடியவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24 பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டுவந்தன. இந்த ஆண்டு இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, ஆசிரியர் பயிற்சி பெற்று, கடந்தாண்டு அரசு நடத்திய தகுதித்தேர்வு எழுதிய 4,000 மாணவர்களில், 105 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர். அந்த 105 பேரும் அரசு மாவட்டப் பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள். பல தனியார் பள்ளிகளில் பயிற்சியின் தரம் அப்படி இருக்கிறது. தவிர, எஸ்.சி மாணவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி களில், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நீலகிரி, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர் உட்பட ஏழு மாவட்டங்களில் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தற்போதுவரை இந்த நிறுவனங்களில் பத்து மாணவர்கள்கூட சேரவில்லை” என்றார் விரக்தியுடன்!

இந்தப் பிரச்னை தொடர்பாகக் கல்வியாளர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ``ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கோச்சிங் மட்டுமே கொடுக்கிறார்கள்; டீச்சிங் கொடுப்பதில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதைச் சிலர் எதிர்க்கிறார்கள். நல்ல ஆசிரியர் வேண்டுமென்றால், தேர்வு அவசியம். இந்தத் தேர்வை எழுதியவர்களில் பலரும் தோல்வி யடைந்தார்கள். ஒரு வேலைக்குத் தகுதியான ஒருவரைத் தேர்வு செய்வதில் என்ன தவறு?

அருகிவருகிறதா ஆசிரியர் சமூகம்?

தி.மு.க., அ.தி.மு.க என ஒவ்வோர் ஆட்சியிலும் 50 லட்சம், 60 லட்சம் என லஞ்சம் வாங்கிக்கொண்டு கணக்கு வழக்கில்லாமல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தொடங்க அனுமதித்தார்கள். நமக்கு எவ்வளவு ஆசிரியர் தேவை இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் பயிற்சி நிறுவனங்களும் தேவை. ஆனால், இதைப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி, தேவைக்கு அதிகமாக ஆசிரியர்களை ‘உற்பத்தி’ செய்தார்கள். அதன் விளைவைத்தான் இன்று அனுபவிக்கிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நாகராஜ முருகனிடம் பேசினோம். ``மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மாணவர்கள் வந்து சேரும்போது, மூடப்பட்ட நிறுவனங்களையும் விடுதிகளையும் மீண்டும் செயல்படவைக்க முடியும். பள்ளிகளை எப்போது திறக்கிறார்களோ, அதைப் பொறுத்து சில முடிவுகளை எடுக்கவிருக்கிறோம். நான் இப்போதுதான் பொறுப்புக்கு வந்திருக்கிறேன்.மற்ற விவரங்களை விரிவாக ஆராய்ந்த பிறகே கூற முடியும்” என்றார்.

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவை நல்ல ஆசான்கள். அரசாங்கம் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பது அழகல்ல!