Published:Updated:

``இதுவரை ரயில்ல போனதே இல்ல; டீச்சருக்கு ரொம்ப தேங்க்ஸ்!"- நெகிழ்ந்த மாணவர்கள்

மாணவர் சுற்றுலா
News
மாணவர் சுற்றுலா

``எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் காட்டுவேலை பாக்குறாங்க. அவங்கக் கிட்ட, ஒருமுறையாவது என்ன ரயிலில் கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன்."

Published:Updated:

``இதுவரை ரயில்ல போனதே இல்ல; டீச்சருக்கு ரொம்ப தேங்க்ஸ்!"- நெகிழ்ந்த மாணவர்கள்

``எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் காட்டுவேலை பாக்குறாங்க. அவங்கக் கிட்ட, ஒருமுறையாவது என்ன ரயிலில் கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன்."

மாணவர் சுற்றுலா
News
மாணவர் சுற்றுலா

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் `இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களின் பணி அப்பகுதி மக்களின் பாராட்டுதலுக்கும் உள்ளாகியிருக்கிறது. மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் அக்கறையினால் முதல் பருவத்தேர்வு விடுமுறையிலும், அவர்களை கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதற்காக அறிவுச் சார் சுற்றுலா, அரசு அலுவலக பணி நடைமுறை அறிதல், இன்பச்சுற்றுலா என ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு பல்வேறு சமூக சிந்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதில் முதல் குழுவாக, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருமலாபுரம் மையத்தில் இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள், பாடம் தொடர்புடைய குகைக்கோயிலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மகிழ்ச்சியூட்டினர்.

ரெயில் பயணம்
ரெயில் பயணம்

இரண்டாவது குழுவாக கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி பகுதி தன்னார்வலர்கள் வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அரசு அலுவலகங்களில் பணி மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்தனர். மூன்றாம் குழுவாக லட்சுமியாபுரம் குறுவளமையத்தின் தன்னார்வலர் குழுத் தலைவர் சிவகாமி, அப்பகுதியில் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களில் இதுவரை ரயிலைப் பார்க்காத மற்றும் ஒருமுறை கூட ரயிலில் பயணம் செய்யாத மாணவ மாணவிகளைத் தேர்வுசெய்து இன்பச் சுற்றுலாவாக சொந்த செலவில் ரயிலில் அழைத்துச் சென்று மாணவர்களை மகிழ்ச்சியடைச் செய்திருக்கின்றனர்.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 18 மாணவ-மாணவிகளை படிக்காசுவைத்தான்பட்டி மையத்தின் தன்னார்வலர் மகாலட்சுமி, கலங்காபேரிபுதூர் குறுவளமையங்களின் தன்னார்வலர்கள் தங்கம், சசிகலா, சந்திரபதனி, கிருஷ்ணன்கோவில் தெரு மையத்தின் தன்னார்வலர் நர்மதா ஆகியோர் ஒருங்கிணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அழைத்து வந்தனர். அங்கிருந்து, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் மதுரை-செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாணவர்களை செங்கோட்டைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். ரயில் பயணத்தின்போது, ரயிலில் சக பயணிகளை மாணவ மாணவிகள் வரவேற்பது மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பு குறித்து சொல்லிக் கொடுத்தனர்.

குழு
குழு

தொடர்ந்து செங்கோட்டை சென்றடைந்த மாணவ, மாணவிகளுக்கு தேநீர், உணவு உள்ளிட்டவற்றை சொந்த செலவில் வழங்கிய தன்னார்வலர்கள், சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் அதே ரயிலில் மாணவர்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வந்தனர். பள்ளியின் பருவத்தேர்வு விடுமுறையைக்கூட மாணவர்கள் பயனுள்ளதாக கழிக்கும் விதம் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள், அவர்கள் மீது அக்கறை எடுத்து செயல்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்டஅலுவலர் ஜோதிமணி ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முதல் முறையாக ரயிலில் பயணம் செய்தது குறித்து மாணவ,மாணவிகளிடம் அனுபவத்தை கேட்டறிந்தோம். அப்போது, "ரயில்ல போனது எங்க எல்லாத்துக்கும் ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. நாங்க ரயிலை டி.வி.லயும் சினிமாலயும் தான் பாத்திருக்கோம். இதுவரை ஒருமுறை கூட ரயிலில் போனது கிடையாது. எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் காட்டு வேலை பாக்குறாங்க. அவங்க கிட்ட, ஒருமுறையாவது எனனையும் ரயிலில் கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். ஆனா, அது நடக்கவே இல்ல. இப்போ காலாண்டு பரீட்சை லீவு விட்டதும் பிரெண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடலாம் தான் நினைச்சேன். அப்போ, டீச்சர் என்ன கூப்பிட்டு, ரயிலில் போறதப் பத்தி சொன்னாங்க.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

எனக்கு அப்பவே ரொம்ப ஆசையா இருந்துச்சு. உடனே எங்க வீட்டுல அப்பா, அம்மா கிட்ட பேசி அனுமதி வாங்கிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு டீச்சர் கூடவே வந்துட்டேன். என்ன மாதிரியே என்னோட பிரண்ட்ஸ்களும் ரயில்ல போனது கிடையாது. அதனால அவங்களையும் கூட்டிட்டு வந்துட்டோம். ரயில்வே ஸ்டேஷன்ல நின்னு ரயில் வர்றத பாக்கறப்போ எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. டி.வி.ல ரயிலைப் பார்த்துட்டு, நேர்ல பாக்குறப்போ ரொம்ப பெருசா இருந்துச்சு. ரெயில்வே ஸ்டேஷனுக்குள்ள ரயிலை, டிரைவர் எங்களைத் தாண்டி ஓட்டிட்டு போகும்போது ரொம்ப ஸ்பீடா காத்து வந்துச்சு. அது எங்க முகத்துல பட்டப்போ ரொம்ப சூடா இருந்துச்சு. அப்ப நாங்க கைத்தட்டி ஜாலியா சிரிச்சிக்கிட்டோம்.

முதல் முறையா ரயிலுக்குள்ள உட்கார்ந்து எங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது டீச்சர் எங்களுக்கு தைரியமாக இருக்கணும், தன்னம்பிக்கையோட பேசணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ரயில் புறப்படும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ரயில் எங்களை தாலாட்டுற மாதிரியே இருந்துச்சு‌. ரயிலோட ரெண்டு பக்கமும் ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துக்கிட்டே போனோம். அப்போ ஒவ்வொரு மரமும் எங்கள ரொம்ப வேகமாக கடந்து போச்சு. கடைசியா ரயில் நின்னதுக்கு அப்புறம் நாங்க இறங்கி சாப்பிட்டோம். பிறகு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு மறுபடியும் அதே ரயில்ல திரும்பி வந்துட்டோம். சின்ன வயசிலிருந்து ரயிலில் போகணும்கிறது என் ஆசை. அதை நிறைவேத்துன என் டீச்சருக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றனர் மழலை மாறாத குரலில்.