Published:Updated:

`தினமும் 3 மணி நேரம்; மரத்தின் உச்சியில் வகுப்பு!’ -கல்லூரி மாணவனின் `சிக்னல்’ சிக்கல்

குன்று (Representational Image)
குன்று (Representational Image) ( Pixabay )

எங்க கிராமத்தில் பி.எஸ்.என்.எல் மட்டும்தான் கிடைக்கும். எங்கள் வீடு இருக்கும் பகுதியில் ஆன்லைன் வகுப்புகளுக்குப் போதுமான வேகத்தில் இணையம் இல்லை. அதனால்தான் உயரமான பகுதி நோக்கிச் சென்றேன்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், தற்போது தனிமைப்படுத்தப்படும் மையங்களாகச் செயல்படுகின்றன. மீண்டும் பள்ளி கல்லூரிகள் எப்போது செயல்படும் என்று இன்னும் தெரியவில்லை.

கல்லூரி வளாகம்
கல்லூரி வளாகம்
Representational image

நாட்டில், நிலைமை இப்படி இருக்க, கல்லூரிகளிலும், வாய்ப்பிருக்கும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இணையம் வழி பாடம் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே மாதியான இணைய சேவை கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். நகர்ப்புறங்களில் இருக்கும் இணைய வசதி, கிராமப் புறங்களில் இருப்பதில்லை. கிராமப்புறங்களில் கிடைக்கும் வசதி கூட மலை கிராம மக்களுக்குக் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் கர்நாடகாவில் கிராமப் புற மாணவர் ஒருவர் தன் வீட்டின் அருகில் இருக்கும் குன்று பகுதிக்குச் சென்று அதில் இருக்கும் உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார். காரணம் இன்டெர்நெட். சமூக சேவை துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்த மாணவன் பெயர் ஸ்ரீராம் ஹெகடே. இவர் கர்நாடகா மாநில உத்தர கனடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

லாக் டெளன் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் எனக் கல்லூரியிலிருந்து தகவல் வர, சிக்னல் இல்லாமல் சிரமப்பட்டிருக்கிறார். ஆனால் அதையே காரணமாகச் சொல்ல விரும்பவில்லை. ஊரடங்கு காரணமாக ஊரையும் தாண்ட முடியாது. இதனால், உயரமான பகுதிக்குச் சென்றிருக்கிறார். சிக்னல் சற்று அதிகமாகக் கிடைத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த ஸ்ரீராம் உயரமான மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் தனது வகுப்பை அமைத்திருக்கிறார். தினமும் ஒரு கிலோ மீட்டர் நடை, பின்னர் மரத்தின் மீது வகுப்பு.

ஸ்ரீராம் ஹெகடே
ஸ்ரீராம் ஹெகடே

``எங்க கிராமத்தில் பி.எஸ்.என்.எல் மட்டும்தான் கிடைக்கும். எங்கள் வீடு இருக்கும் பகுதியில் ஆன்லைன் வகுப்புகளுக்குப் போதுமான வேகத்தில் இணையம் இல்லை. அதனால்தான் உயரமான பகுதி நோக்கிச் சென்றேன். அங்கு சற்று நல்ல சிக்னல் கிடைக்கவும், சிறப்பான சிக்னலுக்காக மரத்தில் ஏறினேன். இப்போது தினமும் 3 மணி நேரம் வகுப்புகள் நடக்கின்றன. இது போன்ற தடைகள் எனது படிப்புக்குத் தடையாக இருக்க முடியாது. மழைக் காலத்துக்கு மாற்றுவழியைத் தேட வேண்டும். இப்போதே அது குறித்து சிந்தித்து வருகிறேன்” என்றார்.

News Credit: TOI

அடுத்த கட்டுரைக்கு