Published:Updated:

போராடியதால் மாணவரின் சேர்க்கை ரத்து... தொடரும் சென்னைப் பல்கலைக்கழக சர்ச்சை!

ராம் சங்கர் ச

சென்னைப் பல்கலைக்கழகத்தில், அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் என்ற அரசியல் அமைப்பில் செயல்பட்டதன் காரணமாக, முதலாமாண்டு மாணவர் ஒருவரின் சேர்க்கையை ஆளுநர் மற்றும் துணைவேந்தரின் அழுத்தத்தால் ரத்துசெய்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madras University
Madras University

சென்னைப் பல்கலைக்கழகத்தில், அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் என்ற அரசியல் அமைப்பில் செயல்பட்டதன் காரணமாக முதலாமாண்டு மாணவர் ஒருவரின் சேர்க்கையை ஆளுநர் மற்றும் துணைவேந்தரின் அழுத்தத்தால் தத்துவயியல் துறை பேராசிரியர் ரத்துசெய்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாணவர் கிருபாமோகன் நம்மிடம் பேசினார்.

"அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே இதழியல் துறையில் பயின்றேன். இந்த ஆண்டு மீண்டும் முதுகலை தத்துவயியல் துறையில் சேர விரும்பி விண்ணப்பங்களை அனுப்பினேன். கடந்த ஜூலை 31-ம் தேதி சேர்க்கை நடைபெற்றது. முறையாக எல்லாச் சான்றிதழ்களையும் ஒப்படைத்துவிட்டு நேர்காணலிலும் கலந்துகொண்டேன். துறைத்தலைவரும் சான்றிதழ்களைச் சரிபார்த்து ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, படிப்பதற்கான கட்டணத்தையும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்பில் அமர்ந்து பயின்றும் வந்தேன். ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி துறைத்தலைவர் வகுப்பு முடிந்ததும் என்னை அழைத்து, 'உங்களுடைய அட்மிஷனை ரத்துசெய்ய வேண்டும் என்று ஆளுநரும், துணைவேந்தர் துரைசாமியும் அழுத்தம் கொடுக்கிறார்கள். என்ன பிரச்னை' என்று கேட்டார். 

Kiruba Mohan
Kiruba Mohan

தொடர்ந்து அவர், 'அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தில் நீங்க இருந்தீங்களாமே? பல்கலைக்கழகத்துக்குள் நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கீங்களாமே'  என்று கேள்வி கேட்டார். அதற்கு நான், 'மாணவன் என்ற முறையில் எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கேட்டுப் போராடியுள்ளேன். இந்துத்துவ சக்திகள் பல்கலைக்கழகத்தைக் காவிமயமாக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடியுள்ளேன்' என்றேன்.

இதழியல் துறையில் படிக்கும்போதே அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டு வந்தேன். இந்த அமைப்பில் இயங்கும் மாணவர்கள்மீது நெருக்கடி கொடுப்பது, மனதளவில் அழுத்தம் கொடுப்பது எனப் பலவற்றை பல்கலைக்கழகத்தில் பல துறைகள் செய்துவந்தன. 'இவற்றைக் காரணமாக வைத்துதான் உங்க அட்மிஷனை ரத்துசெய்யச் சொல்லியிருக்கிறார்கள் என்று துறைத்தலைவர் சொன்னார்' " என்றார் கிருபா மோகன்.

மேலும் அவர், " 'என்னுடைய சான்றிதழ்களிலோ, அகாடமி அளவிலோ வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதபோது, என்னை எப்படி நீக்க முடியும்' எனக் கேட்டேன். துறைத்தலைவர், 'நானும் இதையேதான் துணைவேந்தரிடம் கேட்டேன். ஆனால், எதையாவது காரணமாக வைத்து நீக்குங்கள்' என்று சொன்னார். அதற்கு நான், 'எந்தத் தவறும் செய்யாமல் நான் நீங்க முடியாது. நான் படிக்கணும். எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்' என்றேன்.

"உங்க அட்மிஷன் ரத்து பண்ணியாச்சு. லெட்டர வாங்கிகோங்க. தினமும் ஆளுநரிடமிருந்தும் வி.சி-யிடமிருந்தும் அதிகமா நெருக்கடி வருகிறது. என்னுடைய 20 ஆண்டுக்கால பணி அனுபவத்தில் இப்படியான சூழலை நான் எதிர்கொண்டதில்லை" என்று கூறினார்.
Kiruba Mohan
Kiruba Mohan

ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 29-ம் தேதி என்னை அழைத்து, 'சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்ததால் தகுதிச் சான்றிதழ் தேவையில்லை என்றும், ஒருவேளை தேவைப்பட்டால் புரொவிஷ்னல் சான்றிதழை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறேன்' என்றும் கூறினார். இதழியல் துறையில் சேரும்போதே தகுதிச் சான்றிதழ் கொடுத்துள்ளேன். அப்போதும் மூன்று மாதம் கழித்தே சான்றிதழைக் கொடுத்தேன். அதுவும் துறையே வாங்கிக் கொடுத்தது. தற்போது எனக்குப் பின்னர் சேர்ந்த இரண்டு பேர் இன்னும் தகுதிச் சான்றிதழ் ஒப்படைக்காமல்தான் படிப்பைத் தொடர்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் பல துறைகளிலும் தகுதிச் சான்றிதழ் ஒப்படைக்காமல் பல மாணவர்கள் பயில்கிறார்கள். அலுவலகத்தில் சான்றிதழ் பெற விசாரித்தபோதும் துறைத்தலைவர் வழியாகத்தான் பெற முடியும் என்று கூறிவிட்டனர். துறைத்தலைவர் முன்பே என்னிடம் கூறியிருக்க வேண்டும். எந்த விதமான நியாயமும் இன்றி இந்த நடவடிக்கையைப் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. சட்டரீதியாக என்னுடைய நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.

இந்த நிலையில், மாணவர் கிருபா மோகனை மீண்டும் சேர்க்கக்கோரி வளாகத்தில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் பிற மாணவர்களும் போராடினர். சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும், கடலூர் பெரியார் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களும் கிருபா மோகனைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தி, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

Student Protest
Student Protest

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் ஒருவரான வளர்மதி நம்மிடம் பேசும்போது, "கிருபா மோகன் என்ற மாணவரின் சேர்க்கையை ரத்துசெய்துள்ளனர். அதற்குக் காரணமாகத் தகுதிச் சான்றிதழைக் கூறுகின்றனர். விதிமுறைப்படி தகுதிச் சான்றிதழ் இல்லையெனும் பட்சத்தில் மாணவர்களைச் சேர்க்கவே கூடாது. பின்னர், எதற்காகச் சேர்க்கப்பட்டார்? துறைத்தலைவர், 'சேர்க்கையின்போது மாற்றுச் சான்றிதழில் சென்னைப் பல்கலைக்கழகம் என்றிருப்பதால் தேவையில்லை' என்று கூறியுள்ளார். இது முற்போக்கு மாணவர்களை, பி.ஜே.பி அரசு கல்வி நிலையங்களிலிருந்து களையெடுக்கும் வேலையாகவே தெரிகிறது. மாணவர் கிருபா மோகனை உடனடியாக மீண்டும் துறையில் சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாணவரின் குற்றச்சாட்டையொட்டி தத்துவயியல் துறை தலைவர் பேரா.வெங்கடாஜலபதியிடம் பேசச் சென்றபோது, "எனக்குப் பேசுவதற்கு அனுமதியில்லை. எதுவாக இருந்தாலும் பதிவாளரிடமும் துணைவேந்தரிடமும் பேசிக்கொள்ளுங்கள்" என்றார்.

பதிவாளரிடம் பேசியபோது, "எதுவாக இருந்தாலும் துணைவேந்தரிடம் பேசிக்கொள்ளுங்கள்" என்றார். துணைவேந்தரிடமும் பேச முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக அவர் கூறும் காரணத்தையும் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.

Students protest
Students protest

கல்விக்காகப் போராடிய, குரல்கொடுத்த அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயரில் இயங்கியதற்காகவே, அரசு கல்வி நிலையத்தில் குக்கிராமத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரியாக வந்திருக்கும் மாணவனின் கல்வி மறுக்கப்படுவது ஆட்சியாளர்களின் வலதுசாரி சார்பு மனநிலையைத்  தோலுரித்துக் காட்டுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும், மாணவர் விடுதிப் பிரச்னை, பதவி உயர்வு முறைகேடு பிரச்னை எனப் பல சர்ச்சைகளில் சென்னைப் பல்கலைக்கழகம் சிக்கியிருப்பது கவனிக்கத்தக்கது.