Published:Updated:

‘ஐந்து வகைக் குழந்தைகள்’ - ஆன்லைன் கல்வி அவலம்!

ஆன்லைன் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் கல்வி

நேரக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர் களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்து கின்றன

சம்பவம் 1

தேனி மாவட்டம், ஆண்டிபட்டிப் பகுதியில், 11-ம் வகுப்பு படித்துவந்த விக்கிரபாண்டி எனும் மாணவன், ஆன்லைன் வகுப்பு புரியாததால் செப்டம்பர் 2-ம் தேதி, தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டான்.

சம்பவம் 2

பண்ருட்டி அருகே, ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தர முடியாமல் பெற்றோர் தவித்த சூழலில், தனியார் பள்ளி கொடுத்த அழுத்தம் காரணமாக, கடந்த ஜூலை 31-ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் 3

திண்டுக்கல் மாவட்டம், பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் ப்ளஸ் ஒன் படித்துவந்தார். ஆன்லைன் வகுப்புக்கு தனது தாய் செல்போன் வாங்கித் தராததால், கடந்த ஜூலை 14-ம் தேதி தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இப்படியாகச் சம்பவங்கள் தொடர்கின்றன...

ஆன்லைன் கல்விமுறையில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருக்கும் சூழல் ஒருபுறமிருக்க, செல்போன் வாங்க வசதியில்லாமல் விபரீத முடிவுகளை நோக்கி முன்னேறும் மாணவ, மாணவியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புதிய கல்விக்கொள்கையின் சாதக பாதகங்களை விவாதித்த அளவுக்கு, ஆன்லைன் கல்வி குறித்தும் விவாதிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியிருக்கிறது.

‘ஆயிஷா’ நடராஜன்
‘ஆயிஷா’ நடராஜன்

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நோய்த் தொற்றின் தீவிரத்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்த எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழல் நிலவிவருகிறது. அதேசமயம் ஏப்ரல் மாதமே ஆன்லைன் கல்வியைத் தொடங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள், அதேமுறையில் தற்போது இடைத்தேர்வையும் நடத்தி முடித்திருக்கின்றன. அரசுப் பள்ளிகள் குறித்து திடீர் ஞானோதயம் ஏற்பட்டதன் விளைவாக, கடந்த ஒன்றரை மாதங்களாகத்தான் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சியை நடத்திவருகிறது. ஆனால், அதுவும் அனைத்துத் தரப்பு மாணவர் களுக்கும் முழுமையாகச் சென்றடையவில்லை.

இதற்கிடையில் `நேரக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர் களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்து கின்றன’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘மத்திய அரசின் பரிந்துரைகளின்படி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டிருக்கின்றனவா?’ என்று சாட்டையைச் சுழற்றியது நீதிமன்றம். அதன் பிறகு அவசர அவசரமாக ஜூலை 30-ம் தேதி வெளியிட்டது தமிழக அரசு. ஆனால், புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதங்கள் உச்சத்தில் இருப்பதால் இந்த அறிவிப்பு பெருமளவில் கவனம் பெறவில்லை.

ஆன்லைன் கல்விக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கும் நிலையில் கல்வியாளர் ‘ஆயிஷா’ நடராஜனை சந்தித்துப் பேசினோம்:

``தமிழத்தில் ஐந்து வகையான மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையுமே `மாணவர்கள்’ என்ற ஒற்றை வார்த்தையில் அழைக்கிறது அரசு. அதேசமயம் உயர்கல்விக் கொள்கை அவர்களை, `தேர்வர்கள்’ என்று கூறுகிறது. ஆனால், இன்றையச் சூழலில் அவர்கள் அனைவருமே `குழந்தைகள்’ என்பதுதான் உண்மை.

ரேஷன் அரிசிச் சாப்பாடு, பெற்றோர்களுக்குள் தினமும் சண்டை, அப்பாவின் டாஸ்மாக் களேபரம் போன்ற சூழலில் மன உளைச்சலோடும் பட்டினியோடும் கிடக்கும் குழந்தைகள்தான் முதல் வகைக் குழந்தைகள்.

இரண்டாவது வகைக் குழந்தைகள், பெற்றோருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அவர்களது தொழில்களில், வணிகங்களில் பங்கேற்றுவருபவர்கள். இதில், மூட்டை தூக்கும் குழந்தை வரை உண்டு.

‘ஐந்து வகைக் குழந்தைகள்’ - ஆன்லைன் கல்வி அவலம்!

பாட்டில் பொறுக்குவதிலிருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிற - பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சாலையோரம் என்று படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் - புலம்பெயர்ந்த குழந்தைகள்தான் மூன்றாவது வகைக் குழந்தைகள்.

நான்காவது வகைக் குழந்தைகள், வசதி குறைவான - கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் `தங்களுக்கும் கொரோனா வந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

ஐந்தாவது வகைக் குழந்தைகள்தான் வீட்டிலிருக்கும் மத்தியதரக் குழந்தைகள். இவர்களைத்தான் ‘வீட்டில் சும்மா இருக்கிறார்கள்’ என்று கூறி ஆன்லைன் வகுப்புகளுக் குள் திணிக்கிறார்கள் பெற்றோர்கள். ‘கட்டண வேட்டை’க்காக தனியார் பள்ளிகளும் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஐந்தாவது வகைக் குழந்தைகள் குறித்து மட்டும்தான் அரசு பேசுகிறது. மற்ற நான்கு வகைக் குழந்தைகள் படும் அவஸ்தைகள் குறித்து அரசு என்ன நினைக்கிறது?

அமெரிக்காவில் கறுப்பு, வெள்ளை என்ற முறையில் கணக்கெடுப்புகளை நடத்தி, இன்டர்நெட் வசதி இல்லாத வீடுகளுக்கு இணைப்புகள் கொடுத்து, ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம்தான் வகுப்புகளை நடத்துகிறார்கள். அதற்கான இணையக் கட்டணம் வசூல் செய்யப் படுவதில்லை. பொதுவாகவே கல்வி தொடர்பான இணையப் பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்ற விதி அங்கு அமலிலிருக்கிறது. இவை எதையுமே செய்யாமல், திடீரென்று ஆன்லைன் கல்வியைக் கொண்டுவந்துவிட்டு, உடனே அது அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர்ந்து விட்டதைப் போல ‘பாவ்லா’ காட்டிவருகிறது அரசு. தவிர, அதுதான் கல்வி என்ற நாடகத்தையும் நடத்துகிறது. அவசரப்பட்டு இந்த முறையைத் தொடர்ந்து செயல்படுத்தினால், சரிசெய்ய முடியாத அளவுக்கு கல்வியில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டுவிடும். அப்படி ஒரு நிலை வந்தால், இந்தியாவைப் பொறுத்தவரை சொல்ல முடியாத அளவுக்கு அவலங்கள் அதிகரிக்கும்!” என்றார்.

‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றாள் ஔவை. போகிற போக்கைப் பார்த்தால் ‘பிச்சை’ மட்டும்தான் சாத்தியம்போல!