Published:Updated:

ஜெனரல் Vs ரிசர்வேஷன் கேட்டகரி... ஐ.ஐ.டி-க்குள் பிரிந்துகிடக்கும் மாணவர்கள்!

ஐஐடி மெட்ராஸ்
ஐஐடி மெட்ராஸ் ( Samayam )

படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறிய 2,461 பேரில் 1,171 பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிற தகவல்தான், நம்மை மேலும் இதுகுறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது.

ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 2,461 பேர் படிப்பைத் தொடர முடியாமல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மனிதவள மேம்பாட்டுத் துறையே கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அதன்படி, படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறிய 2,461 பேரில் 1,171 பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் என்கிற தகவல்தான், நம்மை மேலும் இதுகுறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது.

ஐஐடி
ஐஐடி
சமயம்

இத்தனை மாணவர்கள் ஏன் உள்ளே படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறுகிறார்கள் என்கிற கேள்விக்கு நிர்வாகம் சொல்கிற காரணம், "தவறான பாடத்தைத் தேர்வுசெய்திருப்பது, தேர்வுகளில் குறைவான மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெறுவது, உடல்ரீதியான அல்லது மனரீதியான காரணங்கள் இருக்கலாம்" என்கிறார்கள்.

அதுதான் உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாக தற்போது ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்துவரும் மாணவி ஒருவரிடம் பேசினோம். "எம்.டெக், பி.ஹெச்டி போன்ற படிப்புகளைப் படிக்கும்போதே சிலருக்கு வெளியில் ப்லேஸ்மென்ட் கிடைத்துவிடும். ஆகவே, டிஸ்கன்டினியூ செய்வார்கள். ஆனால், யு.ஜி மாணவர்கள் வெளியே போவதற்குக் காரணம், அகாடெமிக் ப்ரெஷர் ரொம்ப அதிகம். அது, வெளிப்படையா தெரியாது. பியர் ப்ரெஷர் மூலமா அது ஒவ்வொருத்தரையும் பாதிக்கும். உதாரணத்திற்குக் கூடப் படிக்கிறவர்களுக்குக் கூகுள், அமேசான் மாதிரியான கம்பெனியில இன்டன்ஷிப் கிடைக்குது. ஆனா, இன்னொருத்தருக்கு ரொம்ப சின்ன கம்பெனியில இன்டன்ஷிப் கிடைக்குதுன்னா அவங்கள அறியாமலேயே அந்த ஒப்பீடு வந்துடும். நம்முடைய எதிர்காலம் அவளோதான் போலனு அதையே நினைச்சு படிப்புல கவனம் செலுத்த முடியாம வெளியே போயிடுவாங்க.

மாணவர்கள்
மாணவர்கள்
Deccan chronicle

இரண்டாவது தரப்பு, இன்ஜினீயரிங் பிடிக்காம கட்டாயத்தின் பேரில் சேர்ந்தவங்க. இவங்களால ஒருகட்டத்துல தாக்குப்பிடிக்க முடியாம ட்ராப் அவுட் ஆவாங்க.

மூன்றாவது தரப்பு, ஐ.ஐ.டி-யில சேர்றதுக்காக வைக்கப்படுற நுழைவுத்தேர்வுல பாஸ் ஆகுறதுக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணி கோச்சிங் கிளாஸ் சேர்ந்து உள்ள வர்றவங்க. அந்த மாணவர்களுக்கு எப்படியாவது நல்லா படிச்சு நல்ல ப்ளேஸ்மென்ட் கெடைக்கணும்னு ஒரு விதமான ப்ரெஷர்லயே இருப்பாங்க. அவங்களும் ஒருகட்டத்துல அதை ஹேண்டில் பண்ண முடியாமா ட்ராப் ஆகிடுவாங்க.

மாணவர்
மாணவர்
unknown

இதையெல்லாம்விட மிக முக்கியமான காரணம் ஐ.ஐ.டி மீது உள்ள மாணவர்களுக்கிடையே இருக்கிற சாதியப் பாகுபாடு. அது எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னா, 'ஏ... அவனுக்குப்பாரு, கம்மி மார்க் எடுத்தாலும் கம்யூட்டர் இன்ஜினீயரிங் கிடைச்சிருக்கு. நாம அவனைவிட அதிக மார்க் எடுத்தாலும் நமக்குக் கிடைச்சது மெரின் இன்ஜினீயரிங்தா'னு புலம்ப ஆரம்பிப்பாங்க. அது அப்படியே, கோட்டாவுல ஐ.ஐ.டி வர்ற மாணவர்கள் மீது வெறுப்பு உணர்வா மாறும்.

அந்த வெறுப்பு உணர்வால ரிசர்வேஷன் கேட்டகரில வர்ற மாணவங்க தனிமைப்படுத்தப்படுவாங்க. ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்படுற பின்னணியில இருந்து வர்ற இவங்களால, இங்க இருக்கிற மேல்தட்டுச் சமூகப் பின்னணிகொண்ட மாணவர்களோட இயல்பாகவே சேர்ந்திருக்க முடியாது.

மாணவர்
மாணவர்
the week

அந்தச் சூழல்ல அவங்க மேல இந்த வெறுப்புணர்வும் சேர, ஒரு பாயின்ட் ஆப் டைம்ல இந்தப் படிப்பே வேணாம்னு விட்டுட்டுப் போயிடுவாங்க. ஐ.ஐ.டி மாணவர்கள் படிப்பைப் பாதியில விடுறதுக்கு இந்த மாதிரி பல விஷயங்கள் இருக்கு" என்றார்.

முன்னாள் ஐ.ஐ.டி மாணவர் ஒருவரிடம் பேசியபோது, "கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 2,461 மாணவர்கள் வெளியே சென்றிருப்பது அதிகம்தான். அதிலும் பார்த்தால் ஐ.ஐ.டி டெல்லியில் மட்டும் 782 பேர் படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறியிருக்கிறார்கள். ஐ.ஐ.டி கோரக்பூரில் 622 பேரும், ஐ.ஐ.டி மும்பையில் 263 பேரும், ஐ.ஐ.டி கான்பூரில் 190 பேரும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இருப்பதிலேயே குறைவான மாணவர்கள் ஐ.ஐ.டி சென்னையில்தான். அங்கு வெறும் 128 மாணவர்கள் மட்டும்தான். எண்ணிக்கையில் முன்னுக்குப்பின் இருந்தாலும் எல்லா ஐ.ஐ.டி உள்ளேயும் ஒரு பிரச்னை, ஆதிக்கம் செலுத்தும். அது சாதிரீதியிலான பாகுபாடுதான்.

ஐ.ஐ.டி. சென்னை
ஐ.ஐ.டி. சென்னை
edexlive

இந்தியா முழுக்க உள்ள எல்லா ஐ.ஐ.டி-களிலும் மாணவர்கள் ஜெனரல் கேட்டகரி, ரிசர்வேஷன் கேட்டகரினு பிரிந்துதான் கிடப்பார்கள். இதில் ரிசர்வேஷன் கேட்டகரியில் ஐ.ஐ.டி-க்குள் படிக்க வரும் மாணவர்களிடம், அதன் எதிர்தரப்பு மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குவார்கள். அதனால் ஏற்படும் மனஅழுத்தம் அவர்களின் படிப்பில் கவனம் செலுத்தவிடாமல் செய்யும். ஆகவே, தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்று, இந்தப் படிப்புக்கே நாம் தகுதியில்லைபோல என அவர்களையே நம்பவைக்கும் சூழல் அங்கே இருக்கிறது. ரிசர்வேஷன் கேட்டகரியில் உள்ள எல்லா மாணவர்களும் இதனால் ஏதேனும் ஒருவகையில் பாதிப்படைகிறார்கள் என்பதே உண்மை.

ஒரு வருடத்திற்கு முன்பு ஐ.ஐ.டி மெட்ராஸில் ஒரே மாதத்தில் இரண்டு தற்கொலைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தன. அப்போது ஐ.ஐ.டி மெட்ராஸில் மென்டல் ஹெல்த் பற்றி மாணவர்களிடையே ஒரு சர்வே எடுத்தார்கள். பாடத்திட்டம் கடுமை, எதிர்காலம் குறித்த பயம் ஆகிய இவையிரண்டும்தான் அதற்கு அடிப்படைக் காரணங்கள் எனச் சொல்லப்பட்டது. மற்ற காரணங்களாக தனிமை, மன அழுத்தம் ஆகியன சொல்லப்பட்டன. இந்தப் பிரச்னையால்தான் அவர்கள் அதிகம் ஸ்ட்ரெஸ் ஆகிறார்கள் என ஆய்வில் தெரியவந்தது.

ஜெனரல் Vs ரிசர்வேஷன் கேட்டகரி... ஐ.ஐ.டி-க்குள் பிரிந்துகிடக்கும் மாணவர்கள்!

மன அழுத்தம் அதிகமுள்ள மாணவர்களின் சமூகப் பின்னணி குறித்த சர்வேயில் ஜெனரல் கேட்டகரியில் உள்ளவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தார்கள். இதை நாம் புரிந்துகொள்ளும்போதுதான் உள்ளே என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பது குறித்த தெளிவு வெளியிலிருப்பவர்களுக்குக் கிடைக்கும்" என்றார்.

ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனிடம் இதுகுறித்துப் பேசியபோது,

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி
the hindu

"மாணவர்கள் படிப்பைவிட்டுப் பாதியில் வெளியேறுவதற்கு அவர்கள் ஒழுங்காகப் படிக்காததுதான் காரணமே தவிர, சாதியப் பாகுபாடோ கல்லூரியில் உள்ளே நிலவும் மற்ற சூழலோ காரணமே இல்லை" என உறுதியான குரலில் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு