Published:Updated:

நீட் என்னும் அரச பயங்கரவாதம்!

பட்டுப்போன மருத்துவக் கனவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டுப்போன மருத்துவக் கனவுகள்

தமிழகத்தில் பட்டுப்போன மருத்துவக் கனவுகள்... கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 17% பேர்தேர்வு எழுதவில்லை!

எது நடைபெற்றுவிடக் கூடாது என அச்சப்பட்டோமோ, அது நடைபெற்றுவருகிறது. ஆம், தமிழ்நாட்டிலி ருந்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை, 2019-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு 17 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 22,498 பேர் மருத்துவம் படிப்பதற்காக விண்ணப்பிக்கவில்லை, விரும்பவில்லை அல்லது தங்களது மருத்துவத் துறைக் கனவுகளைப் பொசுக்கிக்கொண்டனர்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு, 2020, மே 3-ம் தேதி நடைபெறவிருக்கிறது. நீட் நுழைவுத்தேர்வுக்கு மாநிலங்கள்வாரியாக விண்ணப்பித்தவர் களின் பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் மூலம்தான் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 17 சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வு பயிற்சி மையங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டபோது...
நீட் தேர்வு பயிற்சி மையங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டபோது...

``2019-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து, அதில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். நடப்பாண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். காரணம், நீட் தொடர்பான நடைமுறை சிக்கல்கள்.அதற்கும்மேலாக தமிழக அரசு தரமான நீட் பயிற்சியை அளிக்கத் தவறியதுதான்’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடங்கியது. 2018-19ம் ஆண்டு இந்தப் பயிற்சி மையங்களில் வகுப்புகள் நடந்துவந்த நிலையில், 2019-2020ம் ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கவேயில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, நீட் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. கூடவே, ‘இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்’ என்றும் அறிவித்தது. ஆனால், அந்த 94 பயிற்சி மையங்களின் நிலை என்ன என்றே தெரியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீட் தேர்வுகளை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பிவரும் டாக்டர் எழிலன் நம்மிடம், ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் மருத்துவக் கனவை நீட் நுழைவுத்தேர்வு கேள்விக்குறியாக்கிவிட்டது. அவர்களின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்துவிட்டன நடந்து முடிந்த தேர்வு முடிவுகள். குறிப்பாக, கிராமப்புற ஏழை மாணவர்கள்தான் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள். இனி இந்தத் தேர்வை தங்களால் எழுதவே முடியாது என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

பட்டுப்போன மருத்துவக் கனவுகள்
பட்டுப்போன மருத்துவக் கனவுகள்

நீட் பயிற்சி வகுப்புக்கு வருடத்துக்கு குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய் தேவை. பள்ளிப்படிப்புக்கே கட்டணம் செலுத்த முடியாமல்தான் அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள். அவர் களால் எப்படி நீட் பயிற்சிக்காக செலவுசெய்ய முடியும்? அப்படியே அரசுப் பள்ளி மாணவன் கட்டணத்தைச் செலுத்தி பயிற்சி வகுப்பில் சேர்ந்தால், அவன் அரசுப் பள்ளியில் கற்ற கல்விமுறைக்கும், நீட் நுழைவுத்தேர்வுப் பயிற்சிக்குமான இடைவெளி மிக அதிகம். பணம் இருப்பவர்களின் பிள்ளைகள் மட்டும் தான் மருத்துவர் ஆக முடியும். இதுவே யதார்த்தம்.

இது, ஒரு மாணவனின் மருத்துவக் கனவை அழிப்பதோடு நிற்பதல்ல; தமிழக மருத்துவத் துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால், இனி கிராமத்திலிருந்து ஒரு மாணவர்கூட மருத்துவராக வர முடியாது. இதன் நீட்சியாக, கிராமப் பகுதிகளுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த குறைந்த அளவிலான மருத்துவ சேவையும் அடியோடு நின்றுவிடும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கிவந்த ஸ்பீடு இன்ஸ்டிடியூட்டின் மேலாளரான செந்தில்வேலிடம் பேசியபோது, ‘‘2017-18ம் ஆண்டு அரசுப் பள்ளிகளுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை எங்களுடைய மையம்தான் தமிழகம் முழுவதும் நடத்தியது. 2017-ம் ஆண்டில் 10,000 பேர் வரை படித்தனர். 2018-ம் ஆண்டில் 20,000 மாணவர்கள் படித்தனர். அதில் 15,000 மாணவர்கள் தேர்வை எழுதியிருந்தனர். அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு வர வேண்டிய கட்டணம் சுமார் 20 கோடி ரூபாய் வரவில்லை. அதனால், அதன் பிறகு நாங்கள் பயிற்சி வகுப்புகளை ரத்துசெய்துவிட்டோம்” என்றார்.

ஸ்பீடு இன்ஸ்டிடியூட் தனது பயிற்சியை நிறுத்திய நிலையில், நடப்பு கல்வியாண்டில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம்மூலம் பயிற்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அந்தக் கல்வி நிறுவனமும் நீட் பயிற்சி அளிப்பதை நிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்க, அமெரிக்க நிறுவனத்தினர் தமிழகம் வருகை தர உள்ளனர். நீட் தேர்வுக்காக சிறந்த முறையில் பயிற்சி தருவதற்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதுவும் தாமதமானது.

 எழிலன் - ரவீந்திரநாத்
எழிலன் - ரவீந்திரநாத்

இந்த நிலையில் கடந்த ஜனவரி 22-ம் தேதி அமைச்சர் செங்கோட்டையன், ‘‘பொங்கல் தொடர் விடுமுறை காரணமாகவே நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இனி பயிற்சி வகுப்புகள் தொடரும்’’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், பயிற்சிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், ‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் நம்பிக்கையிழந்த நிலையில்தான் 2020-ம் ஆண்டு நீட் தேர்விலிருந்து அவர்கள் விலகியிருக்கிறார்கள். அரசாங்கம் தர வேண்டிய தரமான பயிற்சியைத் தரவில்லை. அரசுத் தரப்பிலிருந்து வழங்கப்படும் பயிற்சிக்கே கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில்தான் மாணவர்கள் இருக்கின்றனர். பொருளாதார சிக்கல் ஒருபுறம் என்றால், நகர்ப்புறங்களில் இருக்கும் பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை என்பது இன்னொரு வேதனை. அதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்” என்றார்.

மாணவர்கள் சொல்வதென்ன? பூவரசி: “உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு 12-ம் வகுப்புத் தேர்வில் 398 மதிப்பெண் எடுத்திருந்தேன். எங்கள் பள்ளிமூலம் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்றுவந்தேன். ஆனால், இத்தனை ஆண்டுகள் அரசுப் பள்ளியில் நான் படித்ததற்கும் நீட் பயிற்சிக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரியவில்லை. அதனால், நீட் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. வேறு வழி இல்லாமல் நீட் தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டேன். தற்போது கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்ஸி படிக்கத் தொடங்கியுள்ளேன்.” மாலினி: “12-ம் வகுப்புத் தேர்வில் 464 மதிப்பெண் எடுத்திருந்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியிருந்தேன். கேள்வித்தாள்கள் கடினமாக இருக்கின்றன. தேர்ச்சி பெற முடியவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பயிற்சி பெற்றால் மட்டுமே என்னால் தேர்ச்சி பெற முடியும். அவ்வளவு செலவெல்லாம் எங்களால் செய்ய முடியாது. எனவே, மருத்துவத்தைக் கைவிட்டு வேளாண்மை படிக்கலாம் என்றிருக்கிறேன்.” ஸ்ரீராம்: ‘‘மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே என் கனவு. எவ்வளவு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது இந்தத் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஒருமுறை நீட் தேர்வு எழுதியபோதே அந்த நம்பிக்கை போய்விட்டது. மொத்த கேள்விகளும் மத்திய பாடத்திட்டத்திலிருந்தே வருகின்றன. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, எப்படி மத்திய பாடத்திலிருந்து வரும் கேள்விகளுக்கு பதில் எழுத முடியும்? என்னுடைய மருத்துவக் கனவையே கைவிட்டுவிட்டேன்.’’

மாணவர்கள் சொல்வதென்ன?

பூவரசி: “உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு 12-ம் வகுப்புத் தேர்வில் 398 மதிப்பெண் எடுத்திருந்தேன். எங்கள் பள்ளிமூலம் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்றுவந்தேன். ஆனால், இத்தனை ஆண்டுகள் அரசுப் பள்ளியில் நான் படித்ததற்கும் நீட் பயிற்சிக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரியவில்லை. அதனால், நீட் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. வேறு வழி இல்லாமல் நீட் தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டேன். தற்போது கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்ஸி படிக்கத் தொடங்கியுள்ளேன்.”

பூவரசி - மாலினி - ஸ்ரீராம்
பூவரசி - மாலினி - ஸ்ரீராம்

மாலினி: “12-ம் வகுப்புத் தேர்வில் 464 மதிப்பெண் எடுத்திருந்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியிருந்தேன். கேள்வித்தாள்கள் கடினமாக இருக்கின்றன. தேர்ச்சி பெற முடியவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பயிற்சி பெற்றால் மட்டுமே என்னால் தேர்ச்சி பெற முடியும். அவ்வளவு செலவெல்லாம் எங்களால் செய்ய முடியாது. எனவே, மருத்துவத்தைக் கைவிட்டு வேளாண்மை படிக்கலாம் என்றிருக்கிறேன்.”

ஸ்ரீராம்: ‘‘மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே என் கனவு. எவ்வளவு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது இந்தத் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஒருமுறை நீட் தேர்வு எழுதியபோதே அந்த நம்பிக்கை போய்விட்டது. மொத்த கேள்விகளும் மத்திய பாடத்திட்டத்திலிருந்தே வருகின்றன. மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, எப்படி மத்திய பாடத்திலிருந்து வரும் கேள்விகளுக்கு பதில் எழுத முடியும்? என்னுடைய மருத்துவக் கனவையே கைவிட்டுவிட்டேன்.’’

‘‘நீட் தேர்வுகள் இன்னும் கடினமாகும்!’’

இளங்கோ
இளங்கோ

‘நீட் தேர்வு வேண்டாம்’ என்று நீதிமன்றம் சென்ற இளங்கோவிடம் பேசியபோது,

“நீட் தேர்வு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றேன். அந்த வழக்கு அப்படியே உள்ளது; விசாரணைக்கு வருமா வராதா என்பதுகூட தெரியவில்லை. நீட் தேர்வு அவசியமில்லாத ஒன்று. இந்தத் தேர்வு கடினமாக இருப்பதால் மாணவர்கள் இதை எழுத பயப்படுகிறார்கள். தற்போது கட் ஆஃப் மதிப்பெண்ணை உயர்த்தியிருப்பதாலும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தயங்குகின்றனர். நீட் தேர்வு, மத்திய பாடப்பிரிவைத் தழுவியிருப்பதால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குப் பிரச்னையாக இருக்கிறது. அதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் நீட் தேர்வு எழுதுவதைத் தவிர்த்துவருகிறார்கள். தற்போது எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் போன்ற மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் இதில் இணைத்துவிட்டார்கள். அதனால் இனி வரக்கூடிய நீட் தேர்வுகள் இன்னும் கடினமாக இருக்கும்” என்றார்.