Published:Updated:

`தனியாகச் சந்திக்க வேண்டும் என்றார்!’- பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு எதிராக திரண்ட கேரள மாணவிகள்

தனித்தனியாக எனது அறையில் பார்க்க வேண்டிய முறையில் பார்த்தால் அதிக மதிப்பெண் வழங்கலாம் என்றார். நாங்கள் எதற்காக ஆசிரியரை தனியாகச் சந்திக்க வேண்டும் எனக் கொதிக்கிறார்கள் மாணவிகள்.

கேரளப் பல்கலைக்கழகம்
கேரளப் பல்கலைக்கழகம்

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் சென்னை ஐ.ஐ.டியில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகளை தனியாக வந்து சந்திக்கும்படி பேராசிரியர் ஒருவர் கூறியதாக எழுந்துள்ள புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் காரியவட்டத்தில் கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு எம்.எஸ்சி முதலாம் ஆண்டில் 20 மாணவிகளும், 6 மாணவர்களும் படித்து வருகிறார்கள். இந்தப் பிரிவு மாணவர்களுக்கு பேராசிரியர் ஜான்சன் சைக்காலஜி வகுப்பு நடத்தி வருகிறார்.

பேராசிரியர் மீது புகார் கூறிய மாணவிகள்
பேராசிரியர் மீது புகார் கூறிய மாணவிகள்

இந்த நிலையில் சைக்காலஜி பாடத்தில் நடந்த தேர்வில் 24 மாணவ, மாணவிகள் ஃபெயிலாகியுள்ளார். மேலும், மதிப்பெண் வேண்டுமென்றால் மாணவிகளும் மாணவர்களும் தனித்தனியாக வந்து தன்னைச் சந்திக்கும்படி கூறியதாகவும் புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ``26 மாணவர்கள் படிக்கும் வகுப்பில் 24 மாணவர்களை பேராசிரியர் ஜான்சன் ஃபெயிலாக்கியுள்ளார். தேர்வைச் சிறப்பாக எழுதியதாக எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இதைத் தொடர்ந்தே எங்கள் விடைத்தாளைப் பார்க்க வேண்டும் எனப் பேராசிரியரிடம் கேட்டோம். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

எனவே, பேராசிரியர் அறைக்கு வெளியே விடைத்தாளைக் கொண்டு வந்தபோது நாங்கள் ஒன்றாகச் சென்று அதைப்பார்த்தோம். ஒரு விடைத்தாளைக்கூட அவர் திருத்தவில்லை. ஆனால் அவரோ இதுதான் உங்கள் மதிப்பெண் என்று சொன்னார். மேலும், ஒவ்வொருவரும் தனித்தனியாக எனது அறையில் பார்க்க வேண்டிய முறையில் பார்த்தால் அதிக மதிப்பெண் வழங்கலாம் என்றார். நாங்கள் எதற்காக ஆசிரியரை தனியாகச் சந்திக்க வேண்டும். இந்த ஆசிரியரை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகம் இந்தப் பேராசிரியரை எதற்காகப் பணியில் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. எனவே, இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தருக்குப் புகார் மனு அளித்துள்ளோம். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.

கேரளப் பல்கலைக்கழகம்
கேரளப் பல்கலைக்கழகம்

ஆனால், இந்தப் புகார்களை பேராசிரியர் ஜான்சன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ``மாணவர்களின் புகாருக்குப் பின்னால் மற்றொரு பேராசிரியரின் தூண்டுதல் இருக்கிறது" என்றார். இந்தப் புகார் குறித்து கேரளப் பல்கலைக்கழகம் நியமித்த கமிஷன் விசாரணை நடத்தி வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் சிண்டிகேட் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.