Published:Updated:

``பட்டியலின மாணவர்களுக்குக் கட்டணம், மாணவிகளுக்கு இடமில்லை!” - தொடர் புகாரில் சென்னைப் பல்கலைக்கழகம்

அரசுப் பல்கலைக்கழகத்துக்கு வருகிற மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமப்புற குடும்பங்களில் இருந்து வருபவர்கள். அரசு விடுதிக் கட்டணம் குறைவு என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே சென்னைக்குப் படிக்க வருபவர்களும் அதிகம்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

`சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புகளுக்கு நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவுறாத சூழலில், பல்கலைக்கழக விடுதியில் புதிய மாணவிகளுக்குச் சேர்க்கை கிடையாது' என நிர்வாகம் அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல புதிய கட்டுப்பாடுகள், மின்கட்டண உயர்வு என ஆடவர் விடுதியில் உள்ள மாணவர்கள்மீது பல்வேறு சுமைகளை நிர்வாகம் ஏற்றியிருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் கடிதம்
மாணவர்கள் கடிதம்

மேற்கண்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, விடுதியில் மாணவிகளுக்கான சேர்க்கையைத் தொடர வேண்டும் என்கிற கோரிக்கையை வலுயுறுத்தி நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் தருகிறவரை கலைந்து செல்ல மாட்டோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், மாணவர்கள் டீன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டாம் ஆண்டு மாணவர் பேசுகையில், "பல்கலைக்கழகத்தில் சேப்பாக்கத்தில் ஒரு விடுதியும், தரமணி வளாகத்தில் ஒரு விடுதியும் உள்ளன. கடந்த ஆண்டு சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் உள்ள மாணவிகளை தரமணி வளாகத்துக்கு மாறச்சொல்லி நிர்வாகம் வற்புறுத்தி வந்தது. அதோடு தற்போது புதிதாக வருகிற மாணவிகளுக்கு விடுதியில் சேர்க்கை தர முடியாது எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது பொறுப்பற்றச் செயல். அதோடு பல்கலைக்கழக விடுதிகளில் இனி, தனி மின் இணைப்பை அமைத்து, மின்சாரச் செலவுகளை மாணவர்களே மாதாமாதம் செலுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

இதுநாள் வரையில் ஆண்டுக்கு ஒருமுறை மொத்தமாகத்தான் மாணவர்கள் மின்கட்டனத்தைச் செலுத்திவந்தனர். இது மாணவர்கள் மீது நிதிச்சுமையை அதிகரிக்கும். தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பு மாணவர்களுக்கு விடுதிக் கட்டணம் என்பது கிடையாது. ஆனால், இந்த ஆண்டு விடுதிக் கட்டணம் செலுத்தச் சொல்லி புதிதாக உத்தரவிட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த ஆண்டுக்கான ஸ்காலர்ஷிப் தொகைகூட இன்றளவும் கிடைக்கவில்லை. நிர்வாகத்திடம் கோரிக்கைகளை எடுத்துச் சென்றால் அரசு விடுதி என்பதை மறந்துவிட்டு ஏதோ தனியார் நிறுவனம்போல பதிலளிக்கின்றனர்” என்றார்.

இரண்டாம் ஆண்டு மாணவியொருவர் பேசுகையில், "அரசு பல்கலைக்கழகத்துக்கு வருகிற மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமப்புற குடும்பங்களில் இருந்து வருபவர்கள். அரசு விடுதிக் கட்டணம் குறைவு என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே சென்னைக்குப் படிக்க வருபவர்களும் அதிகம். ஏற்கெனவே உள்ள விடுதிகளில் தண்ணீர் இல்லை, மெஸ் மூடப்பட்டுள்ளது எனப் பல சிக்கல்கள் இருக்கின்றன. தற்போது விடுதி இல்லை என நிர்வாகம் கூறிவிட்டதால், சேர்க்கைக்கான அனுமதி கிடைத்தும் பலரும் டி.சி பெற்றுக்கொண்டு வேறு கல்லூரிகளுக்கும், சொந்த ஊர்களுக்குமே திரும்பச் சென்றுவிட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

வெளியில் தங்குகிற அளவுக்கு இந்த மாணவர்களால் செலவு செய்ய இயலாது. வசதி இல்லை என்கிற ஒரு காரணத்துக்காகவே இவர்களுக்குக் கற்பதற்கான வாய்ப்புகளை மறுப்பது சரியல்ல. நிர்வாகம் மாணவிகள் விடுதிக்கு விரைந்து உரிய தீர்வு காண வேண்டும்” என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலனுக்கான டீன் பேட்ரிக்கிடம் இதுகுறித்துப் பேசினோம். "மாணவர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிச்சயம் பரிசீலிக்கும். துணைவேந்தரே நேரடியாக வந்து மாணவர்களைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். விடுதி புணரமைப்புப் பணிகள் நடைபெறுவதால்தான் மாணவர் சேர்க்கை தாமதமாகிறது” என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

மாணவர்களின் நலனைக் கல்லூரி நிர்வாகம் கருத்தில்கொள்ள வேண்டும்.