Published:Updated:

``மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என திணிப்பது ஆபத்தானது!'' – நடிகர் சூர்யா

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து தமிழகம் முழுவதும் இருந்து 12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினர்.

Agaram foundation
Agaram foundation

மத்திய அரசு அறிவுத்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டு 30 நாள்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. ஜூலை 31 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது. இதோடு கல்வியாளர்கள் பலரும் இணைந்து புதிய கல்விக் கொள்கை ஆவணத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டனர்.

`மாணவர்களின் எதிர்காலத்தில் ஏன் இவ்வளவு அவசரம்!' - புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா
மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என அவர்கள் மீது திணிப்பது ஆபத்தானது!
சூர்யா

இந்நிலையில் நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேன் இணைந்து தமிழகம் முழுவதும் இருந்து 12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினர். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கை தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் பேராசிரியர் வசந்திதேவி, பேராசிரியர் மாடசாமி, பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் விழியன் மற்றும் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசினர்.

முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி
முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி

முதலில் பேசிய முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, “21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது, இந்தியாதான் தலைமை தாங்கப் போகிறது என நம் அரசியல்வாதிகள் பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வைக்கான கல்விக் கொள்கை 21-ம் நூற்றாண்டுக்கானதாக இல்லாமல் கல்வி வளர்ச்சியை பின்னோக்கி செலுத்தக்கூடியதாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவை வார்த்தை ஜாலங்களால் நிரப்பியிருக்கிறார்கள், ஆனால் செயல்திட்டம் வேறொன்றாக உள்ளது. நாம் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு என்பதை மட்டும் மேலோட்டமாக பார்க்கிறோம், ஆனால் அதைவிடவும் ஆபத்தான அம்சங்கள் இதில் நிறைந்துகிடக்கின்றன. இதை முற்றிலுமாக நிராகரித்தாக வேண்டும். மருத்துவத்தைத் தொடர்ந்து பொறியியல் அனைத்து கலை அறிவியல் பாடங்களுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர இருக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியை Centralisation (அதிகாரத்தை மத்தியப்படுத்துதல்), Commercialisation (வர்த்தகமயப்படுத்துதல்), Communalisation (வகுப்புவாதப்படுத்துதல்) என்பதாகவே இருக்கிறது. இது செயல்படுத்தப்பட்டால் மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொண்டு மாநில அரசு வெறும் தபால் நிலையங்கள் போல மட்டுமே செயல்படுகிற சூழல் உருவாகிவிடும்” என்றார்.

அடுத்து பேசிய பேராசிரியர் மாடசாமி, “புதிய கொள்கை ஒன்று அரசிடம் இருந்து வருகிறதென்றால் அது நம்பிக்கையையும், புதிய கனவுகளையும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த புதிய கல்விக் கொள்கை வந்த முதல் நாளே அச்சத்தைத் தருவதாகவே இருந்தது. பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படும் என்பது தொடங்கி, சமீப ஆண்டுகளில் கல்வி சார்ந்து வந்த அனைத்து அறிவிப்புகளும் தவறானதாகவே இருந்து வந்துள்ளது. கல்வியில் தரம் என்பதுதான் குழுந்தைகள் மீது திணிக்கப்படுகிற வன்முறை என்று டால்ஸ்டாய் ஒருமுறை கூறினார்.

பேராசிரியர் மாடசாமி
பேராசிரியர் மாடசாமி

இன்று தரத்தின் பெயரில் மூன்றாம் வகுப்பில் இருந்தே பொதுத்தேர்வு, எட்டாம் வகுப்பில் இருந்து பருவத் தேர்வு பின்னர் உயர்கல்விக்கு தேசிய அளவில் தனி நுழைவுத் தேர்வு என மாணவர்கள் மீது சுமையை அதிகரித்து வருகின்றனர். மேலை நாடுகளைப் போல எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே வேண்டாம் என்பது போன்றான மாற்றங்களைத்தான் கல்வியில் நாம் எதிர்பார்க்கிறோம். பள்ளிகளுக்கான பாடத்திட்டங்களையும் இனி மாநில அரசு தயாரிக்காமல் மத்திய அரசே தயாரித்து வழங்கும் என்கிறார்கள். கல்வியின் அடிப்படையையே தகர்க்கும் செயல் இது” என்றார்.

பேராசிரியர் கல்யாணி, “இங்கே இந்தித் திணிப்பு, சமஸ்கிரித திணிப்பைப் பற்றி நாம் அதிகம் பேசி வருகிறோம். ஆனால், தாய்மொழி இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்படுவதைப் பற்றி நாம் பேச மறுத்துவருகிறோம். தமிழ்வழிக் கல்வியில் படிப்பது பற்றி நாம் கற்பனைகூட செய்து பார்ப்பதில்லை. தமிழில் படிப்பதை அவமானம் எனக் கருதுகிற அளவிற்கு நமக்குள்ளே ஒரு அகத்தடை இருந்துவருகிறது.

பேராசிரியர் கல்யாணி
பேராசிரியர் கல்யாணி

ஃபின்லாந்தை, 'கல்வியாளர்களின் மெக்கா' என அனைவரும் போற்றுகிறோம். அங்கு தாய்மொழிக் கல்வியால்தான் அவர்களால் அதை சாதிக்க முடிந்தது. தமிழகத்தைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் 170க்கும் அதிகம். ஐரோப்பாவில் உள்ள ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய தேசமான லக்ஸம்பெர்கில் கூட அவர்களுடைய தாய் மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்வழியில் படிப்பதற்கு இங்கு அங்கீகாரமும் ஊக்குவிப்பும் கிடையாது” என்றார்.

அடுத்து பேசிய கல்வியாளர் விழியன், “சுதந்திரத்திற்கு பிறகு கல்விக்காக வெளியிடப்படுகிற நான்காவது முக்கியமான அறிக்கை இது. கல்வியை கற்றுக்கொடுப்பதில் ஆசிரியருக்கான சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. புதிய கல்விக் கொள்கையில் அதைப்பற்றி எதுவுமே இல்லை. எங்கிருந்தோ யாரோ வடிவமைக்கிற செயல்திட்டங்களை செயல்படுத்துபவர்களாக மட்டுமே ஆசிரியர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

கல்வியாளர் விழியன்
கல்வியாளர் விழியன்

மாணவர்களிடையே கற்றல் குறைபாடு சிக்கல்கள் அதிகரித்து வருவதாக சமீப கால ஆராய்ச்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்தகைய சிறப்பு குழந்தைகளைப் பற்றி இதில் எதுவுமே இல்லை. கல்வியை வியாபாரமாக மட்டுமே இதில் அணுகியுள்ளனர். முதலில் கொள்கையை வகுத்து, பிறகான அதற்கான செயல்திட்டத்தைத் தீட்டி, பின்னர் அதை செயல்படுத்த வேண்டும். ஆனால் இங்கு கொள்கையே பிழையானதாக உள்ளது. மாணவர்கள் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் இதில் பேசியிருக்கிறார்கள். ஆனால் தீர்வுகள்தான் பின்னோக்கி செல்பவையாக இருக்கின்றன” என்றார்.

இறுதியாகப் பேசிய நடிகர் சூர்யா, “30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக் கொள்கை. ஆனால், அதைப்பற்றி பரந்துபட்ட அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒரு தலைமுறை மாணவர்களின் கல்வி தொடர்பான கொள்கையை வெளியிட்டு ஒரே மாதத்தில் கருத்து கேட்டு உடனே செயல்படுத்த வேண்டும் என, இத்தகைய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகின்றனர். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என அவர்கள் மீது திணிப்பது ஆபத்தானது. இன்று 30% மாணவர்கள் ஆசிரியரே இல்லாமல்தான் தேர்வு எழுத செல்கின்றனர்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பள்ளிப் பருவம் முழுவதும் தேர்வுகள் எழுதி, பின்னர் அதற்கு எந்தப் பயனும் இல்லையென உயர்கல்விக்கு தனியாக தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என கொண்டு வருவது சமமின்மையை அதிகரிக்கவே செய்யும். இதே அணுகுமுறை நீடித்தால் பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும். கல்லூரிகளில் எண்ணிக்கையை ஒருபுறம் குறைத்துவிட்டு மறுபுறம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்போம் என்பது முரணாக உள்ளது. இதைப்பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுப்ப வேண்டும். மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது” என்றார்.