Published:Updated:

`மாணவர்களின் எதிர்காலத்தில் ஏன் இவ்வளவு அவசரம்!' - புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா

இதே அணுகுமுறை நீடித்தால் பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

மத்திய அரசு அறிவுத்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டு 30 நாள்களுக்குள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. கல்வியாளர்களின் எதிர்ப்பை அடுத்து ஜூலை 31 வரை அவகாசம் நீடிக்கப்பட்டது. இதோடு கல்வியாளர்கள் பலரும் இணைந்து புதிய கல்விக் கொள்கை ஆவணத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்

இந்நிலையில், நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து தமிழகம் முழுவதும் இருந்து 12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினர். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கை தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் பேராசிரியர் வசந்திதேவி, பேராசிரியர் மாடசாமி, பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் விழியன் மற்றும் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய நடிகர் சூர்யா, ``30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக் கொள்கை. ஆனால் அதைப்பற்றி பரந்துபட்ட அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒரு தலைமுறை மாணவர்களின் கல்வி தொடர்பான கொள்கையை வெளியிட்டு ஒரே மாதத்தில் கருத்து கேட்டு உடனே செயல்படுத்த வேண்டும் என இத்தகைய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை.

அகரம் ஃபவுண்டேசன்
அகரம் ஃபவுண்டேசன்

கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகின்றனர். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என அவர்கள் மீது மொழிகளை திணிப்பது ஆபத்தானது. இன்று 30% மாணவர்கள் ஆசிரியரே இல்லாமல் தான் தேர்வு எழுத செல்கின்றனர்.

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் கண்கூட பார்த்து வருகிறோம். பள்ளிப் பருவம் முழுவதும் தேர்வுகள் எழுதி, பின்னர் அதற்கு எந்தப் பயனும் இல்லையென உயர்கல்விக்கு தனியாக தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என கொண்டு வருவது சமமின்மையை அதிகரிக்கவே செய்யும்.

சூர்யா
சூர்யா

இதே அணுகுமுறை நீடித்தால் பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும். கல்லூரிகளில் எண்ணிக்கையை ஒருபுறம் குறைத்துவிட்டு மறுபுறம் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்போம் என்பது முரணாக உள்ளது. இதைப்பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுப்ப வேண்டும். மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது” என்றார்.