Published:Updated:

ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!

ஆன்லைன் அலப்பறைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் அலப்பறைகள்

கல்லூரி மாணவர்களே அலர்ட்

ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!

கல்லூரி மாணவர்களே அலர்ட்

Published:Updated:
ஆன்லைன் அலப்பறைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் அலப்பறைகள்
திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய். வீட்டுக்கு ஒரே பிள்ளை. 10-ம் வகுப்பில் 427 மார்க். +2விலும் குறைவில்லை, 905. ஒரு பொறியியல் கல்லூரியில் இ.சி.இ சேர்ந்தார்.

“ஸ்கூல்ல எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி எழுதுவோம். இன்ஜினீயரிங்ல ஒண்ணுமே புரியலே. முதல் செம்ல 6 பேப்பர். போராடி 5 பாஸ் பண்ணிட்டேன். ரெண்டாவது, மூணாவது செம்ல அஞ்சஞ்சு அரியர். நாலாவது, அஞ்சாவதுல ஆறு ஆறு... ஆகமொத்தம் 23 அரியர். பசங்களெல்லாம் ஒண்ணு ரெண்டு அரியர் இருந்தாலே புலம்பித் தீத்திருவானுங்க. ‘எல்லாத்தையும் மேல இருக்கவங்க பாத்துக்குவாங்க’ன்னு விட்டுட்டேன். ஆனா, நாலாவது வருஷத்துல சிக்கல் வந்திருச்சு. முதல் வருஷத்துல எல்லா பேப்பரையும் க்ளியர் பண்ணியிருந்தாதான் நாலாவது வருஷம் போகமுடியும். இல்லேன்னா ஜூனியர்ஸ்கூட உக்காந்து படிக்கணும். சரி, எப்படியாவது கஷ்டப்பட்டு முதல்வருடத்துல இருக்கிற ஒரு அரியரை கிளீயர் பண்ணிடலாம்ன்னு எக்ஸாம் பீஸ் கட்டப்போனேன். ஒரு பேப்பருக்கெல்லாம் கட்டமுடியாது... எல்லாப் பேப்பருக்கும் பீஸ் கட்டுங்கன்னு சொன்னாங்க. நானும் 23 பேப்பருக்கும் கட்டிட்டு வந்துட்டேன். நல்லவங்களை ஆண்டவன் கைவிடமாட்டான். இப்போ பீஸ் கட்டியிருந்தாலே தேர்ச்சின்னு முதலமைச்சர் சொல்லிட்டாரு... மொத்தப் பேப்பரும் கிளீயர்...” உற்சாகம் பொங்கப் பேசுகிறார் சஞ்சய்.

வேடிக்கையாகத்தான் இருக்கிறது, தமிழகத்தின் கல்விச்சூழல். மொத்த இயல்பையும் புரட்டிப்போட்ட கொரோனாவால் கல்வியும் நியூ நார்மலாகிவிட்டது. ஊடகங்களில் முதல்வர் எடப்பாடியைக் கடவுள் ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் அரியர் மாணவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வியில் அரசியல்

இதற்குமுன்பு நம்மை பாதித்த வைரஸ்களைவிடக் கொடூரமானதாக இருக்கிறது கொரோனா. பாதிப்பு அதிகமாகிவரும் சூழலில், வீட்டில் முடங்குவது ஒன்றுதான் தீர்வாக இருக்கிறது. கல்விக்கூடங்களைத் திறப்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அதனால், இப்படியான தேர்ச்சி அறிவிப்புகள் தவிர்க்கமுடியாததுதான். ஆனால், அதிலும் அரசியல் செய்கிறார்கள் என்பதே இப்போது அலையடிக்கும் குற்றச்சாட்டு. 10-ம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டபோதே மாணவர்கள் பலரும் முதல்வர் எடப்பாடியைக் கொண்டாடினார்கள். அந்த பல்ஸைப் புரிந்துகொண்டு, சோசியல் மீடியா விங்குகள் விழித்துக்கொண்டன. கல்லூரிப் பருவத் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே சோசியல் மீடியாக்களில் எடப்பாடி சூப்பர் ஹீரோவாகிவிட்டார். ‘எங்கள் குலம்காத்த தெய்வமே’ என்ற அளவுக்கு ‘மாணவர்கள்’ நெகிழ்ந்தார்கள். ஊர்களில் எடப்பாடியின் சிரித்தமுகத்தை பிளக்ஸ், போஸ்டர்களில் போட்டு அமர்க்களப்படுத்தி னார்கள். உச்சமாக, மறுநாள் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் ‘மாணவர்களின் மனிதக் கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்’ என்று ‘மாணவர் முன்னேற்ற அமைப்பு’ விளம்பரமே கொடுத்தது. மாணவர்களின் ஓட்டு குறிவைக்கப் படுவதைக் கவனித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘அதென்ன, தேர்வுக்கட்டணம் கட்டியவர்கள் மட்டும்... மொத்தப் பேரையும் பாஸ் போடுங்கப்பா’ என்று அறிக்கை விடுக்க, அந்தப் பக்கமும் கொஞ்சம் ஸ்கோர் போனது.

சஞ்சய், ஸ்வாதிக் சங்கரலிங்கம், நெடுஞ்செழியன்
சஞ்சய், ஸ்வாதிக் சங்கரலிங்கம், நெடுஞ்செழியன்

கல்லூரிகளில் என்ன நடக்கிறது?

சில கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் ஜூலை தொடக்கத்திலேயே ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்துவிட்டார்கள். அரசுக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கென அரசு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. பேராசிரியர்களே கூகுள் மீட், ஜூம் செயலிகளைப் பயன்படுத்தி வகுப்பை நடத்துகிறார்கள்.

“உண்மையைச் சொல்லணும்னா, நிறைய ஆசிரியர்களுக்கு கூகுள்மீட், ஜூம் எல்லாம் புதுசு. பல ஆசிரியர்கள்கிட்ட லேப்டாப்கூட கிடையாது. திடீர்ன்னு ஆன்லைன் கிளாஸ்ன்னு சொன்னவுடனே யாருக்கும் எதுவும் புரியலே. முறைப்படி, நிறுவனங்கள்கிட்ட இருந்து ஐ.டி வாங்கினா பெரும் செலவு. அதனால இப்போவரைக்கும் இலவச ஸ்லாட்டைத்தான் பயன்படுத்துறோம்.

நிறைய பேருக்கு லிங்க் ஓபன் பண்ணக்கூடத் தெரியலே. 40 சதவிகிதம் ஸ்டூடன்ட்தான் கிளாஸ் அட்டென்ட் பண்ணுறாங்க. நிறைய மாணவர்கள்கிட்ட ஸ்மார்ட் போனே இல்லை.

அரசுக்கல்லூரிகளைப் பொறுத்தவரை நிறைய கௌரவ விரிவுரையாளர்கள் இருக்காங்க. மாணவர்கள் நிலை எப்படியோ அப்படித்தான் அவங்க நிலையும். நல்ல போன்கூட வச்சிருக்கமாட்டாங்க. கிடைக்கிற இடத்துல உக்காந்து மொபைலை டேபிள் மேல வச்சுப் பேசுறாங்க” என்கிறார் தஞ்சையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்.

மாணவர்கள் பிரச்னை வேறு மாதிரி!

“தினமும் 5 மணி நேரம் கிளாஸ்... ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் லீவ். இன்ஜினீயரிங் காலேஜ்ல 8 மணி நேரம் நடத்துறாங்க. ஒரு நாளைக்கு ஒரு ஜிபிக்கு மேல டேட்டா தேவைப்படுது. காலேஜ் பீஸைவிட ஆன்லைன் கிளாஸுக்கு அதிக செலவு பண்ண வேண்டியிருக்கு. போர்டுகூட இருக்காது. மேத்ஸ், சயின்ஸெல்லாம் நோட்டுல எழுதி வீடியோவுல காமிக்கிறாங்க. போர்டுல எழுதிப் படிச்சாலே சரியா புரியாது. இதை எப்படிப் புரிஞ்சுக்க முடியும். உண்மையைச் சொல்லணும்னா பேருக்குத்தான் கிளாஸ் நடக்குது...” என்கிறார் முதுகலை அறிவியல் படிக்கும் அய்யம் பேட்டையைச் சேர்ந்த ஆசிக்.

ஆன்லைன் வகுப்பை கிராமப்புற மாணவர்களால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை என்பதே யதார்த்தம். அமர்ந்து படிக்க இடம், டேட்டா, டவர் எனப் பல பிரச்னைகள். பெரும் பாலானோர் வகுப்புக்கு வருவதேயில்லை. வருபவர்களிலும் லிங்கை ஓபன் செய்து வைத்துவிட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் என வேறு உலகத்துக்குள் நுழைந்துவிடுபவர்களே அதிகம்.

ஆன்லைன் கிளாஸ் மாணவர்களிடையே இப்போது டிரெண்டாக இருப்பது 3G. ‘Guess Gif Game’. வாட்ஸப்பில் அனிமேட்டட் ஜிப்களைப் பரிமாறி விளையாடுவது, ஸ்க்ரீன் ஷேர்செய்து ஆசிரியரின் முகத்துக்கு மேல் டூடுல் வரைவது, தொடர்ந்து கேள்வி கேட்கும் ஆசிரியர்களின் வகுப்பில் Reconnecting என புரொபைல் படம் வைத்து சேட்டை செய்வது என டெக் கில்லாடிகளின் அட்டகாசம் வேறு லெவலாக இருக்கிறது.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

பெற்றோர் என்ன சொல்கிறார்கள்?

“என் பொண்ணு எம்.காம் படிக்கிறா. பையன் பி.எஸ்.சி. காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் சிறிய வீட்டுக்குள்ள ஆளுக்கொரு பக்கம் மொபைலை கையில வச்சுக்கிட்டு உக்காந்திருக் காங்க. கடுமையான மன அழுத்தத்தோட இருக்காங்க. முன்னாடில்லாம் மொபைலை கையில வச்சிருந்தாவே திட்டுவோம். இப்போ எல்லா நேரமும் அவங்க கையில மொபைல் இருக்கு. அதுவும் பதற்றமா இருக்கு. இது எங்கே போய் முடியும்ன்னு தெரியலே” என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்தாஸ். பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலை ஒருபுறம், ஆரோக்கியம் குறித்த கவலை ஒருபுறம் எனப் பெற்றோருக்கும் இந்தச்சூழல் பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது.

மனநல மருத்துவர் சொல்வதென்ன?

“உலகமே இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நிலைமை சீராகிவிடும். அதனால் மாணவர்களும் சரி, பெற்றோரும் சரி, இந்தச்சூழலைக் கடக்கப் பழக வேண்டும்.

எல்லா நேரமும் மாணவர்கள் ஆன்லைனில் இருப்பதால் ‘ஆன்லைன் அடிக்ட்’ ஆகும் நிலை உருவாகலாம். பெற்றோர் இதில் கவனமாக இருக்கவேண்டும். வகுப்பு நடக்கும்போது, உடன் அமருங்கள். வீட்டில் அமைதியான சூழலை உருவாக்குங்கள். இந்தத் தற்காலிகப் பிரச்னையிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு” என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

எதிர்காலத்தை பாதிக்குமா?

பருவத்தேர்வு தேர்ச்சி, ஆன்லைன் கல்வி... இவையெல்லாம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பாதிக்குமா? 2020-21 மாணவர்கள் ஒதுக்கப்படுவார்களா?

“ஒரு பாதிப்பையும் உருவாக்காது. கொரோனாவால் வேலைகளே வேறு வடிவங்களுக்கு மாறப்போகின்றன. புதிய புதிய தொழில்கள் வரலாம். அதனால் வேலை வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.” என்கிறார் சமூகக் கல்விச் செயற்பாட்டாளர் தா.நெடுஞ்செழியன்.

“இப்போதைக்கு உயிர்தான் முக்கியம். நிச்சயம் இந்த ஓராண்டுக்குத் தரமான கல்வி கிடைக்கப்போவதில்லை. மாணவர்கள் அதற்காக வருந்தத்தேவையில்லை. உடல் மற்றும் மனநலம் மனநிலை இரண்டையும் பாதுகாப்பதே இப்போது தேவை. நிறைய புத்தகங்கள் வாசியுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். ஓவியம், இசை, நடனம் என, பிடித்த விஷயங்களில் முழு மனதோடு ஈடுபடுங்கள். இதெல்லாம்தான் கல்வி. https://swayam.gov.in, https://nptel.ac.in ஆகிய அரசு இணையதளங்களில் ஏராளமான ஆன்லைன் பயிற்சிகள் தரப்படுகின்றன. பெரும்பாலும் எல்லாம் இலவசம். அவற்றைப் படியுங்கள்” என்கிறார் நெடுஞ்செழியன்.

ஊரடங்கு, வேலையிழப்பு என இந்தப் பேரிடர் நாம் நினைத்துக்கூடப் பார்த்திராத பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வியிலும் அதுவே எதிரொலிக்கிறது. தன்னம்பிக்கை இழக்காமல் இந்தத் தருணத்தைக் கடப்போம். நிச்சயம் இதுவும் கடந்தும்போகும்!

பத்துக்கோடி பப்ளிசிட்டி

முதல்வர் எடப்பாடி, கல்லூரிப் பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அறிவித்த மறுநாள் பத்திரிகைகளில் வெளிவந்த முழுபக்க விளம்பரம் தமிழகத்தை அதிர வைத்தது. சென்னையின் அத்தனை அடையாளங்களையும் பின்னணியில் வைத்து எடப்பாடி புன்னகையோடு கைகூப்பி நிற்க, ‘மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே’ என்ற வாசகங்கள் மட்டுமே அந்த விளம்பரத்தில் இருந்தன. பெரும்பாலும் அனைத்துத் தமிழ் நாளிதழ்களிலுமே இந்த விளம்பரம் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசப்படவேண்டும் என்பதால் ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு நாள் வரும்வகையில் பிரித்துப் பிரித்துத் தந்துள்ளார்கள்.

இந்தத் தமிழ்நாடு மாணவர் முன்னேற்ற அமைப்பு ஐடியா, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் மூளையில் உதித்தது என்கிறார்கள். அந்த ஐடியாவுக்கு வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த வாரிசுகள் சிலர் உயிர்கொடுத்திருக்கிறார்கள். கோவையில் டிசைன் செய்து ஒரு மீடியேட்டர் மூலம் அங்குள்ள பதிப்புகளில் விளம்பரத்தை புக் செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் பத்திரிகைகளில் விளம்பரம் செல்ல, அதை சோசியல் மீடியாக்களில் பிரமாண்டமாக பிரமோட் செய்திருக்கிறது, ஐ.டி விங்க். இந்த விளம்பரத்துக்கான பட்ஜெட் மட்டும் பத்துக் கோடிக்கு மேலிருக்குமாம்.

மாணவர்களின் கொரோனா கால வாழ்க்கை எப்படி இருக்கிறது என விகடனின் சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!

அதில் 40% மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை ‘சீரியஸாக கவனிப்பதாக’ சொல்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் ‘சோஷியல் மீடியா ஆப்களையே அதிகம் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகளுக்கான ஆப்கள் இரண்டாவது இடத்தில்தான் இருக்கின்றன. பாடம் தவிர பிற விஷயங்களை ஆன்லைனில் கற்பதற்கு மாணவர்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள், பிட்னெஸ், இசை, சமையல், புரோகிராமிங் ஆகியவை அவர்களின் பட்டியலில் டாப்லிஸ்ட். அடுத்த செமஸ்டரும் ஆன்லைன் என்றால் 82% மாணவர்கள் ‘முடியவே முடியாது’ என்கிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கசக்கின்றன. ஆனாலும், பாடம் சாராத பிற விஷயங்களை ஆன்லைனில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதே இந்தக் கருத்துக்கணிப்பு சொல்லும் முடிவு.

கல்வியில் அரசியலா?

முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் அதிமுகவின் செய்தித்தொடர்பாளருமான வைகைச்செல்வனிடம் உரையாடினோம்.

ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!

“பருவத்தேர்வுகளுக்கு விலக்களிக்கப்பட்ட மறுநாள், நாளிதழ்களில் ‘எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்’ என்று விளம்பரம் வருகிறது. கல்வியில் அரசியல் செய்வது சரியா?”

“இதில் என்ன அரசியல் இருக்கிறது. உயர்மட்டக் குழு பரிந்துரையின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஒரு செயலைச் செய்தால் அதனால் பயனடைந்தவர்கள் பாராட்டுவதும் வாழ்த்துவதும் இயல்புதானே? “

“தேர்வுக்கட்டணம் கட்டாத மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறாரே?”

“கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுதத் தயாராக இல்லை என்றுதானே பொருள். ஒரு போட்டி நடக்கிறது... அதில் பங்கே பெறாதவர்களை எப்படி வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கமுடியும். பார்வையாளர்களுக்கு பரிசு தரமுடியுமா?”

“ அறிவிப்புகளில் ஏன் இத்தனை குழப்பங்கள்... பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மத்தியிலேயே ஒருங்கிணைப்பு இல்லையே?”

“ சூழலுக்குத் தகுந்தமாதிரிதான் முடிவெடுக்கமுடியும். பள்ளியில் இருப்பவர்கள் குழந்தைகள். அதை மனதில் வைத்து சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உயர்கல்வியோடு அதைப் பொருத்திப்பார்க்கக்கூடாது.”

“கல்வி விஷயத்தில் மத்திய அரசின் அழுத்தம் அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறதே?”

“ஒரு அழுத்தமும் இல்லை. பத்தாம் வகுப்பு தேர்வு விஷயத்தில் சில குழப்பங்கள் இருந்தன. நாம் நம் மாநிலத்துக்குத் தக்கவாறு முடிவெடுத்தோம். அவ்வளவுதான்.”

“மாணவர்களைப் பாதிக்கும் என்று கல்லூரி பருவத்தேர்வுகளை ரத்து செய்தது சரி. நீட் தேர்வை நடத்துவது சரியா?”

“நீட் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இந்தாண்டு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். சில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். நாங்களும் அதுபற்றி பரிசீலனை செய்து வருகிறோம்.”

உங்கள் மகன்/மகள் மனநலனோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிய ஓர் எளிய வழி. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்று பதிலளியுங்கள்.

1.ஆன்லைன் வகுப்பு உட்பட எல்லாச் செயல்களையும் ஆர்வமில்லாமலே செய்கிறார்கள்.

ஆம்

இல்லை

2. உற்சாகமே இல்லாமல் இருக்கிறார்கள். எப்போதும் நம்பிக்கையில்லாமல் பேசுகிறார்கள்.

ஆம்

இல்லை

3. தூங்குவதேயில்லை அல்லது வழக்கத்தைவிட அதிகநேரம் தூங்குகிறார்கள்.

ஆம்

இல்லை

4. வழக்கமாக சாப்பிடுவதைவிட மிகவும் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ சாப்பிடுகிறார்கள்

ஆம்

இல்லை

5. அவர்களைப் பற்றியே நல்ல அபிப்ராயம் இல்லாமல் பேசுகிறார்கள்.

ஆம்

இல்லை

6. சோர்வாக, சக்தியவற்றவர்களைப் போலவே இருக்கிறார்கள்

ஆம்

இல்லை

7. எதிலும் முழுமையான கவனம் இல்லை. டிவி பார்ப்பது, பேசுவதில்கூட...

ஆம்

இல்லை

8. வழக்கத்திற்கு மாறாக மெதுவாகவோ, வேகமாகவோ நடக்கிறார்கள், பேசுகிறார்கள்.

ஆம்

இல்லை

9. இறப்பு பற்றியும் தற்கொலை பற்றியும் பேசுகிறார்கள்.

ஆம்

இல்லை

“இந்த 9 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் இருந்தால் பிரச்னையில்லை. 3 கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் இருந்தால் பிள்ளை மேல் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அரவணைத்து, தன்னம்பிக்கையூட்டுங்கள். 4 கேள்விகளுக்கு மேல் ஆம் என்று பதில் இருந்தால் ஒரு மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் அனைத்துமே தொடர்ச்சியாக 2 வாரங்களுக்கு மேல் இருக்கவேண்டும். இது மேலோட்டமான ஒரு சோதனைமுறை மட்டுமே. பதற்றமடையத் தேவையில்லை” என்கிறார் மனநல ஆலோசகர் பா. இளையராஜா.