Published:Updated:

ஆசிரியப்பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம்: `எங்கள் நிலை இன்னும் மோசமாகும்!'- வேதனையில் ஆசிரியர்கள்

ஆசிரியர் படிப்பு முடித்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அரசு பணிக்காகப் பத்தாண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழல் இருக்கும் போது ஆசிரியர் பணிக்கு வயது நிர்ணயம் செய்வது ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிதிச்சுமையை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி, பின் அதையும் 60 ஆக உயர்த்தி முந்தைய அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. அப்போது கொந்தளித்தார்கள் ஆசிரியப் பணிக்காகக் காத்திருந்த பலர். காரணம், 58 வயதில் ஓய்வு பெற்றால், அங்கே காலிப் பணியிடங்கள் உருவாகும். பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்ததனால், மேலும் இரண்டு ஆண்டுகள் பணிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு ஆசிரியர் படிப்பு முடித்த பட்டதாரிகள் தள்ளப்பட்டார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த முதல் அடி.

இந்நிலையில் 2019-ல் வெளியான முதுநிலை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தது முந்தைய அரசு. அதாவது, முதுநிலை ஆசிரியர் நேரடி நியமன முறைக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினரின் வயது 40-க்குள்ளும், இதர பிரிவினரின் வயது 45-க்குள்ளும் இருக்க வேண்டும் என்று வரையறை செய்தது.

ஏற்கெனவே, பணியில் உள்ளோருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பால், பணிக்காகக் காத்திருப்பவர்களின் வயதில் இரண்டு ஆண்டுகள் கரைந்துவிட்டன. மேலும் இப்படி ஓர் அறிவிப்பு செய்வது எவ்விதத்தில் நியாயம் என்று பலர் கூக்குரல் எழுப்பியும், கோரிக்கைகள் வைத்தும், அன்றைய அரசு அசையவில்லை.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இப்போதைய தி.மு.க அரசு ஆசிரியர் படிப்பு முடித்தவர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஓர் அரசாணை பிறப்பித்து, பிரச்னையைக் கொஞ்சம் சரிசெய்திருக்கிறது.

பள்ளி
பள்ளி

அந்த அரசாணையில் உள்ள முக்கியக் கூறுகள் இங்கே...

* ஆசிரியப் பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு, பொதுப் பிரிவினருக்கு 40 எனவும், இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30-ல் இருந்து 32 ஆக உயர்த்தியும், அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்தவரையில், மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

* ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும், 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயித்து ஆணை வழங்கிடப் பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

* தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்புக்கான விதி எண்: 6 (ஏ), 5 (ஏ) மற்றும் 6-ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக, உச்ச வயது வரம்பைப் பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

School Students (File Pic)
School Students (File Pic)
Photo: Vikatan / Balasubramanian.C
பொறியியல் பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர B.Ed படிக்க வேண்டுமா? | Doubt of Common Man

* இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பு 31.12.2021 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2021 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்குப் பொருந்தும்.

* அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மைத் துறை நாள் 13.09.2021-ன்படி, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பை, 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு முன்பு எப்படி இருந்தது?

பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆகவும் இருந்தது. அதாவது, 57 வயது ஆனாலும் ஆசிரியர் பணியில் சேரலாம் என்று இருந்தது. அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதன் காரணமாக, 59 வயது வரை உள்ளவர்கள் பணியில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதற்கு மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பு 40 என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, பள்ளி ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் பள்ளிக் கல்விச் செயலாளர் ககர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பொள்ளாச்சியைச்ச சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான பொ.மோகன்ராஜிடம் பேசினோம்.

``ஆசிரியப் பணியை நம்பி லட்சக்கணக்கானோர் உள்ளனர்!''

``எனக்கு வயது 30 ஆகிறது. நான் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் எம்.ஏ.,பி.எட்.,டி.டி.எட்.படித்து முடித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

அரசுப்பள்ளி வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களின் நானும் ஒருவன். எனக்கு இன்னும் வயது இருக்கிறது. இருந்தாலும் ஆசிரியர் பணியை நம்பி பிஎட், டிடிஎட் படித்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் நிலையை அரசு எண்ணிப்பார்க்க வேண்டாமா?

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி, ஆசிரியர் நேரடி நியமன தேர்வில், வயது வரம்பு நீட்டிப்பு 31-12-2022 வரை ஒருமுறை மட்டுமே என்பது, ஆசிரியர் படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வருடக் கணக்கில் அரசு பணிக்கான கனவில் இருப்பவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி.

தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பே முற்றிலும் இல்லை என்ற நிலை உள்ளது. ஆசிரியர் படிப்பு முடித்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அரசு பணிக்காகப் பத்தாண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழல் இருக்கும் போது ஆசிரியர் பணிக்கு வயது நிர்ணயம் செய்வது ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இந்த வயது வரம்பு நீட்டிப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஒரு வருட தற்காலிக வயது வரம்பு நீட்டிப்பை நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது வயது வரம்பு நிர்ணயித்தலை தவிர்த்து பணி ஓய்வுக் காலம் வரை அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போதைய வயது நீட்டிப்பு என்பது தற்காலிக ஆறுதலே. அதுவும் ஒருவருட ஆறுதல்” என்றார்.

``மன இறுக்கத்தைக் கொடுத்திருக்கிறது!"

பிஎட், டிடிஎட் படித்து முடித்தவர்கள், வீட்டில் இருப்பதில்லை; தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் மிகுதியான வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் கற்பித்தல் திறனை கூர்தீட்டி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி என்பதுதான் என்கிறார்கள் சிலர்.

சு. அமிர்தவள்ளி
சு. அமிர்தவள்ளி

இதுகுறித்து கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் சு. அமிர்தவள்ளியிடம் கேட்டபோது,

``எனக்கு வயது 47. நான் இங்கு ஒரு தனியார் பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். தமிழ் நாடு அரசு, முதுகலை ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக வயது வரம்பு நிர்ணயம் செய்து சென்ற மாதம் அரசாணை வெளியிட்ட போது மிகுந்த வேதனைக்குள்ளானேன். ஏனெனில் எனது வயது வரம்பு இதற்குள் வரவில்லை. காலாவதி ஆகிவிட்டது. 25 ஆண்டுக்காலம் ஆசிரியர் பணியில் இருக்கிறேன். அரசுப்பணி எப்படியாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். இந்த அறிவிப்பினால் கனவாகப் போய்விட்டதே என்று வருத்தமடைந்தேன்.

கற்பிப்பவர் ஆசிரியர் அல்ல, அன்றாடம் கற்றுக் கொள்பவர்தான் சிறந்த ஆசிரியர் . அத்தகைய ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

அரசு தற்பொழுது வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டு, தகுதியுடைய அனைவருக்கும் மறு வாய்ப்பு அளித்திருப்பதாக உணர்கிறேன். எனக்கு அடுத்த ஆண்டு இறுதிவரை மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு இறுதி வரை மட்டுமே செல்லும் என்ற நிபந்தனையால் ஒரு வித மன இறுக்கத்தையும் கொடுத்திருக்கிறது'' என்றார்.

``52 வயதில் ஆசிரியர் ஆனேன்!"

இதற்கு முன்பு எவ்வித வயது வரம்பு நிர்ணயமும் இல்லாதபோது, திருவாரூரைச் சேர்ந்த முத்துராஜா தன்னுடைய 52-வது வயதில் அரசுப்பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தவர். அவரிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``எனக்கு இப்போது 61 வயதாகிறது. கடந்த 2012 -ம் ஆண்டு எனது 52 வயதில் TET தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் பேரளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன்.

1991-ம் ஆண்டு B.Ed முடித்த எனக்குப் பல ஆண்டுகளாக வேலை கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்பப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்தது. +2 முடித்து ஆசிரியர் பட்டயம் பெற்ற எனது தங்கை ஆசிரியராகி விட்டார். ஆனால் பட்டப்படிப்பு படித்ததால், அதுவும் குறிப்பாக வரலாறு, புவியியல், தமிழ் போன்ற பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. வரலாறு - 5, புவியியல் - 1 எனக் காலி பணியிடங்களுக்கு ஒரு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கவே செய்தது.

முத்துராஜ்
முத்துராஜ்

1998-ல் நமது ஊரில் வேலை கிடைக்காது என்று புரிந்து கொண்டேன். மாலத்தீவு குடியரசினுடைய கல்வித்துறையில் ஆசிரியர் பணி கிடைத்தது. 10 ஆண்டுக்காலம் அங்கே சிறப்பாகப் பணியாற்றினேன்.

வயதான தாய், தந்தையரை கவனிக்க வேண்டி ஊர் திரும்பினேன். இத்தனைக்கும் 1991-ம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்புப் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வந்தேன். 2010க்கு பிறகு எனக்கு இருமுறை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை . பதிவு மூப்பு அடிப்படையில் கூட வரலாறு படித்தவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் 2012-க்கு பிறகு அந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அப்போது வயது வரம்பு 58. கொடுமை என்னவெனில், அப்போது பலர் 58 வயதைக் கடந்து வேலை கிடைக்காமலே தகுதி இழந்தனர்.

டெட் தேர்வுக்குப் பிறகே பணியிடங்களை ஓரளவுக்கு நிரப்ப ஆரம்பித்தார்கள். 2012-ல் இருந்து 2015-க்குள் நிரப்பப்பட்ட சுமார் 30,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (வரலாறு மட்டுமே 3000 பணியிடங்கள்) அதே ஆண்டுகளில் காலியானவை அல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நிரப்பப்படாமல் இருந்தவையே.

Teacher Eligibility Test
Teacher Eligibility Test
`ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பாண்டு பத்திரங்களா?' - எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்கள்

தகுதியான நபர்கள் இருந்த போது காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருந்தால் வயது வரம்பை குறைத்து நிர்ணயம் செய்வது சரி. ஆனால் என்னுடன் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அப்போது பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் வந்த அரசின் தேர்வு முறையில் நான் 52 வயதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் ஆனேன்.

அரசுகள் மாறும் போது கொள்கை முடிவுகள் மாறுகின்றன. ஆனால் பாதிக்கப்படுவது வேலை தேடுவோர்தான். சரியான நேரத்தில் வேலை கிடைக்காத காரணத்தால் எனக்கு ஓய்வூதியம் இல்லாமல் போய்விட்டது.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சரியாக, திறமையாக பணிபுரிய முடியாது என்று சிலர் வாதம் செய்கின்றனர். இது தவறு. நான் மாநில அளவில் கருத்தாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறேன். அனைவருக்கும் கல்வித் திட்டம் (RMSA) செயல்பாடுகளில் பணியாற்றி இருக்கிறேன். ஆசிரியர்களுக்காக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன். என்னிடம் படித்த மாணவர்களின் தரத்தை உயர்த்தியிருக்கிறேன்.

என் போன்ற பலருக்குத் திறமை இருந்தும், வயது வரம்பால் பணி வாய்ப்புக் கிடடைக்காமல் போய்விடக்கூடாது. வயது வரம்பை அரசு தளர்த்த வேண்டும்” என்கிறார்.

ஆசிரியர் பணிக்குப் பல லட்சங்களில் பணமா?

``ஆதியில் இருந்தே இப்பணிகளுக்கு வயது வரம்பு என்பதை நிர்ணயிக்காமல் திடீரென்று நிர்ணயிப்பது ஏன்? வயது வரம்பின் விளிம்பில் இருப்பவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் எண்ணமா? அல்லது வயது வரம்பு காலாவதியாகிவிடும், பணம் கொடுத்தேனும் வேலையை வாங்கிவிட வேண்டும் என்று பணிக்குக் காத்திருப்பவர்களை மறைமுகமாகத் துண்டுதலுக்கு ஆளாக்குகிறார்களா? சமையல் உதவியாளர் பணிக்கே மூன்று முதல் ஐந்து லட்சம் வரை விலை பேசிய விற்பன்னர்கள் இருக்கும் இடத்தில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சமையலர் பணிக்கே இப்படி எனில், ஆசிரியர் பணிக்குச் சொல்லவா வேண்டும்” என்று சந்தேகக் குரல் எழுப்புகிறார் பெயர் வெளியிட விரும்பாத தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

``கோச்சிங் சென்டர்கள்தான் வளரும், ஆசிரியர்கள் அல்ல!"

``இனி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்போகிறார்கள் எனில் பிஎட், டிடிஎட் படிப்புக்கும் வயது வரம்பு நிர்ணயம் செய்யுங்கள். இந்த வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இனிமேல் இப்படிப்பை படிக்க முடியும், தனியார் பள்ளிகள் டிடிஎட், பிஎட் படித்தவர்களை மட்டுமே பணிக்கமர்த்த வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிடுங்கள்.

TET Exam
TET Exam
இது வாத்தியார்களின் வீடு... ஒரே குடும்பத்தில் 7 ஆசிரியர்கள்; அதில் 3 பேருக்கு நல்லாசிரியர் விருது!

ஏற்கெனவே டெட் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர் பணிக்கு வரும் ஆசையைச் சிதைத்துவிட்டீர்கள். அது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே, இனி ஆசிரியராக வேண்டுமெனில் அதற்காக ஒரு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்று அடுத்த ஓர் இடியை இறக்கி இருக்கிறீர்கள். இப்போது வயது வரம்பு. இனி ஆசிரியர் படிப்புகளுக்குகூட மாணவர்கள் இருக்க மாட்டார்கள். தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போல, தனியார் கல்வியியல் கல்லூரிகளுக்கும் விரைவில் மூடுவிழா நடத்தப்போகிறார்கள். டெட் தேர்வு, போட்டித்தேர்வு ஆகியவற்றின் மூலம் கோச்சிங் சென்டர்கள்தான் வளருமே தவிர ஆசிரியர்கள் அல்ல” என்று பலமுனைகளில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழக அரசின் கல்வித்துறை என்ன செய்யப்போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- மோ.கணேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு