Published:Updated:

`அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை! - அமைச்சரை நெகிழவைத்த ராமநாதபுரம் ஆசிரியர்

விழாவில், எழுத்தறிவு புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர்.
விழாவில், எழுத்தறிவு புத்தகத்தை வெளியிட்ட அமைச்சர். ( உ.பாண்டி )

ஆசிரியர் உலகராஜ், தான் கல்வி பயின்ற தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த சிறப்பு எழுத்தறிவு திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி அசத்தியுள்ளார், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர் உலகராஜ்.

விழாவில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
விழாவில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில், கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றிவருபவர் ஆசிரியர் உலகராஜ். தான் பணியாற்றிய பள்ளிகளிலும், ஆசிரியர்களுக்கான பயிற்சி அரங்குகளிலும் நமது பாரம்பர்ய கலைகளான வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கோலாட்டம் போன்றவற்றின்மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வழக்கமான முறைகளைவிட, கலைகளுடன் இணைத்து பாட முறைகளைக் கற்பிப்பதன்மூலம், மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஈடுபாட்டை உருவாக்கிவருகிறார். இதன்மூலம், சிறந்த கல்வியை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதுடன், பாரம்பர்ய கலைகளை அழிவிலிருந்து பாதுகாத்தும்வருகிறார். இந்நிலையில், தான் கல்வி பயின்ற அரசு பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் உலகராஜ்.

கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மத்திய அரசின் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், மாநில பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் தொடக்கவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோருக்கான அடிப்படை எழுத்தறிவு புத்தகத்தை வெளியிட்டார்.

ஆசிரியர் உலகராஜ் அமைச்சரிடம் நன்கொடை வழங்கினார்.
ஆசிரியர் உலகராஜ் அமைச்சரிடம் நன்கொடை வழங்கினார்.
உ.பாண்டி

இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றிவரும் ஆசிரியர் உலகராஜ், தான் கல்வி பயின்ற தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இதற்கான காசோலையை உலகராஜ் வழங்கினார்.

இதுகுறித்து உலகராஜ் கூறுகையில், ``6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தேவிபட்டினம் அரசுப் பள்ளியில் படித்தேன். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மாணவனாகத் தேர்வுபெற்றேன். அதைத் தொடர்ந்து, +2 தேர்விலும் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்வானேன். இதனால் ஆசிரியர் பணியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. கடந்த 29 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன்.

கல்வியின் மீதுள்ள ஆர்வத்தினாலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பதாலும் என்னால் முடிந்த உதவிகளை அரசுப் பள்ளிகளுக்கு செய்துவருகிறேன். தேவிபட்டினம் அரசுப் பள்ளி, ராமநாதபுரம் வள்ளல் பாரி, அறிஞர் அண்ணா நகராட்சி பள்ளிகள், வென்னத்தூர் அரசுப் பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளில் தலா 10 ஆயிரம் செலவில் பொலிவுறு வகுப்பறைகளை ஏற்படுத்தியுள்ளேன்.

ஆசிரியர் உலகராஜ்
ஆசிரியர் உலகராஜ்
உ.பாண்டி

இதுபோல, பல பள்ளிகளுக்கு அவ்வப்போது என்னால் ஆன உதவிகளைச் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தற்போது, நான் படித்த தேவிபட்டினம் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்தை அமைச்சர் மூலம் வழங்கியுள்ளேன். நான் பள்ளிகளுக்குச் செய்யும் உதவிகளை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

ஆனால், இன்றைய சூழலில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்யவேண்டிய நிலை உள்ளது. அத்தகையவர்களிடம் உதவும் குணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த விழாவில் அமைச்சரிடம் நன்கொடை வழங்கினேன். எனது உதவிகளை இனி வரும் காலங்களிலும் தொடர்வேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு