Published:Updated:

``சவால்களைச் சந்திக்கும் வரலாற்று நாயகர்கள்!''- ஆசிரியர் தினப் பகிர்வு

இரா.மோகன்
உ.பாண்டி

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பதவியேற்றபோது அவர் ஒரு தத்துவ மேதை என்பதைத் தாண்டி அவர் ஓர் ஆசிரியர் என்பற்காகவே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் கொண்டாடப்பட்டார்.

Teachers day
Teachers day

இன்றைய சூழலில் கல்வி என்பது யார் வசம் இருப்பது? எந்த மொழியில் அந்தக் கல்வி இருப்பது? எனப் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர இந்தியாவின் 73 ஆண்டுகளில் இல்லாத பலவகை இடையூறுகளை இன்றைய கல்வி சந்தித்து வருகிறது. மருத்துவக் கல்வியிலதொடங்கிய இந்த இடையூறு பால்வாடி கல்வி வரை விரவத் துடிக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திக்கும் வரலாற்று நாயகர்களாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களின் தினம் இன்று. இந்த நாளில் ஆசிரியர்களின் பெருமைகளை விளக்குகிறார் முதுநிலை பட்டதாரி ஆசிரியரான ந.ஜெயகாந்தன்.

Dr.Radhakrishnan
Dr.Radhakrishnan

``ஆசு என்ற சொல்லுக்கு தவறு, குற்றம், பழுது என்று பல பொருள்களைத் தருகிறது பழந்தமிழ் நூல்கள். ஆசுக்களை அகற்றுபவர் ஆசிரியர் என அழைத்துக் கொண்டாடியது பழந்தமிழர் சமூகம். இறைவனுக்கு ஒரு படி முன்னே ஆசிரியரை வைத்துப் போற்றியது தமிழர் பண்பாடு. பள்ளி ஒரு தோட்டம். அங்கு பயில்வோர் அதன் செடிகள். ஆசிரியர் அங்கே தோட்டக்காரர். சமூகப் படிநிலையில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் ஒரு மாணவன் அவனின் ஆசிரியருக்கு மாணவனே!

மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஷில்லாங் பல்கலைக்கழகம் நோக்கி காரில் பயணித்தபோது அவருடன் சென்ற அவரின் நேர்முக உதவியாளர் அவரிடம் ``நீங்கள் ஒரு விஞ்ஞானி, எழுத்தாளர், முன்னாள் குடியரசுத் தலைவர், உரையாளர். இதில் உலகம் உங்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்?'' எனக் கேட்டபோது, ``இதில் எதுவும் இல்லை. நான் ஓர் ஆசிரியனாக மட்டுமே நினைவு கூரப்பட விரும்புகிறேன்'' என்றாராம் கலாம். மழலையர் பள்ளி முதல் மாண்பமை பல்கலைக்கழகம் வரை எங்கு, எந்தப் பணிச்சூழலில் ஆசிரியராகப் பணியாற்றினாலும் ஒருவர் ஆசிரியரே. ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர், பயிற்றுநர், போதகர் எனப் பல பெயர் தாங்கி வந்தாலும் அவர் ஆசிரியர் என்ற பொதுச் சொல்லில் அங்கமாகி விடுவார்.

Dr. Abdulkalam
Dr. Abdulkalam

இந்தியா தனது கடந்த காலங்களில் பல ஆசிரியர்களின் வரலாறுகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கல்விச் சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. சமூகத்தில் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வியின் தளைகள் தளர்த்தப்பட்டது. பள்ளி செல்வது பரவலானது. சமூக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது. நடைமுறைகள் மாறின. கேள்விகள் பிறந்தன. ஆசிரியர்கள் இந்த மாற்றத்தின் பின்புலமாக இருந்தனர். தங்களது அறிவார்ந்த, அன்பான, அர்ப்பணிக்கப்பட்ட பணியின் மூலம் சமூக அங்கீகாரமும், அடையாளமும் பெற்றனர். ஆசிரியர்கள் சமூகத்தின் கௌரவமாக கொண்டாடப்பட்டனர். விடுதலைப் போராட்டமும், பின் தொடர்ந்த சுதந்திரமும் ஆசிரியர்களின் பங்களிப்பை பெரிய அளவில் பதிவு செய்தது.

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பதவியேற்றபோது அவர் ஒரு தத்துவ மேதை என்பதைத் தாண்டி அவர் ஓர் ஆசிரியர் என்பற்காகவே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் கொண்டாடப்பட்டார். ஆசிரியர்களின் ஆசிரியரான டாக்டர். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக இன்று நாடெங்கிலும் சிறப்பிக்கப்படுகிறது.

teacher Jayakanthan
teacher Jayakanthan

இந்த நாளில் ஒவ்வொருவரும் தனக்குக் கற்பித்த, தனது நெஞ்சம் கவர்ந்த ஆசிரியர்களை அன்புடனும், மரியாதையுடனும் நினைவு கூர்கிறார்கள். இன்றைய கல்விச் சூழல் மாறிவிட்டது. கற்பித்தல் சவாலான பணியாக மாறியிருக்கிறது. அதனாலென்ன? எந்த ஓர் ஆசிரியரிடமும் கேளுங்கள் அவர்களுடைய முன்னாள் மாணவர்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஏதாவது சுவையான செய்திகள் இருக்கும்.

ஆசிரியர்களிடம் மட்டுமல்ல மாணவர்களிடமும்தான். எந்த ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பும் ஓர் உயிருள்ள ஆசிரியருக்கு இணையாக முடியாது என்பதே ஆசிரியர்களின் பெரும் சிறப்பு.. இந்த ஆசிரியர் தினத்தில் நம்முடைய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வோம்.'' ஆசிரியர் தின வாழ்த்துகள்!!