Published:Updated:

`படிக்கிற புள்ளைங்க கஷ்டப்படக் கூடாதுங்க..!’ - புது வீட்டையே கொடுத்த திருச்சி பூக்கடைக்காரர்

`குடும்ப வறுமையால் படிப்பை இழந்து, நான் பட்ட கஷ்டத்தைப் பிள்ளைகள் படக்கூடாதுனு தற்காலிகமாக பள்ளிக்கூடம் நடத்தறதுக்காக புதுசா கட்டிய வீட்டைத் தந்திருக்கிறேன்' என்கிறார் தியாகராஜன்.

தியாகராஜன் வீடு
தியாகராஜன் வீடு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ளது நொச்சி வயல்புதூர். இந்தக் கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடம் பாழடைந்துவிட்டது. இங்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி கடந்த 2018-ல் இருந்து கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. அதுவரை பள்ளியைத் தற்காலிகமாக நடத்துவதற்கு இடம் தேடி பள்ளித் தலைமை ஆசிரியை லதா மகேஸ்வரி உள்பட ஊர்ப் பெரியவர்கள் அலைந்துள்ளனர். யாரும் இடம் தர மறுத்த நிலையில், பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊருக்கு மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 குழந்தைகளும் சிறியவர்கள் என்பதால், அவர்களை அலைக்கழிக்க முடியாது என்பதால் ஆசிரியை லதா மகேஸ்வரி தொடர்ந்து முயற்சி செய்தார். இறுதியாக, திருவெறும்பூரில் பூக்கடை நடத்தி வரும் தியாகராஜன் என்பவரை அணுகியுள்ளனர்.

தற்காலிக பள்ளி இயங்கிவரும் வீடு
தற்காலிக பள்ளி இயங்கிவரும் வீடு

`அவர் சட்டென எவ்வித தயக்கமும் இல்லாமல், நம்ம ஊர்ப் பிள்ளைகள் படிக்க எங்க வீட்டைத் தருகிறேன் டீச்சர். நீங்க தாராளமாக என்னுடைய வீட்டில் பள்ளியை நடத்திக் கொள்ளுங்கள். நாங்கள் குடும்பத்தோடு அப்பா வீட்டில் தங்கிக் கொள்கிறோம்' எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, தியாகராஜனிடம் பேசிய ஆசிரியர் லதா மகேஸ்வரி, ``பள்ளிக்கூடம் நடத்துவதற்கு வாடகை எவ்வளவு என்று சொல்லுங்க சார்" எனக் கேட்க, இதனால் கோபப்பட்ட தியாகராஜன், ``வாடகை எல்லாம் வேணாம், நம்ம ஊரு பிள்ளைங்க படிப்பதற்கு, நானே பணம் வாங்குவதா டீச்சர்” என்றவர், மறுநாள் காலையே விஷயத்தைத் தனது மகன் மனைவியுடன் பேசிவிட்டு, அடுத்தநாளே வீட்டைக் காலி செய்துவிட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதற்கு இடம் தந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2018 அக்டோபர் மாதத்தில் இருந்து தியாகராஜனின் புதிய வீட்டில் பள்ளிக்கூடம் நடந்து வருகிறது. இதற்கான மின்சாரக் கட்டணத்தையும் அவரே செலுத்தி வருகிறார். இந்தத் தகவல் அறிந்த ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தியாகராஜனை நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் சக்தி இயக்கம் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தியாகராஜனை நேரில் அழைத்துக் கௌரவித்துள்ளனர்.

தியாகராஜனை சந்தித்துப் பேசினோம். ``நான் செய்தது ரொம்ப சின்ன விஷயம் சார். என்னால் முடிந்ததை எங்க ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குச் செய்தேன் அவ்வளவுதான்” எனத் தயங்கியபடி பேசினார்.

தியாகராஜன்
தியாகராஜன்

``என்னோட பிறந்தது மொத்தம் 8 பேர். ஆறு அண்ணன் தம்பிகள், 2 அக்கா தங்கைகள் என எங்கள் குடும்பம் ரொம்ப பெரியது. நான் இரண்டாவது பிள்ளை. அப்பா பூ கட்டும் வியாபாரம் செய்து வந்ததால், சின்ன வயதிலிருந்து அப்பாவுக்கு உதவியாக இருந்து வந்தேன். எங்க ஊர்ப் பள்ளியில் ஐந்தாம் வரை படிப்பை முடித்த என்னை, தொடர்ந்து திருவெறும்பூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்த்துவிட்டார். பள்ளிக்கூடம் முடித்துவிட்டு அப்பாவுக்கு ஒத்தாசை செய்ய பூக்கடைக்கு வந்தவன். படிப்பைப் பாதியில் விட்டுட்டுப் பூ வியாபாரம் பார்க்கத் தொடங்கி விட்டேன். 25 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்கிறேன். எனக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னால்தான் படிக்க முடியல. நான் பட்ட கஷ்டங்கள் என்னோடு போகட்டும் எனப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கிறேன். மூத்த பையன் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இரண்டாவது பையன் 11வது படிக்கிறார்.

காலை நான்கு மணிக்குக் காந்தி மார்கெட்டுக்குப் போய், பூ வாங்கி வந்து நாள் முழுக்க வியாபாரம் செய்தாலும் கிடைக்கும் வருமானம் குறைவுதான். அதனால் குடும்பச் செலவு போக சிறுகச் சிறுக சேர்த்து பணத்தைக் கொண்டு, ஊரில் வீடுகட்ட தொடங்கினேன். வீடு கட்டி முடித்த சூழலில் பள்ளிக்கூடம் நடத்தறதுக்காக தலைமையாசிரியர் இடம் கேட்டாங்க.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்கள்
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்கள்

நானும் கொடுத்தேன். 11 மாதங்களாக என்னுடைய வீட்டில் பள்ளிக்கூடம் நடக்கிறது. இன்னும் சில மாதங்களில் புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிடும். அதன்பிறகே புதிய வீட்டுக்குக் குடியேற இருக்கிறோம். ஏழைக் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவியா, ஏதோ செய்தேன் அவ்வளவுதான் சார்" என்றபடி பூக்களை கோக்கத் தொடங்கினார் தியாகராஜன்.