Published:Updated:

`பிள்ளைகளுக்கு மட்டுமல்ல; அம்மாக்களுக்கும் இலவச டியூஷன்!' - ஆசிரியையின் கல்விச் சேவை

ஆரம்பத்தில் மூணு பேர் வந்த நிலையில், இப்போ எட்டுப் பெண்கள் படிக்கிறாங்க.``

sasikala teacher
sasikala teacher

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குப் பல்வேறு புதுமையான முயற்சிகளை எடுப்பவர், ஆசிரியை சசிகலா. இவர், கடலூர் மாவட்டம் கிள்ளை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிவருபவர். இவரின் தற்போதைய பாராட்டுதலுக்குரிய முயற்சி, குடும்பப் பெண்களுக்கான இலவச டியூஷன் எடுப்பது. இதுகுறித்து, சசிகலாவிடம் பேசினோம்.

sasikala teacher
sasikala teacher

``எங்க பகுதியில எட்டாம் வகுப்புக்குப் பிறகு, மாணவர்களின் இடைநிற்றல் அதிகமா நடக்கும். என்னால் இயன்ற அளவுக்கு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தணும்னு முடிவெடுத்தேன். ஏழைக் குழந்தைகளுக்கு மாலை வேளையில் இலவச டியூஷன் எடுத்திட்டிருக்கேன். அந்த நேரத்தில், மாணவர்கள்கிட்ட உரையாடுவேன். `அப்பா பொறுப்பில்லாம இருப்பதாலும், அம்மா வேலைக்குப் போயிடுறதாலயும் எங்க மேல யாரும் பெரிசா கவனம் செலுத்த மாட்டாங்க'ன்னு பசங்க சொன்னாங்க.

அந்த மாணவர்களின் அம்மாக்களை வரவழைச்சுப் பேசினேன். அந்தப் பெண்கள், கொத்தனார், சமையல் மற்றும் வீட்டு வேலைனு கூலி வேலைக்குப் போகக்கூடியவங்க. படிப்பறிவு அதிகம் இல்லாததால, குடும்பச் சூழலை மேம்படுத்திக்கவும், தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறவும் அவங்களுக்கு வழி தெரியலை.

எங்க ஊர் ஏழைக் குழந்தைகள், நல்லா படிச்சு அரசு வேலைகளுக்குப் போகணும் என்பதுதான் என் ஆசை. அது நிச்சயம் நடக்கும்னு நம்புறேன்.
சசிகலா

அந்தப் பெண்கள் சம்பாதிக்கிற பணத்தை, அவங்க கணவர்கள் மது குடிக்க பிடுங்கிக்கிற நிலை. மேலும், தங்களோட குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் விழிப்புணர்வு இல்லாம இருந்தாங்க.

sasikala teacher
sasikala teacher

இதற்கெல்லாம் தீர்வு, அந்தப் பெண்கள் கல்வி பெறுவதுதான். எனவே, அவங்களுக்கும் டியூஷன் சொல்லிக்கொடுக்க முடிவெடுத்து, பெண்கள்கிட்ட சொன்னேன். முதலில் தயங்கினாலும், பிறகு சம்மதிச்சாங்க. எல்லா நாளும் அவங்களுக்கு வேலை இருக்கும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாலை வேளையில் ரெண்டு மணிநேரம் என்கிட்ட கல்வி கற்க ஒத்துக்கிட்டாங்க. அதன்படி, கடந்த ரெண்டு மாதமா பெண்களுக்கு டியூஷன் எடுக்கிறேன். ஆரம்பத்தில் மூணு பேர் வந்த நிலையில், இப்போ பெண்கள் படிக்க வர்றாங்க. அவங்க எல்லோரும் 35 - 50 வயசுக்கு உட்பட்டவங்க" என்பவர், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி டியூஷன் வகுப்புகளை இலவசமாகவே எடுக்கிறார்.

free tuition
free tuition

``எழுதுபொருள்கள், புத்தகங்கள் உட்பட என்கிட்ட படிக்க வரும் பெண்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துடுவேன். பத்து பெண்களும் இப்போதெல்லாம் ஆர்வமா டியூஷனுக்கு வர்றாங்க. வரும் காலங்களில், என்கிட்ட கல்வி கற்க வரும் பெண்களின் எண்ணிக்கை உயரும். அதனால், கல்வியால் அவங்க வாழ்க்கையும், அவங்க பிள்ளைகளின் எதிர்காலமும் சிறப்பாக மாறும். எங்க ஊர் ஏழைக் குழந்தைகள், நல்லா படிச்சு அரசு வேலைகளுக்குப் போகணும் என்பதுதான் என் ஆசை. அது நிச்சயம் நடக்கும்னு நம்புறேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.