Published:Updated:

`வாட்ஸ் அப் வகுப்பு; அரசு உதவி பெறும் பள்ளியின் அசத்தல் முயற்சி!’- தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்

பள்ளி
பள்ளி

`கொரோனா ஊரடங்கால் பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக, அவர்களின் செல்போன் எண்களை சேகரித்து ,வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.’

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில்10-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில், அந்தப் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் பாடம்
வாட்ஸ் அப் மூலம் பாடம்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடக்கத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் முழுத்தேர்வு நடத்த முடியாமல் போனது இந்த நிலையில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப் போனதால் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்தது.

அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், `பத்தாம் வகுப்பு முழுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும்’ என அறிவித்திருக்கிறார். இருப்பினும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், அவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தும் விதமாக, பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் மாணவர்களை இணைத்து அதன் மூலம், பாடங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். இது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மாணவர்களுக்கு 
 நடத்தப்படும் பாடம்
மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடம்

இது குறித்து தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் கூறுகையில்,`` எங்க பள்ளியில் 10-ம் வகுப்பில் மொத்தம் 197 மாணவர்கள் படிக்கிறார்கள் 151 மாணவர்கள் தமிழ் வழியிலும், 46 மாணவர்கள் ஆங்கில வழியிலும் கல்வி பயின்று வருவதுடன் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக, அவர்களின் செல்போன் எண்களை சேகரித்து, வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளின் ஆசிரியர்கள், தினமும் மாணவர்கள் என்னென்ன பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் அதற்குரிய வினாத்தாளை அனுப்பி பயிற்சி தேர்வும் எழுத வைக்கிறார்கள். மாணவர்களும் விடைகளை எழுதி, மீண்டும் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார்கள். அதைத் திருத்தி மீண்டும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், பாடம் தொடர்பான வீடியோக்கள், ஆடியோக்கள் குழுவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

பள்ளி
பள்ளி

வாட்ஸ் அப் வசதி இல்லாத பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்களின் உறவினர்கள் நம்பரை வாங்கி, ஆசிரியர்கள் பேசி, தேர்வுக்குத் தயாராகும் வழிகளைச் சொல்லித் தருகிறார்கள். ஆரம்பத்தில் இதைப் புரிந்துகொள்ளாத மாணவர்கள் விளையாட்டுத் தனமாக இருந்தனர். தற்போது அவர்கள் ஆர்வமாகப் படிக்கத் தொடங்கியுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி பெறக்கூடிய விதமாக ஆசிரியர்கள் ஆர்வமுடன் இதைச் செயல்படுத்தி வருகின்றனர். இந்த முயற்சி பொற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், மாணவர்களுக்கும் உதவியாக இருக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு