Published:Updated:

திருக்குறளை முற்றோதும் 3 பிள்ளைகள்! - ஒரு விவசாயக் குடும்பத்தின் தமிழ் விளைச்சல் #MyVikatan

குடும்பத்தினருடன் செல்வராஜ்
குடும்பத்தினருடன் செல்வராஜ்

எங்க அம்மா, அப்பா ஆடு மேய்ச்சிட்டும், கூலி வேலைக்கும் போயிட்டு வந்த பின்னாடியும் அவங்களை ஓய்வெடுக்கக்கூட விடாம நாங்க குறளை சொல்லிக் காட்டுவோம்.

குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே சமூக அந்தஸ்து என்று போலியாக நம்புகிறது இன்றைய நம் தமிழ்ச் சமூகம். ஆனால், ஒரு விவசாயக் குடும்பத்தினர் தங்கள் மூன்று பிள்ளைகளையும் 1330 திருக்குறட்களையும் மனப்பாடம் செய்ய வைத்து எந்த திருக்குறளை எப்படிக் கேட்டாலும் அதை உடனே சொல்லும் அளவுக்கு வளர்த்துச் சாதனை படைத்துள்ளனர்.

திருக்குறளை முற்றோதும் 3 பிள்ளைகள்! - ஒரு விவசாயக் குடும்பத்தின் தமிழ் விளைச்சல் #MyVikatan

சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி தாலுகா பெரியகோட்டைக்கு அருகில் உள்ளது மித்திரங்குடி கிராமம். இங்குள்ள செல்வராஜ் - காந்தி தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். மொத்தம் மூன்று பிள்ளைகள்.

இவர்களை விவசாயக் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, மற்றபடி விவசாயம் செய்யும்படியாக பெரிய அளவில் நிலங்கள் ஏதுமில்லை. வீட்டைச் சுற்றி முள்வேலி போட்டு அடைத்து வைத்திருக்கும் 20 சென்ட் நிலம். அதில் கீரைகள் வளர்த்து அதை விற்றுத்தான் பிழைப்பு நடத்துகிறது இந்தக் குடும்பம். இத்துடன் 12 செம்மறி ஆடுகளையும் வயிற்றுப்பாட்டுக்காக வளர்த்து வருகிறார்கள். இதுதான் இக்குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானத்துக்கான ஒரேவழி.

இப்படி வறுமை அடர்த்தியாய் படர்ந்திருக்கிறது இக்குடும்பத்தில்..! இருந்தும் மூன்று பிள்ளைகளும் திருக்குறளை மனப்பாடம் செய்து தமிழக அரசின் பத்தாயிரம் ரூபாய் பரிசு உட்பட பல மேடைகளில் பரிசுகளும் விருதுகளும் பெற்று வருகிறார்கள்.

``மொத.. மொத திருக்குறள் கத்துக்கிறதுல ஆர்வமா இருந்தது.... என்னோட ரெண்டாவது மகள் சுபலெட்சுமிதான். இப்போ பெரியகோட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிச்சிட்டு இருக்கு. தெனந்தோறும் வீட்டுக்கு வந்ததும் திருக்குறளை மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கும். அப்போ அது மூணாம் வகுப்புதான் படிச்சது. அதுக்கு வாத்தியாரா இருந்த மகேஸ்வரி டீச்சர்தான் திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்லி ரொம்ப ஊக்கப்படுத்துனாங்க.

மனைவி காந்தியுடன் செல்வராஜ்
மனைவி காந்தியுடன் செல்வராஜ்

நானும் என் மனைவியும் ரொம்ப படிக்காதவங்க. ஆனா ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். அது மனப்பாடம் செஞ்சு சொல்றதை நாங்க சரியா இருக்கான்னு ஒத்துப் பார்ப்போம். நாள் முழுக்க ஆட்டுக்குட்டி மேய்ச்சிட்டு கால் அசந்து போய் சாயங்காலம் வீட்டுக்கு வருவோம். ஆனா, என் மகள் சொல்ற திருக்குறளைக் கேட்டா எங்க கால் வலி எல்லாம் பறந்து ஓடிடும்.

இப்படி ஆறு மாசத்துலேயே எல்லா திருக்குறளையும் மனப்பாடமா சொல்ற அளவுக்கு எங்க மக சுபலெட்சுமி உருவாகிடுச்சு. அதிகார நம்பர், குறள் எண் இப்படி எதைக் கேட்டாலும் உடனே சொல்ற அளவுக்கு வெரசா கத்துக்கிருச்சு. இந்தச் சேதி காரைக்குடியில இருக்கிற வள்ளுவர் பேரவை செயம்கொண்டான் சாருக்கு தெரிஞ்சு அவரும் அதற்கான உதவிகள் செஞ்சாரு. முக்கிய மேடைகளுக்கு அழைச்சு பாராட்டி கவுரவப்படுத்தி வர்றாரு. அப்புறம் தமிழக அரசோட ரொக்கப்பரிசு, விருது எல்லாம் கிடைச்சது. இதனால பல பேரும் பாராட்டி உற்சாகப்படுத்துனாங்க.

இதை எல்லாம் பார்த்துட்டு என் மூத்தமகள் கார்த்தீஸ்வரிக்கும் திருக்குறள் மேலே தீவிர ஆர்வம் வந்து கத்துக்க ஆரம்பிச்சுச்சு. அதுவும் ஆறேழு மாசத்திலேயே 1330 குறளையும் இரண்டாவது பொண்ணு மாதிரி ஈஸியா கத்துக்கிட்டு மனப்பாடமா சொல்ல ஆரம்பிச்சிடுச்சு. அதுவும் அதே பெரியகோட்டை கவர்மென்ட் ஸ்கூல்லதான் இந்த வருஷம் 10-ம் வகுப்பு படிக்குது. நல்லா படிச்சு நிறைய மார்க் எடுக்கும்னு நம்பிக்கை இருக்கு. இதுக்கும் அதே மாதிரி பல மேடைகளில் பரிசுகளும் பாராட்டுகளும் குவிஞ்சுக்கிட்டு இருக்கு. இந்தப் பொண்ணுக்கும் மாநில அரசோட பத்தாயிரம் ரூபாய் பரிசு கிடைச்சது.

படிக்கணும்னு நினைச்சா யாரு வேணும்னாலும் படிக்கலாம். இதுக்கு வசதி வாய்ப்போ, ஏழை பணக்காரங்க என்ற பாகுபாடு எல்லாம் கெடையாது.

இப்படி இவங்க இரண்டு பேரும் பரிசு வாங்குறதையும் எல்லோரும் புகழ்ந்து பாராட்டுறதையும் பார்த்துட்டு என்னோட ஒரே மகன் மாயழகு அவனும் எல்லா திருக்குறளையும் முழுசுமா கத்துக்கிட்டான். அவனுக்கும் அரசாங்கத்தோட குறள் பரிசுத் திட்டப் போட்டியில் கலந்துகொண்டு ஜெயிச்சு பரிசுக்கு தேர்வாகிட்டான். இப்போ பத்தாயிரம் ரூபாய் பரிசு வாங்க காத்துக்கிட்டு இருக்கான். இப்படி எங்க பிள்ளைக மூணு பேருக்கும் அரசாங்க விருதும், பாராட்டும் கிடைச்சிருக்கு. மாயழகு இங்கே பக்கத்தில பெத்தாட்சி குடியிருப்புல இருக்கிற அரசுப் பள்ளிக்கூடத்துலதான் அஞ்சாம் வகுப்பு படிக்கிறான்.

இந்த வயசிலேயே மூணு பிள்ளைகளும் எங்களுக்குப் பெருமை தேடித் தந்திட்டாங்க. படிக்கணும்னு நினைச்சா யாரு வேணும்னாலும் படிக்கலாம். இதுக்கு வசதி வாய்ப்போ, ஏழை பணக்காரங்க என்ற பாகுபாடு எல்லாம் கெடையாது. வீட்டிலே செல்போன் இருக்கு. ஆனா.. அதுக்கு நெட் கார்டு எல்லாம் நாங்க போடுறது இல்லை. ஆத்திர அவசரத்துக்கு பேச மட்டும்தானே செல்போன். அதே மாதிரி டிவியும் போடுறது கிடையாது. வீட்டுக்கு வந்தா எம் பிள்ளைகளுக்கு படிப்பு மட்டும்தான். திருக்குறளை மனப்பாடம் செஞ்சது மாதிரியே அதுல சொல்லி இருக்கிற கருத்துகள்படியே இந்தப் பூமியிலே வாழ்ந்தும் காட்டணும்னு மூணு பேருக்கிட்டேயும் சொல்லி வளர்த்துட்டு வர்றோம்..." என நெகிழ்ந்து போகிறார்கள் செல்வராஜும் அவருடைய மனைவி காந்தியும்.

செல்வராஜின் பிள்ளைகள்
செல்வராஜின் பிள்ளைகள்

`` கண்டிப்பா நாங்களும் குறள் வழிப்படியே வாழ்ந்து காட்டுவோம். அம்மா, அப்பா, எங்க ஊர், ஆசிரியர்கள், இந்த நாடு எல்லாத்துக்கும் கட்டாயம் நாங்க பெருமை தேடித் தருவோம். எல்லாத் திருக்குறளும் எங்களுக்கு மனப்பாடமாய்த் தெரியுங்கிறதே பெருமையான விஷயம். எங்களுக்கு இவ்வளவு பெரிய பாராட்டு, புகழ், பரிசு எல்லாம் திருக்குறளைக் கத்துக்கிட்டதாலேதான் கிடைச்சது. இதை மனப்பாடம் செய்றது ஒன்னும் கஷ்டமான காரியம் இல்லை. இஷ்டப்பட்டு விரும்பி படிச்சா எதுவுமே மனசில நிக்கும். படிச்சதை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கணும். அப்போதான் மனசுலே தங்கும்.

எங்க அம்மா, அப்பா ஆடு மேய்ச்சிட்டும், கூலி வேலைக்கும் போயிட்டு வந்த பின்னாடியும் அவங்களை ஓய்வெடுக்கக்கூடவிடாம நாங்க குறளை சொல்லிக் காட்டுவோம். அவங்களும் கொஞ்சம்கூட மனம் நோகாம காது கொடுத்துக் கேட்டு தவறுகள் இருந்தா சொல்லுவாங்க. நாங்க மூணு பேரும் திருக்குறளை எளிமையாகவும் விரைவாகவும் கத்துக்க காரணமே எங்க அம்மா, அப்பா, ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பும் உற்சாகமும்தான். அதே மாதிரி காரைக்குடி வள்ளுவர் பேரவைதான் திருக்குறளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எளிமையா மனப்பாடம் செய்யவும் பயிற்சியும் உற்சாகமும் கொடுத்தாங்க..." என சந்தோஷ மிதப்பில் பேசுகிறார் மூத்த மகள் கார்த்தீஸ்வரி.

இஷ்டப்பட்டு விரும்பி படிச்சா எதுவுமே மனசில நிக்கும். படிச்சதை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கணும். அப்போதான் மனசுலே தங்கும்.

காரைக்குடி வள்ளுவர் பேரவை, திருக்குறள் பரப்பும் பணியில் தீவிரமாய் ஈடுபட்டு வரும் அமைப்பு. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் ஏராளமான திருக்குறள் முற்றோதும் மாணவர்களை உருவாக்கி வருகிறது. இதற்கென சிறப்பு வகுப்புகளையும் இலவசமாக நடத்திவருகிறது. திருக்குறள் முழுவதையும் அதிக அளவிலான மாணவர்களை முற்றோதச் செய்ய வைத்து சிவகங்கை மாவட்டத்தை மாநில அளவில் சிறப்பிடம் பெற வைப்பதற்கான முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது இப்பேரவை.

``எங்கள் வள்ளுவர் பேரவை தமிழகம் முழுவதும் `கிராமந்தோறும் திருக்குறள் திட்டம் ' எனும் அமைப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்திருக்கிறோம். அதில் சிவகங்கை மாவட்டத்தின் செட்டிநாட்டுப் பகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சாக்கவயல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழ் ஆர்வலருமான சின்னையா. அவரால் அடையாளப்படுத்தப்பட்ட மாணவிதான் சுபலெட்சுமி.

கவிஞர் மெ.செயங்கொண்டான்
கவிஞர் மெ.செயங்கொண்டான்

திருக்குறளை முழுவதும் மனப்பாடமாய்க் கற்று முற்றோதும் குழந்தைகளுக்குத் தமிழக அரசின் `குறள் பரிசுத் திட்டம்' மூலம் 10,000 ரூபாய் பரிசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கான பரிசுத் தொகையை முதலமைச்சர் அல்லது கல்வி அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவில் நேரடியாக வழங்குகின்றனர். போட்டிகள் மாவட்டம்தோறும் மாவட்டத் தலைநகரில் நடத்தப்படுகிறது.

எங்கள் பேரவைக்குக் கிடைத்த இந்த மூன்று பிள்ளைகளுமே திருக்குறளின் முப்பால் போன்றவர்கள். வறுமையான சூழலிலும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் திறமையான பிள்ளைகள். அவர்களைப் போன்ற குறள்மீது ஆர்வம் கொண்ட பிள்ளைகள் அனைவரின் வளர்ச்சிக்கும், திருக்குறளின் புகழ் பரப்பவும் காரைக்குடி வள்ளுவர் பேரவை என்றென்றும் துணை நிற்கும்..." என்று வள்ளுவம் மணக்கப் பேசுகிறார் இப்பேரவையின் நிறுவனர் - தலைவர் நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் மெ.செயங்கொண்டான்.

-பழ.அசோக்குமார்

My vikatan
My vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு