சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நீட்? - அந்த மூவர் தேர்வு எழுதவில்லை!

ஆதித்யா, ஜோதிஸ்ரீ, மோதிலால்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதித்யா, ஜோதிஸ்ரீ, மோதிலால்

ரொம்ப நல்லாப் படிப்பா சார். மருத்துவராகணும்ங்கிறது அவளோட கனவு. நாங்க எந்தச் சூழல்லயும் அவளை நிர்பந்திச்சதில்லை. போன வருஷம் நீட் தேர்வு எழுதினா. போதிய மார்க் வரலே.

“அப்பா, யாரையும் ப்ளேம் பண்ணாதீங்க...” என்ற, நடுங்கியபடி பேசும் அந்தக் குரலைக் கேட்டாலே குலை நடுங்குகிறது. “ஸாரி அப்பா...ஸாரி அம்மா... உண்மையில் நான் நன்றாகப் படித்தேன். ஆனால் பயமா இருக்கு...” என்று குண்டுகுண்டான கையெழுத்தில் எழுதி வைத்து விட்டு தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார் ஜோதிஸ்ரீ துர்கா.

மதுரையிலிருக்கிற ஜோதிஸ்ரீ துர்காவின் வீடு இருளடைந்து கிடக்கிறது. அழுதழுது சோர்ந்து முடங்கிக்கிடக்கிறார்கள் எல்லோரும். ஜோதிஸ்ரீ அப்பா முருகசுந்தரம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.

நீட்? - அந்த மூவர் தேர்வு எழுதவில்லை!

“ரொம்ப நல்லாப் படிப்பா சார். மருத்துவராகணும்ங்கிறது அவளோட கனவு. நாங்க எந்தச் சூழல்லயும் அவளை நிர்பந்திச்சதில்லை. போன வருஷம் நீட் தேர்வு எழுதினா. போதிய மார்க் வரலே. ‘இந்த வருஷம் நிச்சயம் நிறைய மார்க் எடுத்திருவேம்பா’ன்னு சொல்லிக்கிட்டிருந்தா. சில நேரங்களில், ‘அப்பா மார்க் வருமான்னு பயமா இருக்கு’ன்னு சொல்வா. பக்கத்துல உக்காந்து, ‘உன்னால முடியும்மா... தைரியமா இரு’ன்னு உற்சாகப்படுத்துவேன். ஒரு அப்பனா இதைவிட வேறென்ன சார் பண்ண முடியும்... நல்லாத்தான் பேசிக்கிட்டிருந்தா... இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டாளே...” – தலையிலடித்துக்கொண்டு கதறுகிற முருகசுந்தரத்துக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் இல்லை. ஜோதிஸ்ரீயின் அம்மா அபிராமியால் இன்னும் சூழலை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அவரை இயல்பாக்க உறவினர்கள் தவிக்கிறார்கள்.

ஆதித்யா, ஜோதிஸ்ரீ, மோதிலால்
ஆதித்யா, ஜோதிஸ்ரீ, மோதிலால்

முருகசுந்தரத்துக்குப் பூர்வீகம் அருப்புக்கோட்டை. பணிமாறுதல் வர, பிள்ளையின் படிப்புக்கும் உதவியாக இருக்குமே என்று மதுரைக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது ஜோதிஸ்ரீயின் சிறுவயதுக் கனவு. பெற்றோரும் அந்தக் கனவை ஊக்கப்படுத்தி வளர்த்துள்ளார்கள். முதல்முறை நீட் தேர்வு எழுதியபோது நடந்த சோதனைகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஜோதிஸ்ரீயை மிரளச் செய்துள்ளன. தேர்வு நெருங்க நெருங்க அச்சம் அதிகமாகியிருக்கிறது.

இரவு முழுவதும் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். அதிகாலை 3 மணிக்கு எழுந்த முருகசுந்தரம் மகளுக்கு டீ போட்டுக்கொண்டு கதவைத் தட்டியிருக்கிறார். உள்பக்கம் பூட்டியிருக்க, உடைத்துச்சென்று பார்த்தால் உயிரற்றுக் கிடந்திருக்கிறார் ஜோதிஸ்ரீ. அதற்கு முன், நிதானமாக 7 பக்கத்துக்குக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். மொபைலில் பேசிப் பதிவும் செய்திருக்கிறார். அரசு ஊழியர் என்ற நெருக்கடி அழுத்த முருகசுந்தரத்தால் ஆதங்கத்தையும் துயரத்தையும்கூட வெளிப்படுத்த முடியவில்லை.

நீட்? - அந்த மூவர் தேர்வு எழுதவில்லை!

தர்மபுரி, இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன். ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா. மூன்றாம் முறையாக நீட் தேர்வு எழுதவிருந்தவர். தேர்வுக்கு முதல்நாள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். மணிவண்ணன் டிராக்டர் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறார். மகனை மருத்துவராக்கும் கனவோடு இரவு பகல் பாராமல் உழைத்தவர், மகனின் துயர முடிவால் நொறுங்கிப் போயிருக்கிறார்.

‘`நல்லாப் படிக்கிற பையன்யா... ‘எப்படியும் இந்த முறை மார்க் வந்திரும்பா... தைரியமா இருங்க’ன்னு எனக்கு தைரியம் சொன்ன புள்ள... ஹால் டிக்கெட் வந்தவுடனே சேலத்தில உள்ள எக்ஸாம் சென்டரைக்கூடப் போய் பார்த்துட்டு வந்தோம். நல்லா மார்க் எடுத்தா புது மொபைல் வாங்கித்தரணும்னு கேட்டான். அதுக்கும் கொஞ்சம் கடன் வாங்கி வெச்சிருந்தேன். தேர்வுக்குப் போக புது டிரஸ் கேட்டான்... எல்லாம் பாழாப்போச்சே...” என்று கதறுகிறார் மணிவண்ணன்.

‘எக்ஸாம் சென்டரை அம்மாவுக்கு சுத்திக் காண்பித்துவிட்டு வாருங்கள்’ என்று அப்பா-அம்மாவை அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஆதித்யா.

நீட்? - அந்த மூவர் தேர்வு எழுதவில்லை!

ஆதித்யாவின் அம்மா ஜெயசித்ரா ‘`அய்யோ... பரீ்ட்சைக்குப் போற பையனை அறுத்துப் போட்டு வெச்சிட்டீங்களே, என் குழந்தையை விட்டுருங்க... அவன் பரீட்சைக்குப் போகணும்’’ என்று உடலைப் பார்த்து அழுதழுது மயங்கி விழுகிறார்.

திருச்செங்கோடு இடையான்பரப்பைச் சேர்ந்த மோதிலாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள அஞ்சித் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். இரண்டு முறை தேர்வெழுதித் தேர்ச்சியடையாத நிலையில் இம்முறை தீவிரமாகத் தயாராகி வந்தவர். பயம், உயிரைப் பறித்துவிட்டது.

நீட்? - அந்த மூவர் தேர்வு எழுதவில்லை!

மோதிலாலின் அப்பா முருகேசன் எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கிறார். அம்மா பெயர் கோமதி. முருகேசனும் கோமதியும் பேசும் நிலையில் இல்லை.

அவர்கள் மருமகன் பழனிவேலுவிடம் பேசினோம். ‘`முருகேசன் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தவர். கூலித் தொழிலாளியா இருந்து கடுமையா உழைச்சு முதலாளியானவர். ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே நல்லாப் படிப்பாங்க. மோதிலால் 10-ம் வகுப்பில 476 மார்க்கும், ப்ளஸ்டூவுல 1081 மார்க்கும் எடுத்தான். மாமா அவன் விரும்புறதைப் படிக்கட்டும்னு சொல்லிட்டார். அவனுக்கு டாக்டராகனும்னு ஆசை. ‘ப்ளஸ் டூ மார்க்கெல்லாம் வேலைக்காகாது, கோச்சிங் போகணும்’னு சொன்னப்போ யோசிக்காம லட்சக்கணக்குல செலவு செஞ்சார். ரெண்டுமுறை முயற்சி பண்ணியும் கிடைக்கலே. இந்தமுறை ரொம்பவே எதிர்பார்ப்போட இருந்தோம். எங்க தலைமுறையிலேயே முதல் டாக்டரா வருவான்னு எதிர்பார்த்தோம், என்ன நினைச்சானோ தெரியலே... அப்பா அம்மா வெளியே போயிருந்த நேரத்துல திடீர்னு தூக்குப் போட்டுக்கிட்டான்” என்று சொல்லும்போது கண்கள் கலங்கிவிடுகின்றன.

மூவரின் வீடுகளிலும் இப்போது கவிந்திருக்கிறது இருள்.