Published:Updated:

எட்டாக்கனியான கேந்திரிய வித்யாலயாக்கள்...

கேந்திரிய வித்யாலயா
பிரீமியம் ஸ்டோரி
News
கேந்திரிய வித்யாலயா

தட்டிப்பறிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் கல்வி!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக நமக்கு ஒரு கடிதம் வந்தது. அத்துடன், தி.மு.க பொதுச்செயலாளரின் மகனும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யுமான கதிர் ஆனந்த், தனக்கு ஒதுக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா ஒதுக்கீடான பத்து சீட்களில் இரண்டை மட்டுமே தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பரிந்துரைத்து, மீதமிருக்கும் எட்டு இடங்களைப் பயன்படுத்தாமல் வீணடித்ததற்கான ஆவணமும் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விஷயத்தில் மற்ற எம்.பி-க்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய உடனடியாக நமது நிருபர்கள் குழு தமிழகம், புதுச்சேரி எனக் களமிறங்கியது. 40 எம்.பி-க்கள் பரிந்துரைத்த மாணவர்கள் பட்டியலிலிருக்கும் சுமார் 400 மாணவர்களின் விவரங்களை அலசி ஆராய்ந்தது. அதில் கிடைத்த விவரங்களே கட்டுரையாக இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வறுமையும் ஏற்றத்தாழ்வும் கொடூரமாக நிலவும் இந்தச் சமூகத்தில், ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதில் ‘அத்தி பூத்தாற்போல’ கிடைக்கும் சில வாய்ப்புகளும் தட்டிப்பறிக்கப்படுவது அநீதியிலும் அநீதி. அப்படித்தான், மத்திய அரசின் ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய தரமான கல்வியைப் பறித்து, அதில் பெரும் பகுதியைக் ‘கட்சியினருக்கே’ ஒதுக்கி அநீதி இழைத்திருக்கிறார்கள் தமிழக எம்.பி-க்கள் பலர்.

கதிர் ஆனந்த் -  ஓ.பி.ரவீந்திரநாத் குமார் - கார்த்தி சிதம்பரம்
கதிர் ஆனந்த் - ஓ.பி.ரவீந்திரநாத் குமார் - கார்த்தி சிதம்பரம்

ராணுவம் உட்பட பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்காகவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டாலும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ‘சீட்’கள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, எம்.பி-க்களின் பரிந்துரை மூலம் உள்ளூரைச் சேர்ந்த ஏழை, நடுத்தர வீட்டுப் பிள்ளைகளும் அந்தப் பள்ளிகளில் படிப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதற்காக, ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுதோறும் 10 ‘சீட்’கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 44 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. கூடுதலாக நான்கு பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிடைப்பதால், உயர் வகுப்பு மக்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் அந்த சீட்டுகளைத் தட்டிப்பறிக்கிறார்கள். ‘எம்.பி-க்கள், இன்னாருக்குத்தான் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்பது கட்டாயம் இல்லைதான். ஆனாலும், அடித்தட்டு மக்களின் குழந்தைகளும் தரமான கல்வி கற்க வேண்டும் என்று அவர்களுக்கு அந்த இடங்களை ஒதுக்குவதுதான் நாடு முழுவதுமே மரபாக இருந்துவந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இவற்றை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்குவதுதான் அடிப்படை அறம்! ஆனால், பெரும்பாலான எம்.பி-க்கள் அப்படிச் செய்வதில்லை.

புதுச்சேரி உள்ளடக்கிய 40 தமிழக எம்.பி-க்களும் நடப்பு கல்வியாண்டில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறார்கள். அவர்களின் பரிந்துரைப் பட்டியலிலுள்ள 80 சதவிகித மாணவர்கள் பணபலம், சாதியப் பின்புலம், அரசியல் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பதுதான் வேதனை அளிக்கிறது.

விஷ்ணுபிரசாத் - வைத்திலிங்கம்
விஷ்ணுபிரசாத் - வைத்திலிங்கம்

வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பரிந்துரைத்திருக்கும் மாணவர்கள், வேலூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ஒருவர் அரக்கோணத்திலும், மற்றொருவர் ராணிப்பேட்டையிலும் வசிக்கிறார்கள். இவர்களைப் பரிந்துரைத்த கதிர் ஆனந்துக்கு, தன் தொகுதியைச் சார்ந்திருக்கும் ஏழைக் குழந்தைகள் எவரும் கண்களுக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பத்து சீட்களில், எட்டு சீட்களைப் பயன்படுத்தவே இல்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

தூத்துக்குடி எம்.பி கனிமொழி பரிந்துரைத்தவர்களில் ஒருவர், தி.மு.க எம்.எல்.ஏ-வின் கார் ஓட்டுநரின் மகள். மிசாவில் சிறைக்குச் சென்ற தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குழந்தைக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி தி.மு.க கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரின் உறவினர் குழந்தைக்கும் ‘சீட்’ கிடைத்திருக்கிறது. மொத்தம் ஐந்து சீட்கள் அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள். உங்கள் தொகுதியில் ஒரு ஏழை மாணவர்கூடவா உங்களுக்குத் தென்படவில்லை கனிமொழி?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியின் எம்.பி-யுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பரிந்துரையோ இன்னும் கொடுமை. அவர் பரிந்துரைத்த 10 பேரில் பலர் தேனி தொகுதியே கிடையாது. அனைவருமே அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்களின் பிள்ளைகள். அவரது பரிந்துரையின் பேரில் ஒரு மாணவருக்கு திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க சீட் கிடைத்திருக்கிறது. அந்த மாணவரின் தாத்தா, மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர். நாடாளுமன்றத் தேர்தலின்போது, ரவீந்திரநாத் குமாருக்காக அவர் கடுமையாக உழைத்தாராம். அதற்கு பிரதிபலனாகத்தான் அவரின் பேரப்பிள்ளைக்கு ரவீந்திரநாத் குமார் பரிந்துரைத்திருக்கிறார். அப்படியென்றால், தொகுதி மக்களுக்கு ‘அல்வா’ மட்டும்தானா குமார்?

எட்டாக்கனியான கேந்திரிய வித்யாலயாக்கள்...

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கைத் தொகுதி எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம், தனக்கு விசுவாசமாக இருக்கும் நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கே பரிந்துரை செய்திருக்கிறார். தொகுதி மக்களையும் கொஞ்சம் கவனிங்க எம்.பி சார்!

ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கே ‘சீட்’ வாங்கிக்கொடுத்திருக்கிறார். பலரும் பா.ம.க பிரமுகர்கள். சொந்தச் சமூகம்மீது பாசம் இருக்கலாம். அதற்காக, மற்ற சமூக மாணவர்களைக் கைவிட்டுவிட வேண்டுமா?

புதுச்சேரி தொகுதி எம்.பி வைத்திலிங்கமும், ஏழைக் குழந்தைகளை மறந்துவிட்டு காங்கிரஸ் பிரமுகர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே பரிந்துரைத்திருக்கிறார். அவர் பரிந்துரைத் திருக்கும் ஒரு மாணவரின் தந்தை, காங்கிரஸ் கட்சி நிர்வாகி. மற்றொரு மாணவரின் தந்தை, காங்கிரஸ் பிரமுகரின் உறவினர். இதர எட்டுப் பேருடைய பொருளாதாரச் சூழலும் வளமாகவே இருக்கிறது. வைத்திலிங்கத்தின் கண்களுக்கும் ஏழைக் குழந்தைகள் எவரும் தட்டுப்படவில்லை!

இவர்கள் மட்டுமல்ல... பல எம்.பி-க்களின் பரிந்துரைகளும் இப்படித்தான் இருக்கின்றன. நீலகிரி எம்.பி ஆ.ராசா பரிந்துரைத்தவர்களில் ஒன்பது பேரின் பெற்றோர் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நாமக்கல் எம்.பி சின்ராஜ் பரிந்துரைத்த பத்துப் பேரின் பெற்றோர்களுமே அவரது தொகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதேபோல சேலம் எம்.பி பார்த்திபன் பரிந்துரைத்தவர்களில், ஒன்பது பேரின் பெற்றோர் அவரது தொகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. வேட்பாளர் பட்டியல் தேர்வே தோற்றுவிடும் போலிருக்கிறது!

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை, நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் நடுத்தர, ஏழைக் குழந்தைகள், சில கட்சியினர், சில அரசு அலுவலர்கள் எனக் கலவையாகப் பரிந்துரைத்திருக்கிறார்கள். என்னத்த சொல்ல!

இவர்களுக்கு மத்தியில்... மறைந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார், பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், சிதம்பரம் எம்.பி திருமாவளவன், கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் ஆகியோர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடித்தட்டு ஏழை மக்களின் குழந்தைகளுக்குப் பரிந்துரைத்திருக்கிறார்கள். இவர்களின் பரிந்துரைப் பட்டியலிலுள்ள மாணவர்களின் பின்புலம் குறித்து விசாரித்தபோது, கல்வியை நோக்கி அடியெடுத்துவைக்கும் வறுமையின் பாதங்களே தென்பட்டன.

மதிப்புக்குரிய எம்.பி-க்களே... தரமான கல்வியை இலவசமாக அளிப்பது அரசின் கட்டாயக் கடமைகளில் ஒன்று. கல்வி வணிகமாகி, கடைநிலை மக்களின் கண்களுக்கே அது தட்டுப்படாத இன்றையச் சூழலில், ஏழைகளுக்கு இருக்கும் ஓரிரு வாய்ப்புகளையும் தட்டிப்பறித்து, அரசியல் செய்ய வேண்டாம்!

***

“நியாயப்படுத்தவே முடியாது!”

எட்டாக்கனியான கேந்திரிய வித்யாலயாக்கள்...

‘‘பணம் வாங்கிக்கொண்டு பரிந்துரை செய்தார்களா, தவறு நடந்திருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும். கேந்திரியப் பள்ளிகளில் இப்படியோர் ஏற்பாடு இருப்பதே நிறைய பேருக்குத் தெரியாது. தெரிந்த சிலர் மட்டுமே பயனடைகிறார்கள். தன் தொகுதி அல்லாத மாணவர்களை கேந்திரியப் பள்ளிகளில் ஒரு எம்.பி பரிந்துரை செய்திருக்கிறார் என்றால், முகவரியைப் போலியாகக் கொடுத்து சேர்த்திருக்கிறார்களா என்றும் கேள்வி எழுகிறது. அதையும் விசாரிக்க வேண்டும். அநியாயம் அநியாயம்தான். எக்காரணம் கொண்டும் இதை நியாயப்படுத்த முடியாது.’’

-பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஒருங்கிணைப்பாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை.