Published:Updated:

குழந்தைத் தொழிலாளர்களான பள்ளி மாணவர்கள்; ₹50-க்கும் குறைவான கூலி; அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாடு முழுக்க பள்ளி மாணவர்களைச் சந்தித்து அவர்களின் நிலைகுறித்து கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவால் பல துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புதான் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. குறிப்பாகப் பள்ளிக் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பதைபதைக்க வைக்கிறது. ``இந்த ஜென்மத்துல பள்ளிக்கூடம் திறக்க மாட்டாங்க. கொரோனாதான் புதுசு புதுசா வந்துகிட்டே இருக்கே... வாட்ஸ்அப்ல நடத்துற கிளாஸ்ல சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றாங்க... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுல படிச்சதல்லாம் மறந்துபோச்சு. புதுசா எதையுமே படிக்கல" என அப்பாவியாகச் சொல்கிறான் மூன்றாம் வகுப்பு படிக்கும் கபிலன்.

மாணவர்களிடம் ஆய்வு
மாணவர்களிடம் ஆய்வு

ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி என்று அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகள் அனைத்து குழந்தைகளுக்கும் முறையாகப் போய்ச் சேரவில்லை, பள்ளிக் குழந்தைகள் பலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்டனர், குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன என்று சொல்லப்படுகிறது. ஆனால், `பள்ளி மாணவர்களின் இப்போதைய சூழல் என்னவாக இருக்கிறது?' என்பதற்கான பரந்துபட்ட புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை. இப்படியான சூழலில், தமிழ்நாடு முழுக்க பள்ளி மாணவர்களைச் சந்தித்து அவர்களின் நிலைகுறித்து கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

``தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களிலும் கிராமம், சிறு நகரம், நகரம், பெருநகரம் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று 2,137 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 65 கேள்விகள், ஒரு மாணவரிடம் 25 நிமிடங்கள் என 800 மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்பட்டிருந்தாலும் 9 முதல் 11-ம் வகுப்பு மாணவர்கள் 11 சதவிகிதம் பேர் இதில் பங்கேற்றிருக்கின்றனர்" என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் இந்தக் கள ஆய்வு முடிவுகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்தவருமான பேராசிரியர் நா.மணி. ஆய்வில் தெரியவந்துள்ள விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம்...

முனைவர் நா.மணி
முனைவர் நா.மணி

``ஆய்வுக்காக நாங்கள் 2,137 மாணவர்களைச் சந்தித்தோம். அதனடிப்படையில், 2019-2020-ஐ காட்டிலும் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, ஆய்வுக்காகச் சந்தித்த மாணவர்களில் 476 மாணவர்கள் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் படித்துள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 382-ஆகக் குறைந்துள்ளது. தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள் பெரும்பாலும் கொரோனாவால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள்தாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ள மாணவர்கள்!

ஆய்வுக்காக நாங்கள் சந்தித்த 2,137 மாணவர்களில் 277 மாணவர்கள் அதாவது 13 சதவிகித மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக வேலைசெய்வதாகக் கிடைத்திருக்கும் புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. விவசாய வேலை, தொழிற்சாலை பணி, வகைப்படுத்த முடியாத இன்ன பிற வேலைகள் எனப் பல்வேறு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சிலர், சுயதொழில் செய்யும் பெற்றோருக்கு உதவியாகச் செல்வதாகச் சொல்லியிருக்கின்றனர்.

மாணவர்கள் வேலைக்குச் செல்வது ஒருபுறம் கொடுமை என்றால் அவர்களின் உழைப்பு, குறைந்த கூலிக்குச் சுரண்டப்படுவது அதைவிட கொடுமை. வேலைக்குச் செல்லும் மாணவர்களில் 35 சதவிகிதம்பேர் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்குள்தான் கூலி பெறுகின்றனர். 25 சதவிகிதத்தினர் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்வரை கூலி பெறுகின்றனர். 25 சதவிகிதத்தினர் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கூலி பெறுகின்றனர். 200 ரூபாய்க்கு மேலே கூலி பெறுகிறவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே இருக்கிறது.

இதில் 37 சதவிகிதம் பேர் 4 மணி நேரத்துக்குக் குறைவாகவும், 23 சதவிகிதம் பேர் 4-லிருந்து 6 மணி நேரம் வரையிலும், 30 சதவிகிதம் பேர் 6-லிருந்து 8 மணி நேரம் வரையிலும் வேலை செய்கின்றனர். மீதமுள்ளோர் 8 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

மாணவர்களிடம் ஆய்வு
மாணவர்களிடம் ஆய்வு
`கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

ஆன்லைன் வகுப்புகளின் நிலை என்ன?

கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புதான் ஒரே மாற்றாக இருக்கிறது. பல துறைகள் ஆன்லைனில் இயங்கினாலும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பெடுப்பதில் பல்வேறு சிரமங்கள் நீடிக்கின்றன. அவர்களுக்கு ஆன்லைன் கல்வி முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது எங்களது ஆய்வின் மூலமாகத் தெளிவாகியிருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டனவா என்ற கேள்விக்கு 49 சதவிகிதத்தினர் `ஆம்' என்றும் 51 சதவிகிதத்தினர் `இல்லை' என்றும் பதிலளித்திருக்கின்றனர். இதில் 54 சதவிகிதத்தினர் நடத்தப்படும் `பாடம் புரிகிறது' என்றும் 46 சதவிகிதத்தினர் `பாடம் புரியவில்லை' என்றும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாகக் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்ட பாடம் `புரியவில்லை' என்ற கருத்தும் அதிகளவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `சென்ற ஆண்டு வழங்கப்பட்ட புத்தகங்களைப் படித்தீர்களா?' என்ற கேள்விக்கு 69 சதவிகித மாணவர்கள் `ஆம்' என்றும் 31 சதவிகித மாணவர்கள் `இல்லை' என்றும் பதிலளித்திருக்கின்றனர்.

கேள்விக்குறியான குழந்தைகள் பாதுகாப்பு?

கொரோனா ஊடரங்கால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பள்ளிகள் இல்லாத சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கிறது என்று 38 சதவிகித பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மற்றவர்கள் அப்படிக் கருதவில்லை என்று தெரிவித்தாலும் 38 சதவிகிதத்தினரின் நிலையை நினைத்தால் கவலையாகவே இருக்கிறது. தாங்கள் வேலைக்குச் செல்லும்போது பெரியவர்கள் பொறுப்பிலோ, உறவினர் வீட்டிலோ பிள்ளைகளை விட்டுவிட்டுச் செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Representational Image
Representational Image
Pixabay
அட்மிஷனில் அசத்தும் அரசுப் பள்ளி... மாணவர்களுக்கு வைப்பு நிதி, பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை!

அடுத்த வகுப்புக்கு புதிய பள்ளியில் சேராத மாணவர்கள்!

கொரோனா பெருந்தொற்றால் பள்ளிக்கூடங்கள் ஓராண்டுக்கும் மேலாக மூடிக்கிடப்பதால் இன்னொரு புதிய சிக்கலும் உருவாகியிருக்கிறது. தொடக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியவர்கள், நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியவர்கள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்புக்கு மீள் சேர்க்கை செய்ய வேண்டிய மாணவர்களும் அதுகுறித்த நடைமுறை தெரியாமல் அடுத்த வகுப்புக்கே செல்லாமல் இருக்கின்றனர். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 242 மாணவர்கள் அப்படியான சூழலில் இருக்கின்றனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது எதிர்பார்ப்பு என்ன?

குறைந்த அளவிலான பாடங்கள் இருப்பின் நல்லது என்று 41 சதவிகிதமும், விளையாட்டுக்கு அதிக இடமளிக்க வேண்டும் என்று 28 சதவிகித மாணவர்களும், பள்ளி திறக்கப்பட்டு சில நாள்களுக்குப் பாடங்களே இல்லாத வகுப்பறைகளாகக் கொண்டு செல்லலாம் என்று எஞ்சியிருப்போரும் தெரிவித்திருக்கின்றனர். பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கும் வசதிகள் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்றும் போதனை முறைகள் மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்றும் மற்ற மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மாணவர்களிடம் ஆய்வு
மாணவர்களிடம் ஆய்வு
`அரசுப் பள்ளியில் 3.4 லட்சம் தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு என்ன செய்ய வேண்டும்?

குழந்தைத் தொழிலாளியாக இருக்கும் மாணவர்கள், தற்காலிக இடைநிறுத்தம் ஆன மாணவர்கள், மீண்டும் பள்ளி செல்வதில் பிரச்னை இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துவிட்டார்களா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு மாற மீண்டும் சேர்க்கை செய்ய வேண்டிய மாணவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். ஆகையால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை வயதுக்கேற்ற வகுப்பறையில் சேர்க்க வேண்டும்.

லட்சத்தைக் கடந்த சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை! - தக்கவைத்துக்கொள்வது எப்படி?

அரசுப் பள்ளிகளிலும் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையைத் தக்க வைக்கவும் மேலும் அதிகரிக்கவும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், தரமான கல்விக்கான கற்றல் கற்பித்தல் முறைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது செயல்படுத்தப்படும் இணையவழி கல்வி, கல்வி தொலைக்காட்சி கல்வி எல்லா மாணவர்களுக்கும் எளிதில் புரியும் வகையில் சென்று சேரும்படி இதை மறு ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும். பள்ளியில் முட்டையுடன் தொடர்ச்சியாகச் சத்துணவு சாப்பிடாததால் ஏழை குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைந்திருக்கிறது. ஆகவே, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நடைபெறாவிட்டாலும் முட்டையுடன்கூடிய சமைத்த உணவை குழந்தைகளுக்குச் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் பள்ளிகள் தொடங்கப்படும்போது இழந்த பாடங்களையெல்லாம் மீண்டும் கொடுத்துவிடலாம் என்ற அடிப்படையில் பாடங்களை நடத்த ஆரம்பித்தால் அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, ஆரம்பத்தில் குறைந்த அளவிலான பாடங்கள், விளையாட்டு வழி செயல்பாடுகள், திட்டமிடப்பட்ட பாடங்கள் இல்லாத வகுப்புகள் என சுவாரஸ்யமான வகையில் கல்வியின் வடிவத்தை மாற்ற வேண்டும். அதைச் செய்யாமல் இழந்ததை மீட்போம் என்று மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் வேகவேகமாகப் பாடங்களை நடத்த ஆரம்பித்தால் அது பெரிய சிக்கலை உருவாக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு