Published:Updated:

"அரசு மனசுவச்சா அந்தக் கிராமத்துக்கே முதல் பட்டதாரி இவர்தான்!" - பழங்குடி மாணவருக்காக எழும் குரல்கள்

ஐஷ்வர்யா

பழங்குடியின மக்களான சோளகர்களின் கிராமம் அது. அந்த ஊரைச் சேர்ந்த சந்திரன் 600 மதிப்பெண்களுக்கு 444 பெற்றிருந்தாலும் அவருக்கு மேற்படிப்பு படிக்க அரசுப் பல்கலைக்கழகங்களில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.

Student Chandran
Student Chandran ( ரமேஷ் கந்தசாமி )

ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் பகுதியிலிருந்து செல்லும் சாலையில் 60 கிலோமீட்டர் பயணத் தொலைவில் இருக்கிறது கொங்காடை என்னும் மலைக்கிராமம். சோளகர் பழங்குடிகள் பெரும்பான்மையாக நிரம்பிய இந்தப் பகுதியில்தான் மாணவர் சந்திரனின் வீடு இருக்கிறது.

600 மதிப்பெண்களுக்கு 444 பெற்றிருந்தாலும் அவருக்கு மேற்படிப்பு படிக்க அரசுப் பல்கலைக்கழகங்களில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பில் வேளாண்மைத் தொழிற்பாடத்தை தேர்வு செய்த பழங்குடியினரில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றிருக்கிறார் சந்திரன். 600 மதிப்பெண்களுக்கு 444 பெற்றிருந்தாலும் அவருக்கு மேற்படிப்பு படிக்க அரசுப் பல்கலைக்கழகங்களில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பித்து இருந்தார். தரவரிசைப் பட்டியலில் முறையே 409 மற்றும் 146வது இடத்தில் இருந்தாலும் அவருக்கு அழைப்புக் கடிதம்கூட இரண்டு பல்கலைக்கழகங்களிலிருந்தும் அனுப்பப்படவில்லை.

கொங்காடையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரம் ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றால் சந்திரனின் வீடு இருக்கும் பகுதிக்குச் செல்லலாம். அப்பா பெயர் உடுமுட்டி. அம்மா பசுவி. அவர்களின் 11 பிள்ளைகளில் ஐந்தாவது பிள்ளைதான் சந்திரன். வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது அவர்களுடைய கிராமம். மலைக்காடுகளில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சந்திரனை மீட்டுக் கொண்டு வந்து படிக்க வைத்த சுடர் அமைப்பின் நடராஜன் கூறுகையில், "அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே அல்லாடும் பழங்குடியின மக்களின் வாழ்வில் இந்த மாணவன் இத்தனை மதிப்பெண்கள் பெற்றிருப்பது அசாத்தியமான சாதனை. ஆனால், அதற்கான அங்கீகாரம் சந்திரனுக்குக் கிடைக்கவில்லை.

Chandran with his family
Chandran with his family

"கால்நடை மருத்துவம் மற்றும் வேளாண்மைப் பட்டப் படிப்பில் சேர மேல்நிலைக் கல்வியில் (ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ) வேளாண்மைத் தொழிற் பாடப்பிரிவு மாணவர்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே. இதனால் சந்திரன் போன்ற வேளாண்மையைத் தேர்வு செய்து படித்த பழங்குடி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

மேலும், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் 6 உறுப்புக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் - பராமரிப்பு (B.V.Sc&AH), உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட நான்கு படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 12 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 27 தனியார் இணைப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் - வேளாண்மை (B.Sc Agriculture), இளம் அறிவியல் – தோட்டக்கலை (B.Sc Horticulture) மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட 11 படிப்புகள் நடத்தப்படுகின்றன.

Vikatan

தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விப் படிப்பில் (ப்ளஸ் டூ) வேளாண்மைச் செயல்பாடுகள் (HIGHER SECONDARY – AGRICULTURAL PRACTICES - VOCATIONAL STREAM) தொழிற் பாடப்பிரிவு உள்ளது. பெரும்பாலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் இப்பாடப்பிரிவு உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள நான்கு படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு மட்டும் (BVSc&AH) மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் (VOCATIONAL STREAM) படித்த மாணவர்களுக்கு வெறும் 5 சதவிகித இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 360 இடங்களில் வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு வெறும் 18 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் உள்ள பிற தொழில்நுட்பப் படிப்புகளில் இந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை.

வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்
வேளாண் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 12 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 1,225 மாணவர்களும் 27 தனியார் இணைப்புக் கல்லூரிகளில் 3,995 மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கையில் மேல்நிலைக் கல்வி வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் - வேளாண்மை படிப்பில் 31 இடங்கள், இளம் அறிவியல் - தோட்டக்கலை படிப்பில் 8 இடங்கள், இளம் அறிவியல் - வனவியல் படிப்பில் 2 இடங்கள், இளம் தொழில்நுட்பம் - வேளாண்மைப் பொறியியல் படிப்பில் 3 இடங்கள் என நான்கு படிப்புகளுக்கு மொத்தமாகவே 44 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இவ்விடங்களை நிரப்புவதில் அரசு இட ஒதுக்கீட்டு விதிமுறை பின்பற்றப்படுவதில்லை.

தனியார் இணைப்புக் கல்லூரிகளில் பல்கலைக்கழக ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் 65 சதவிகித இடங்களுக்கும் இணைப்புக் கல்லூரிகளின் நிர்வாகங்களே நிரப்பும் 35 சதவிகித இடங்களுக்கும் மேல்நிலைக் கல்வி வேளாண்மைத் தொழிற்பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை.

அறிவியல் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 95 சதவிகித இடங்களையும் ஒதுக்குவது தொழிற்பிரிவுப் பாட மாணவர்களின் கல்வி உரிமையை முற்றிலுமாக மறுப்பதாக உள்ளது.

ஆனால், வேளாண்மைப் பாடத்தை மேல்நிலைக் கல்வியில் ஒரு பாடமாகக்கூட படிக்காத அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 95 சதவிகித இடங்களையும் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் உள்ள 100 சதவிகித இடங்களையும் ஒதுக்குவது தொழிற்பிரிவுப் பாட மாணவர்களின் கல்வி உரிமையை முற்றிலுமாக மறுப்பதாக உள்ளது. மேலும், இரு பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஒன்பது தொழில் நுட்ப படிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மைப் பல்கலைக்கழகப் படிப்புகளில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 140 இடங்கள், தொழில் நிறுவனங்கள் பரிந்துரைப்பவர்களுக்கு 140 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் இரண்டாண்டுகள் வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு வெறும் 44 இடங்கள் மட்டும் ஒதுக்குவது மிகப் பெரிய அநீதியாகும்.

Tamilnadu Agricultural University
Tamilnadu Agricultural University

மொத்தமாக, தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்பில் 18 இடங்கள் மற்றும் வேளாண்மைப் பட்டப் படிப்பில் 44 இடங்கள் மட்டுமே தொழிற்பாடப்பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதால் தொழிற் பாடப்பிரிவில் படித்த பழங்குடி மற்றும் சிறப்பு உள் ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள அருந்ததியர், இஸ்லாமியர் ஆகிய மாணவர்கள் எவரும் இட ஒதுக்கீட்டு வாய்ப்பின் மூலம் கால்நடை மருத்துவப் படிப்பிலும் வேளாண்மைப் பட்டப்படிப்பிலும் சேர்வதற்கு வாய்ப்பில்லை.

மேல்நிலைக் கல்விப் படிப்பில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பவியல், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு கல்லூரிப் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது. ஆனால், வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு பயின்ற மாணவர்கள் மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேர முடியாது. எனவே, வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு வேளாண்மைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களைக் காட்டிலும் முன்னுரிமையும் கூடுதலான இடங்களையும் ஒதுக்குவதே நியாயமானது.

Vikatan

எனவே, மாணவர் சேர்க்கை விதிமுறைகளைத் திருத்தம் செய்த பிறகே இக்கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்” என நியாயமான சில கோரிக்கைகளை முன்வைக்கிறார் நடராஜன்.

சந்திரனின் கல்வி தொடர்பான விவகாரத்தை தாமே முன்வந்து கையிலெடுத்துள்ளது தமிழ்நாடு மனித உரிமை ஆணையம். இரண்டொரு வாரங்களில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமிருந்தும் இதுதொடர்பாக விளக்கமும் கேட்டுள்ளது. இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு பல்கலைக்கழகமும் இதுவரை மனித உரிமை ஆணையத்திடம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

இதுகுறித்து வேளாண் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகப் பதிவாளர் தென்சிங் ஞானராஜிடம் கேட்டோம், "மனித உரிமை ஆணையத்துக்கு விரைவில் விளக்கம் அளிக்கப்படும். அதில் அனைத்து கேள்விகளுக்குமான பதிலும் இடம்பெறும்” என்று அவர் தெரிவித்தார்.

தென்சிங் ஞானராஜ்
தென்சிங் ஞானராஜ்

திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியின் கீழ்தான் கொங்காடை கிராமம் வருகிறது. அந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். அவர் கூறுகையில் "நிலப்பரப்பில் இருக்கும் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுவது போலதான் மலைக்கிராமங்கள் இருக்கும் தொகுதிகள் மேம்பாட்டுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட அடிப்படை வசதியிலிருந்தே கட்டியெழுப்பப்படவேண்டிய இடங்களையும் முன்னேற நகர்புறங்களையும் அரசு எப்படி ஒரே தட்டில் வைத்து எடைபோடுகிறது எனத் தெரியவில்லை. கொங்காடை மலைக்கிராமப் பகுதி கல்வி உள்ளிட்ட பல அடிப்படைப் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதில் சந்திரனின் கல்விப் பிரச்னையும் ஒன்று. வரும் வாரத்தில் அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று இது போன்ற இதர பிரச்னைகளில் நேரடி தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்தார்.

சுப்பராயன்
சுப்பராயன்

தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு 2019 பள்ளிப் படிப்புகளில் தொழிற்கல்வி முறையைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் பேசியிருக்கிற சூழலில் ஏற்கெனவே மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வியைத் தேர்வு செய்த கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெறாத சமூகத்தின் மாணவர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற இன்னல்களைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விவாதித்துச் செயல்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.