Published:Updated:

` செல்போனை எடுக்கல; பம்பரம், கில்லியை எடுத்தனர்!' - திருச்சி அரசுப் பள்ளியின் புதிய முயற்சி

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

விடுமுறை நாள்களில், மாணவர்கள் பள்ளிக்கூடம் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள். ஆனால், திருச்சி மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றின் மாணவர்கள், ஞாயிறு விடுமுறையில் பாரம்பர்ய விளையாட்டுகளான கில்லி, பம்பரம் விளையாடி அசத்தினர்.

Contest
Contest

'புத்தகம் இல்லாத பொழுதுகள்', 'செல்போனைத் தொலைப்போம்' எனும் முழக்கத்துடன், `கிராமப்புற விளையாட்டை மீட்டெடுப்போம்' என்கிற தலைப்பில், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர் மாணவர்கள்.

பம்பரம் விளையாடும் மாணவர்கள்
பம்பரம் விளையாடும் மாணவர்கள்

காலை 9.30 மணிக்கு தொடங்கிய விழாவுக்காக, மாணவர்கள் 8 மணியிலிருந்தே ஆர்வத்தோடு வரத் தொடங்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் விழா நடந்தது.

நிகழ்ச்சியில் பேசியவர்கள், “இன்றைய இளம் தலைமுறையினர் தொலைக்காட்சியிலும் செல்போனிலும் விளையாடி நேரத்தைச் செலவழிப்பதோடு, அமர்ந்த இடத்திலேயே விளையாடுவதால் பழைமையான விளையாட்டுகளை மறந்துவிட்டார்கள். அதனால் பாரம்பர்ய விளையாட்டுகளை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் விதமாகவும் உடலளவில் நல்ல பலத்தைப் பெற, ஓடியாடி விளையாடுகின்ற பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இவ்விழா'' என விவரித்தனர்.

மாணவர்களுக்கு விருந்து
மாணவர்களுக்கு விருந்து
நீங்க மட்டும் இல்லன்னா..! - மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட ஆசிரியர்கள்

அடுத்து மாணவ-மாணவிகள், பார்வையாளர்களை அசத்தும் விதமாக, சிலம்பம் சுற்றினர். நொண்டி விளையாடினர். ஷூ போட்டிருந்தாலும், சந்தோஷமாக துள்ளிக் குதித்தனர்.

அடுத்ததாக டயர் உருட்டும் போட்டி. சிறுவயதில் கிராமங்களில் சைக்கிள் டயர்களை உருட்டிக்கொண்டு ஓடிய நினைவுகளில் மூழ்கவைத்தது. ஆனால், சமீபகாலமாக சைக்கிள் பயன்பாடு குறைந்ததால், சைக்கிள் டயர்களுக்குப் பஞ்சம். அதனால் துளியும் சளைக்காமல் மாணவர்கள், இருசக்கர வாகனங்களின் டயர்களைக் கொண்டுவந்த போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கினர். அடுத்து, ஆயுதப்படை காவலர் அரவிந்த் மற்றும் அவரது சிலம்பாட்டக் குழுவினர் லாவகமாக சுற்றி சாகசங்களைக் காட்டி அசத்தினர்.

பல்லாங்குழி, கில்லி, பம்பரம், கோலி, தாயம், பாண்டி, கல்லாங்காய் என விளையாட்டுகள் தொடர்ந்தன. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு

பாரம்பர்ய போட்டிகளில் கலந்துகொண்ட மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள், தலைவாழை இலையில், சுடச்சுட பிரியாணி சாப்பிட்ட கையோடு, விழா நடத்தியவர்களுக்கு மறக்காமல் நன்றி கூறிவிட்டு கிளம்பிய அந்தப் பள்ளி மாணவர்களின் முகத்தில் அத்தனை உற்சாகம்.
-
`உரிமை பறிபோகும்; கல்வி சிதைந்துபோகும்!'- புதிய கல்விக் கொள்கை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி