கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்த காரணத்தினால் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக வகுப்பிற்கு வர தடை விதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர், தங்களை வகுப்பிற்கு அனுமதிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 27-ம் தேதி, சம்பந்தப்பட்ட உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில், தங்களுடைய மத நம்பிக்கையின் படி ஹிஜாப் அணிந்து வந்த 8 மாணவிகளை ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி வகுப்புகளுக்குச் செல்லத் தடை விதித்தது கல்லூரி நிர்வாகம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தடை உத்தரவால் ஒரு மாதத்திற்கு மேலாக வகுப்புகளுக்குச் செல்லாமல் உள்ள எட்டு மாணவிகளில் ஒருவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், கல்லூரி நிர்வாகம் தங்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இந்திய அரசியலமைப்பு பிரிவு 14 மற்றும் பிரிவு 25-ன் படி ஹிஜாப் அணிவது ஒருவரின் அடிப்படை உரிமை என்று வாதிட்டார்.
``இந்திய அரசியலமைப்பு எந்தவொரு மனிதரும் தன் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் உரிமையை உறுதி செய்கிறது. மதம் சம்பந்தமான நடவடிக்கைகள் பொது ஒழுங்கு, சட்டம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை உள்ளடக்கியிருந்தால் மட்டுமே அது மாநில உரிமை தலையிடக் கூடியது'' என்று மாணவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் வழக்கறிஞர்கள் கூறுகையில், ``ஹிஜாப் அணிந்ததன் காரணமாக மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்காதது சட்டத்திற்கு புறம்பானது" என்று, முந்தைய வழக்குகளின் உதாரணங்களுடன் வாதிட்டனர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து உடுப்பி பா.ஜ.க எம்.எல்.ஏ. ரகுபதி பட், கல்லூரியின் வளர்ச்சிக் குழுவின் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடம் நேற்று பேசினார். அப்போது, வகுப்புக்கு ஹிஜாப் அணியாமல் மாணவிகள் வருவது குறித்து அவர்களிடம் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.