Published:Updated:

கிராமப்புறக் கல்வியை உயிர்ப்பிக்கும் நாட்டுப்புறக் கலைகள்: களைகட்டும் திருவாரூர் கிராமங்கள்

நாட்டுப்புறக் கலைஞர்கள்

"தெருக்கூத்து, தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் மாதிரியான நாட்டுப்புறக் கலைகள் மூலமா எந்த ஒரு விஷயத்தையும் மக்கள்கிட்ட எளிமையாக் கொண்டு போக முடியும்"

கிராமப்புறக் கல்வியை உயிர்ப்பிக்கும் நாட்டுப்புறக் கலைகள்: களைகட்டும் திருவாரூர் கிராமங்கள்

"தெருக்கூத்து, தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் மாதிரியான நாட்டுப்புறக் கலைகள் மூலமா எந்த ஒரு விஷயத்தையும் மக்கள்கிட்ட எளிமையாக் கொண்டு போக முடியும்"

Published:Updated:
நாட்டுப்புறக் கலைஞர்கள்

தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வீதி நாடகங்களால் திருவாரூர் மாவட்ட கிராமங்கள் களைகட்டுகின்றன. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், நாட்டுப்புறக் கலைஞர்களோடு, ஆசிரியர்களும் கைகோத்து வலம்வருகிறார்கள். இங்கு நிகழ்த்தப்படும் கலை நிகழ்ச்சிகளால், கிராமப்புற மாணவர்கள் மற்றும் இவர்களின் பெற்றோர்கள் மிகுந்த உற்சாகமடைவதோடு மட்டுமல்லாமல், கொரோனாவால் தடைப்பட்டுப்போன கல்வியை உடனடியாக உயிர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து விழிப்புணர்வடைகிறார்கள். குறிப்பாக, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அதற்குப் பெருந்துணையாக இருப்பதாக, நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களுடைய கலைகள் மூலமாக எளிமையாக உணர்த்துகிறார்கள். அதேசமயம் இக்கல்வித் திட்டத்தின் விழிப்புணர்வுப் பிரசாரத்தினால், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் தற்காலிக மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நாட்டுப்புறக் கலைஞர்கள்
நாட்டுப்புறக் கலைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நவீன ஊடகங்களின் வருகையால், நாட்டுப்புறக் கலைகளுக்கான வரவேற்பு படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கிடையில்தான் மேலும் இக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக முடக்கிப்போட்டது கொரோனா பொது முடக்கம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புறக் கலைஞர்கள் அடைந்த துயரம் கொஞ்சநஞ்சமல்ல, கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். அன்றாட ஜீவனத்துக்கே வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் மூலம் இவர்களுக்குத் தற்காலிகமான மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. கல்வியும் நாட்டுப்புறக் கலைகளும் ஒன்றையொன்று பரஸ்பரம் உயிர்ப்பிக்கின்றன.

நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்
நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கலைப் பிரசார வாகனத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்து உரையாற்றிய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ‘’திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தினமும் இரண்டு பள்ளிகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள் என்ற வகையில் மாவட்டம் முழுவதும் கலைக்குழு மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் தேர்தெடுக்கப்பட்டு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட, நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் வீதி நாடகக் கலைஞர்களைக் கொண்டு இத்திட்டத்தின் நோக்கத்தினையும் இதனால் ஏற்படப்போகும் பலன்களையும் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வோம்’’ என்றார்.

வீதிநாடகக் கலைஞர் சரிதா
வீதிநாடகக் கலைஞர் சரிதா

திருவாரூர் மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான, பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கபாபு, ‘’கொரோனா பொது முடக்கத்தால், கடந்த ஒன்றரை வருசமா பள்ளிக்கூடங்கள் இல்லாததனால கிராமப்புற மாணவர்களோட கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு. இந்த சமயத்துல தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்குற, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்லணும். கொரோனா காலத்தில் விடுபட்டுப்போன கல்வியை, கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், இப்படி ஒரு வாய்ப்பு இருக்குறங்கறதைப் பத்தியும், தடைப்பட்டுப்போன படிப்பை மறுபடியும் தொடர வேண்டிய அவசியத்தையும் கிராமப்புற மாணவர்களுக்கும் அவங்களோட பெற்றோர்களுக்கும் ரொம்ப எளிமையா, விரைவாக உணர வைக்கணும். அதுக்கு நாட்டுப்புறக் கலைகள்தான் எளிமையான வழின்னு தமிழக அரசு தீர்மானிச்சு இதுக்குச் செயல் வடிவம் கொடுத்திருக்கு. இதுக்காக, தமிழகம் முழுக்க 376 கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கு. மக்கள் அதிக அளவில் கூடக்கூடிய பொது இடங்கள்ல இந்த நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டிருக்கோம்” என்றார்.

வீதிநாடகக் கலைஞரான சரிதா, ‘’நான் பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். டிப்ளமோ கம்ப்யூட்டர் கோர்ஸும் முடிச்சிருக்கேன். மைக்ரோ பைனான்ஸ்ல வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். வீதி நாடகங்கள்ல எனக்கு ஆர்வம் அதிகம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்து மூலம் என்னோட ஆசை நிறைவேறியிருக்கு. கொரோனா பொது முடக்கத்தால, கிராமப்புற மாணவர்கள் கடந்த ஒன்றரை வருசமா வீட்லயே இருந்ததனால, மறுபடியும் பள்ளிக்கூடம் போகணும்ங்கற எண்ணமே இல்லாம இருக்காங்க. படிப்போட அவசியத்தை ரொம்ப எளிமையா உணர்த்த வீதிநாடகம் கைகொடுக்குது’’ என்றார்.

நாட்டுப்புறக் கலைஞர் வீரராகவன்
நாட்டுப்புறக் கலைஞர் வீரராகவன்

நாட்டுப்புறக் கலைஞர் வீரராகவன், ‘’ஒன்றரை வருசமா வாழ்வாதாரம் இல்லாமல், ரொம்பவே கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தோம். இப்ப எங்களுக்கு மறுவாழ்வு கிடைச்சிருக்குன்னுதான் சொல்லணும். பொதுவாகவே, நாட்டுப்புறக் கலைகள் கடந்த கொஞ்ச காலமா மக்கள்கிட்ட இருந்து அந்நியப்பட்டு இருந்துச்சு, இப்ப நாங்க நடத்துற நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு, மக்கள் மறுபடியும் ஆர்வமாயிட்டாங்க, இது மூலமா நிறைய நிகழ்ச்சிகள் கிடைக்குறதுக்கான வாய்ப்புகள் தெரியுது. மாணவர்கள் ரொம்ப ஆர்வமா, இந்தக் கலைகளைக் கத்துக்குறாங்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முடிஞ்ச பிறகு இலவசமா பயிற்சி கொடுக்குறோம். இதுமூலமா கிராமப்புறக் கலைகள் உயிர்க்கப்படுது. தெருக்கூத்து, தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் மாதிரியான நாட்டுப்புறக் கலைகள் மூலமா எந்த ஒரு விஷயத்தையும் மக்கள்கிட்ட எளிமையாக் கொண்டு போக முடியும்’’ எனத் தெரிவித்தார்.

இல்லம் தேடிக் கல்வி மட்டுமல்ல, கிராமப்புறக் கலைகளும் சென்றடைவது பாராட்டுக்குரியது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism