Published:Updated:

மாணவர்கள் விரும்பும் ஆன்லைன் தேர்வு; அரசு அறிவித்திருக்கும் நேரடி தேர்வு; முடிவுதான் என்ன?

தமிழக அரசு இந்த முறை நேரடித் தேர்வுதான் நடக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிடவே, சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் `ஆன்லைன் தேர்வு வேண்டும்' எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக 2019-ம் வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதே நேரம் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. ஆன்லைனில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்களும் எழவே, ஆன்லைனிலேயே மறுதேர்வும் நடத்தப்பட்டது. மாணவர்கள் தரப்பிலோ, ``ஆன்லைன் தேர்வு நேரத்தில் நாங்கள் லேசாக திரும்பியதைக்கூட எங்களைக் கண்காணித்த `செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள்' காப்பியடித்ததாகப் பதிவு செய்துவிட்டன" என்கிறார்கள்.

Education (Representational Image)
Education (Representational Image)

இதே நேரத்தில், சில பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் ஆன்லைனில் வினாக்களை அனுப்பி, மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுதி, கல்லூரிகளுக்கு கொரியர் மூலம் அனுப்பப் பணித்தன. இந்த விஷயத்திலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் கொரியர் அனுப்ப முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட ஆரம்பித்தன. அதே நேரம், அரசு பொறியியல் கல்லூரிகளும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. கல்வியாளர்களும், ``நவராத்திரி விடுமுறை கழித்துத் திறக்கப்படலாம், தீபாவளி விடுமுறை கழித்துத் திறக்கப்படலாம். அது, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் எடுக்கிற முடிவைப் பொறுத்தது" என்றார்கள். இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்னால் தமிழக அரசு `அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடி வகுப்பறையில் நடத்தப்படும்' என்று அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள், ``ஆன்லைனில் வகுப்புகள் எடுத்ததுபோல ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும். ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை; ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை; எங்களிடம் தேர்வுக்குப் படிப்பதற்கான மெட்டீரியல்கள் இல்லை; கொரோனா காரணமாக நூலகங்களுக்குச் சென்று நோட்ஸும் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் எங்களால் ஆஃப்லைனில் தேர்வு எழுதுவது கடினம்" என்றார்கள்.

Exam (Representational Image)
Exam (Representational Image)
அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு ஆன்லைன் மறு தேர்வு; தேர்வுக் கட்டணம் இல்லை - தமிழக அரசு #NowAtVikatan

தமிழக அரசோ, இந்த முறை நேரடித் தேர்வுதான் நடக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிடவே, சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் `ஆன்லைன் தேர்வு வேண்டும்' எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

`நேரடி தேர்வு வேண்டாம், ஆன்லைன் மூலம் தேர்வை நடத்த வேண்டும்' என்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இரண்டு நாள்களுக்கு முன் போராட்டத்தைத் தொடங்க, அதே கோரிக்கையுடன் பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தியதால் மதுரை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களிலும் மாணவர் போராட்டங்கள் நடந்ததை அடுத்து, பல கல்லூரிகள் செமஸ்டர் தேர்வை தள்ளி வைத்துள்ளன. சில கல்லூரிகள் விடுமுறை விட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரையில் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேசினோம்.

``ப்ளஸ் டூ முடித்துவிட்டு கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோதுதான் கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கல்லூரி நேரடி வகுப்பில் கிடைக்கும் அனுபவம் இல்லாமல் போனது. ஆனாலும், ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வுகள் எழுத அனுமதித்தது ஓரளவு ஆறுதலைத் தந்தது.

கடந்த மாதம் கல்லூரிகள் திறந்து இப்போதுதான் பாடங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பித்துள்ளோம். பாடங்களை முழுமையாக உள்வாங்குவதற்குள் செமஸ்டர் தேர்வை நேரடியாக எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமா? இந்த செமஸ்டரை மட்டும் ஆன்லைனில் எழுத அனுமதித்து அடுத்த செமஸ்டரை நேரடியாக எழுதச் சொல்லலாம். இதை எங்கள் கல்லூரி முதல்வரிடம் வலியுறுத்தினோம். `எங்களால் இதில் ஒன்றும் செய்ய முடியாது' என்றார்கள். அதனால் கலெக்டரிடம் மனு அளிக்கச் சென்றோம். மற்றபடி கல்லூரி செல்வதை புறக்கணிக்கவோ, மக்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் போராட்டம் நடத்தவோ நினைக்கவில்லை" என்றார்கள்.

இன்னொரு பக்கம், ``பள்ளி மாணவர்களே நேரடியாகத் தேர்வுகளை எழுதும்போது கல்லூரி மாணவர்கள் நேரடியாக எழுத மாட்டோம் என்று போராட்டம் செய்வது ஏற்புடையது அல்ல'' என்று கூறி சில மாணவர்கள் போராட்டத்தை புறக்கணித்தனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்
`முன்பு பள்ளியில் 71 மாணவர்கள்; இப்போது 816 மாணவர்கள்!' - `நல்லாசிரியர்' ஆஷா தேவியின் நம்பிக்கை கதை

மதுரையில் மாணவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சென்ற நிலையில் பல இடங்களில் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர். `மாணவர்களை சில அமைப்பினர் தூண்டி விடுகிறார்கள்' என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ``கல்லூரி மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை" என்று அறிவித்த தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல், கல்வியியல் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் அனைத்தும் நேரடியான தேர்வாக அமையும் என்றும், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில் மதுரையில் தமுக்கம், அழகர் கோயில் சாலை, பெரியார் நிலையம், பசுமலையில் போராட்டம் நடத்திய 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பிருந்தாவிடம் பேசினோம். ``ஆன்லைன் எக்ஸாம் வேண்டாம், ஆஃப்லைன் எக்ஸாம் வேண்டுமென்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மாணவர்கள் நலன் சார்ந்து இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரிக்கே வராமல் ஆன்லைனில் பாடம் படித்து வந்த மாணவர்கள், நேரடி வகுப்பு தொடங்கி 45 நாள்களில் நேரடித் தேர்வு என்றதும் கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டார்கள். முதலில் அவர்களுக்கு உள்ள குழப்பத்தை தெளிவுபடுத்தி வழிகாட்டி, சில மாதம் கழித்து தேர்வை அறிவித்திருக்கலாம்

நாங்கள் ஆஃப்லைன் தேர்வுதான் சரியானது என்பதை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். என்றாலும் முதலாமாண்டிலிருந்தே ஆன்லைனில் படித்து வரும் மாணவர்கள் கல்லூரி அனுபவத்தை உணரும் முன்பே செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டதால் அஞ்சி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும், அரசும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கி, நேரடித் தேர்வு எழுதுவது பற்றி நம்பிக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இப்போது மாணவர்கள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வருகிறார்கள். அதே நேரம், தங்கள் அச்சத்தையும், கோரிக்கையையும் வெளிப்படுத்த போராட்டம் நடத்திய அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டிக்கிறோம். அரசு வழக்கை ரத்து செய்யவேண்டும்" என்றார்.

பிருந்தா
பிருந்தா

கல்லூரி முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளருமான இரா.முரளியிடம் பேசினோம். ``கடந்தாண்டு ஆன்லைன் தேர்வை அரசு அறிவித்தபோதே அதைக் கண்டித்தோம். பார்த்து தேர்வு எழுதும் எண்ணத்தை மாணவர்களுக்கு ஊக்குவிப்பதற்கு பதில், தேர்வை நடத்தாமல் பாடங்களை மட்டும் ஆன்லைனில் நடத்தியிருக்கலாம்.

இப்போதும் மாணவர்களுக்கு நேரடி தேர்வு பயத்தை போக்கி அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து, இரண்டு மாதங்களுக்கு பாடங்களை மட்டும் நடத்தி, செமஸ்டரை தள்ளி வைத்திருக்கலாம். மற்றபடி ஆன்லைன் தேர்வு என்பது சரியானது அல்ல. ஆஃப்லைன் தேர்வு எழுத மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித்துறையின் பொறுப்பு. அதற்குக் கொஞ்சம் காலம் எடுத்துச் செய்திருக்க வேண்டும்.

இரா.முரளி
இரா.முரளி

அதே நேரம் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது சரியானது அல்ல. அது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும். வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

ஜெயப்பிரகாஷ் காந்தி
ஜெயப்பிரகாஷ் காந்தி

ஆன்லைன் தேர்வு, ஆஃப்லைன் தேர்வு - சாதக, பாதகங்கள் என்னென்ன, மாணவர்களுக்காக அரசு இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் கேட்டோம். ``இன்றைக்குப் பெரும்பான்மை மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதவே விரும்புகிறார்கள். நேரடியாக கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதுகிற அளவுக்கு எங்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை; எங்களாலும் ஆன்லைனில் பாடங்களை சரிவர கவனிக்க முடியவில்லை என்று அதற்கான காரணங்களையும் மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சென்ற செமஸ்டரில் மாணவர்கள் லேசாக திரும்பியதைக்கூட அவர்களைக் கண்காணித்த செயற்கை நுண்ணறிவு முறை `தேர்வில் முறைகேடு செய்கிறார்கள்' என்று பதிவு செய்துவிட்டது. இதனால் மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்தச் சிக்கல்களை தடுக்கவே அரசு கொரோனாவுக்கு முந்தைய நேரடித் தேர்வு முறையை இந்த செமஸ்டரில் அமல்படுத்தியிருக்கிறது. ஆஃப்லைனில் தேர்வு எழுதினால் தேர்ச்சியடைய முடியாதோ அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற பயத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வை வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்...  நேரடியாக நடத்தலாமா, ஆன்லைனில் நடத்தலாமா?! - விகடன் சர்வே முடிவுகள்

இது ஒருவகையில் சரிதான். அதே நேரம், கல்லூரிக்கு நேரடியாகச் சென்றுதான் தேர்வுகள் எழுத வேண்டுமென்பதை அரசு ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். இப்படிச் செய்யவில்லையென்பதால், அனைத்துக் கல்லூரிகளையும் திறந்து ஒரு மாதம் வகுப்புகள் எடுத்துவிட்டு, அதன்பிறகு நேரடித் தேர்வு நடத்த வேண்டும். நேரடியாகக் கல்லூரிக்குச் செல்வதும், நேரடித்தேர்வு எழுதுவதும்தான் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் அவர்களுடைய வேலை வாய்ப்புக்கும் நல்லது'' என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

இது தொடர்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கருத்து கேட்டபோது, ``இன்னும் இரு தினங்களில் இது தொடர்பான என்னுடைய கருத்தைத் தெரிவிக்கிறேன்" என்றிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு