Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு – தூத்துக்குடியில் இரவிலும் தொடரும் மக்கள் போராட்டம்

இ.கார்த்திகேயன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு – தூத்துக்குடியில் இரவிலும் தொடரும் மக்கள் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு – தூத்துக்குடியில் இரவிலும் தொடரும் மக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், 12.02.18 அன்று காலை துவங்கிய போராட்டம், போலீஸார் தடுத்தும் இரவு வரை நீடித்து, 13.02.18 அதிகாலையிலும் தொடர்கிறது. நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் நகர மாட்டோம் என்கின்றனர் ஊர்மக்கள்.

12-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 6 மணி வரை போராட்டம் நீடித்த நிலையில், ஊர் மக்களை கலைந்துசெல்லும்படி போலீஸார் கூறினர். 'எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் ஒரு அடி கூட நகர மாட்டோம்' என ஊர்மக்கள் உறுதியாகக் கூற, போலீஸார் அனைவரையும் கைதுசெய்ய முற்பட்டபோது, கலைந்து செல்வதுபோல எழுந்து போராட்டம் நடத்திய சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு அமர்ந்து மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

போராட்டம் வலுத்ததும், சப் கலெக்டர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் விரைந்து வந்து, ஊர்மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 'எங்க குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு வந்து பாருங்க. இத்தனை நாளும் நாங்க படுற கஷ்டம் உங்களுக்குப் புரியும். பகல்லயும், இரவுலயும் இந்த ஆலை வெளியேத்துற நச்சுப்புகையால தோல் நோய் முதல் கருச்சிதைவு, புற்றுநோய் வரை இல்லாத நோய்களே இல்லை. எங்க ஊருக்குப் போயி செத்து மடிஞ்சு இந்தப் பூங்கா பின்புறம் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதைவிட, இங்கேயே செத்துப்போறோம். அரசாங்கத்துக்கு அடக்கச் செலவாவது மிச்சமாகட்டும். தாய், தகப்பன், பிள்ளைகளைப் பிரிஞ்சு போறதைவிட ஒன்னாவே செத்துடுறோம்.

குமரெட்டியாபுரம் ஊர் அழிஞ்சுட்டுன்னு வரலாறு சொல்லட்டும். எங்க ஊரை அழிச்சாவது, மொத்த தூத்துக்குடி மக்களையும் காப்பாத்துவோம். எத்தனை நாள் ஆனாலும் எங்க போராட்டம் தொடரும்' என உரத்த குரலில் பெண்கள் கூறியதும், 'அரசுக்கு உங்களோட கோரிக்கையைத் தெரிவிக்கிறோம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள் அவர்கள்.