Published:Updated:

முதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா?

முதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா?
முதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா?

"இந்தக் கடையில் சுத்தமான மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது" 

"தூய காற்று அடைக்கப்பட்ட கேன்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனம்"

"டெல்லியில் உள்ள இந்தப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்தால், அவர்கள் தரமான காற்றை சுவாசிக்கலாம்"

முதலாவது வாசகம் சென்னையில் உள்ள ஒரு சிற்றுண்டிக் கடையில் பார்த்தது. மீதி இரண்டும் வெவ்வேறு இடங்களில் பார்த்தவை. இந்த மூன்றுமே வெவ்வேறு செய்திகள். ஆனால், சொல்லவரும் விஷயம் ஒன்றுதான்; இனிமேல், காற்றைக் கூட ஏழை மக்கள் இலவசமாக சுவாசிக்க முடியாது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேநீர் கடை அது. ஒருநாள் அதிகாலை நேரம் அங்கே சென்றிருந்தோம். 20 நிமிட இடைவெளிக்குள் இரண்டுபேர் வந்து தண்ணீர் பாட்டில்களைக் கேட்டனர். ஆனால், கடையில் ஸ்டாக் இல்லை. அப்போது அந்தக் கடைக்காரர் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

"கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி முதன்முதல்ல வாட்டர்பாட்டில ஏஜென்ட் கொண்டுவந்து கொடுத்தப்போ அதை வாங்கவே மாட்டோம்னு சொல்லி திருப்பி அனுப்புச்சுட்டோம். கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே போட்டுட்டு போங்கன்னு சொன்னோம். அதுக்குக் காரணம், அப்போ டீ விலைய விடவும் தண்ணி விலை அதிகம். எல்லா கடைகளிலும் சும்மாவே வந்து தண்ணி குடிச்சுட்டு போவாங்க. அப்படியிருக்கும்போது 2 ரூபாய் கொடுத்து டீ வாங்க முடியாதவன், எப்படி அதைவிட விலை அதிகமா இருக்குற தண்ணி பாட்டிலை காசு கொடுத்து வாங்குவான்னு ஏஜென்ட்கிட்ட கேட்டோம். 

சரி... தண்ணி பாக்கெட்டாச்சும் கொடுத்துட்டு போறேன்னு போட்டார். மக்கள் கொஞ்சம் அதை வாங்க ஆரம்பிச்சாங்க. அடுத்து வாட்டர் பாட்டிலும் வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப ஒரு டீ-யோட விலை 10 ரூபாய். தண்ணி பாட்டில் 20 ரூபாய். இப்பவும் டீயை விடவும் தண்ணி விலை அதிகம்தான். ஆனால், மக்கள் இன்னைக்கு டீ இல்லாம கூட இருந்துடுவாங்க. ஆனா, தண்ணி பாட்டில் வாங்காம இருக்க மாட்டாங்க" 

ஒரு தலைமுறை மாற்றத்தை சில நிமிடங்களில் சொற்களால் கடத்திவிட்டார். இதற்கடுத்து அவர் சொன்னது, நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய ஒன்று

"அன்னைக்கு கடைல விக்க தண்ணி பாட்டில் வேண்டாம்ன்னு சொன்னோம். இன்னைக்கு எங்க கடைல குடிக்கவே நாங்க தண்ணிய காசு கொடுத்துதான் வாங்குறோம். உங்களுக்கு பாட்டில்ல விக்குறோம்; நாங்க கேன்ல வாங்குறோம். அவ்வளவுதான் வித்தியாசம்"
இப்படி நாம் எல்லோருமே, எங்கேயோ எப்போதோ தண்ணீரை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். 

இன்று சென்னையில் தண்ணீர் கேன்களைச் சுமந்து செல்லும் தள்ளு வண்டிகளை எல்லா இடங்களிலும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். தண்ணீர் கேன்களை வாங்காத நடுத்தரக் குடும்பங்கள் மிக மிகக்குறைவு. ஏரிகளிலிருந்தும், குளங்களிலிருந்தும் நீர் எடுத்துக்கொண்டிருந்த குடும்பங்கள் இன்று கேன்களில் நீரை வாங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அந்த நீர்நிலைகள் எல்லாம் இன்று எங்கே போயின? நீர்நிலைகளை மற்றவர்கள் ஆக்கிரமித்தபோது நாம் என்ன செய்தோம்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்தால், நாம் குளிர்பான நிறுவனங்களிடமிருந்து தண்ணீரை வாங்குகிறோம் என்பதற்கும் பதில் புரியும். 

இன்று கையேந்தி பவன்களில் கூட, "இங்கு சுத்தமான மினரல் வாட்டர்" பயன்படுத்தப்படுகிறது என்ற பலகைகள் இருக்கின்றன. பெரிய ஹோட்டல்களில் மினரல் வாட்டர் பாட்டில்கள் வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர். அடிப்படைத் தேவையாக மட்டுமே இருந்த தண்ணீர் இன்று ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிளாக மாறிவிட்டது. இதுவரைக்கும் இப்படி தண்ணீருக்கு மட்டுமே பணத்தை வாரி இறைத்துக்கொண்டிருந்த நாம் விரைவில் காற்றுக்கும் பணம் செலவழிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மேலே நாம் பார்த்த இரண்டு வாக்கியங்களும் அதைத்தான் உணர்த்துகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளிவீசின. வழக்கம்போல மக்கள் பொருள்களை அதிகளவில் வாங்கினர். ஆனால், மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஒன்றையும் செய்தனர். அது, அதிகளவில் 'ஏர் பியூரிஃபயர்'களை வாங்கியது. முந்தைய வருடங்களை விடவும் அதிகளவில் ஏர் பியூரிஃபயர்கள் கடந்தாண்டு விற்பனையாயின. இந்த திடீர் விற்பனைக்குக் காரணம், டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு புகையும், மாசும் டெல்லியைச் சூழ்ந்துகொண்டன. அதன்பின்னர் அரசு எடுத்த எந்த நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை. எனவே தங்களை காத்துக்கொள்ள மக்கள் கையில் எடுத்த ஆயுதம்தான் ஏர் பியூரிஃபயர்கள். உடனே பலரும் புதிய ஏர் பியூரிஃபயர்களை வாங்கி வீட்டில் பொருத்தினார்கள். விற்பனையும் அதிகரித்தது. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

இப்படி காற்று மாசு அதிகமாக இருந்த காலங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. நிறைய பேர் விடுப்பு எடுத்தனர். பல பள்ளிகள் குழந்தைகளின் விளையாட்டுப் பயிற்சியை நிறுத்தியது. முழுவதுமாக மூடப்பட்ட வகுப்பறைகளுக்குள்ளாகவே பள்ளிகள் இயங்கின. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக டெல்லியில் இருக்கும் சில தனியார் பள்ளிகள் புதிய முயற்சி ஒன்றையும் எடுத்திருக்கிறது. அதன்படி 'முழுமையாக ஏர் பியூரிஃபயர்கள்' அமைக்கப்பட்ட வளாகமாக தங்கள் பள்ளிகளை மாற்றியிருக்கின்றன. இந்தச் செய்தி சமீபத்தில் வெளியானது. வருங்காலத்தில் இதுபோன்ற செய்திகள் இன்னும் அதிகளவில் வரலாம். தனியார் பள்ளிகள் இதனையே ஒரு விளம்பரமாகவும் முன்னெடுக்கலாம். இப்படிச் செய்வதன் மூலமாக, பெற்றோர்களின் நம்பிக்கையையும் பெறும். சரி...இதில் என்ன சிக்கல்?

பிரச்னையைத் தடுப்பதற்கு பள்ளிகள் எடுத்திருக்கும் சமயோஜித நடவடிக்கை என்று இதனைப் பாராட்டலாம்தான். ஆனால், பிரச்னை இந்தப் பள்ளிகளில் சுத்தமான காற்று கிடைப்பது அல்ல; மீதமிருக்கும் பள்ளிகளுக்குச் சுத்தமான காற்று கிடைக்காதது. இந்தப் புள்ளியில் இருந்துதான் காற்று வணிகமே தொடங்குகிறது. தற்போது ஏர் பியூரிஃபயர்கள், ஆரோக்கியமான பள்ளி கேம்பஸ் எனக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றை வைத்து காசு பார்க்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்பதைத்தான் இதுபோன்ற செய்திகள் காட்டுகின்றன. 

 சுத்தமான காற்றை, ஆக்சிஜனை டின்களில் அடைத்து விற்பனை செய்ய இப்போதே சில நிறுவனங்கள் ஆரம்பித்துவிட்டது. முதன்முதலாக இது போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது வழக்கம்போல கேலியும், கிண்டல்களும் பறந்தன. காற்றையெல்லாம் யார் விலை கொடுத்து வாங்குவார்கள் என்று. ஆனால், இன்று சீனாவில் இந்தக் காற்று டின்களுக்கு மவுசு ஏறிவிட்டது. முதியோர்களும், குழந்தைகளும் காற்று டின்களை வாங்கிக் குவிக்கின்றனர். இதற்கு காரணம், சீனாவில் காற்று மாசுபாடு அதிகரித்ததுதான். இந்தியாவிலும் சோதனை முறையில் காற்று டின்களை விற்க ஆரம்பித்துவிட்டனர்.நிலைமை இப்படியே போனால் பிறகு நம்மால் என்ன செய்யமுடியும்? அவற்றை வாங்குவதைத் தவிர!

காற்று மாசுபாட்டினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கும் தேசத்தில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இந்தப் பிரச்னைக்கு எதிராக அரசு எடுத்த உருப்படியான நடவடிக்கை என ஒன்றைக் கூட நம்மால் சுட்டிக்காட்ட முடியாது. இப்படித்தான் இருக்கின்றன அரசு இயந்திரங்கள். இன்று பணம் இருப்பவர்களால் மட்டுமே சுத்தமான குடிநீரை காசு கொடுத்து வாங்கமுடிகிறது. இதேபோல காற்றும் இனி காசு இருப்பவர்களுக்குத்தானா? சுத்தமான காற்றுக்கும் இனி நாம்தான் செலவு செய்யவேண்டும் எனில் இந்த அரசு மக்களுக்காக என்னதான் செய்யும்? என்று நாம் அதை கேள்வி கேட்கப்போகிறோம்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீருக்காகவும், நீர் நிலைகளின் பாதுகாப்பிற்காகவும் எழுந்த எத்தனையோ குரல்களை நாம் அலட்சியம் செய்தோம். இன்று நாம் அனுபவிக்கிறோம். காற்று விஷயத்திலும் அது தொடரலாமா ?!