Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு - கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு - கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு - கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்களைப் போராட்டம் செய்யத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக்குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு உள்பட 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை, சிப்காட் வளாகத்தில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலை அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தூத்துக்குடியில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய 2 நாள்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிச்சீருடையுடன் தொடர் போராட்டத்தில் ஈடுப்படனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 43 சிறுவர் சிறுமியர், 142 பெண்கள் உட்பட 257 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். 

13-ம் தேதி இரவு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்களைப் போராட்டம் செய்யத் தூண்டியது உட்பட 5 பிரிவுகளின் கீழ்  பேராசிரியைப் பாத்திமாபாபு, வழக்கறிஞர் வேல்ராஜ், மகேஷ், பிரபு, விமல், ஆல்பர்ட், சுர்ஜித், முருகன் மற்றும் துரைப்பாண்டியன் ஆகிய 8 பேர்மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். நீதிபதிகள் குடியிருப்பில், ஜே-3 நீதிபதி ரோஸ் கலா முன் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இரவோடு இரவாக அவர்கள் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஊர்மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது கைதுக்கு மக்கள் சிவில் உரிமைக்கழகமும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பல சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்நிலையில் 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலையாகி குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு வந்த அவர்களை கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். “கைது செய்தாலும் சிறையில் அடைத்தாலும் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை ஓயமாட்டோம். தொடர்ந்து அடுத்தடுத்தகட்ட போராட்டங்களை நடத்த இருக்கிறோம்” என்றனர்.